இரவு- எலீ வீஸல்-
பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மரியன்வீஸல்
தமிழாக்கம்- ரவி.தி. இளங்கோவன்
எலீ வீஸல்:
ருமேனியாவில் சிகெட் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே வதை முகாமுக்கு (concentration camps) கொண்டு செல்லப்பட்டு, பெற்றோரையும், தங்கையையும் அங்கே இழந்தவர். இவருடைய வதைமுகாம் அனுபவங்களே இந்த நூல். இவருடைய The Beggar in Jerusalem பரபரப்பாகப் பேசப்பட்ட நூல்.
1986ல் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவர்.
ரவி.தி. இளங்கோவன்:
திருவல்லிக்கேணி நடைபாதையில் தற்செயலாக வாங்கிய ஆங்கிலப் புத்தகம் தூங்கவிடாது தொந்தரவு செய்ததால் தானே மொழி பெயர்த்ததாகச் சொல்கிறார். முதலில் தமிழினி வெளியீடு, பதினாறு வருடங்கள் கழிந்து எதிர் வெளியீடாக வருகிறது.
தந்தை அடித்துக் கொல்லப்பட்டதை பார்த்ததைப்பற்றி முன்னுரையில்:
” அவரது குரல் மிக அருகிலும், மிகத் தொலைவிலிருந்தும் என்னை எட்டியது. ஆனாலும் நான் அசையவில்லை. என்னால் என்னை எப்போதுமே மன்னிக்க முடியாது. மேலும் என்னுள் இருந்த கீழ்மையான, ஆதிமனித உணர்வுகளை விழித்தெழச்செய்து, என்னையே எனக்கு அன்னியனாக்கிய, என்னை செயலற்றவனாகச் செய்த இந்த உலகத்தை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன். அவரது கடைசி வார்த்தை என் பெயராகத்தான் இருந்தது. ஒரு அழைப்பு. ஆனால் நான் அதற்கு பதில் அளிக்கவில்லை”.
Auschwitz கதைகள் எல்லாமே பயங்கரமானவைகள். உண்மை புனைவை விட விசித்திரமானது என்பதைப் போல நம்புவதற்கு கடினமானவை. ஆனால் பலர் தப்பினர், சிலர் தப்பியோடினர். அவர்கள் மூலம் வரலாறு உலகத்திற்குத் தெரிய வருகிறது.
மரணம் பயமுறுத்துவது. ஆனால் என் குழந்தைகளுக்கு முன் என்னைக் கொன்று விடுங்கள் என்று ஒருவன் கெஞ்சினால் அது எந்தவிதமான சூழ்நிலையாக இருக்கும்!
எண்பது பேருக்கு மேல் அடைக்கப்பட்ட ரயில்பெட்டியில் குடும்பத்தைப் பிரிந்த பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கத்தினால், பரிதாபப்பட வேண்டிய பாதிக்கப்பட்டவர் அந்தப் பெண்ணை பலமாகத் தாக்கி அமைதியாக இருக்கச்சொவ்வது மனிதம் மலிந்துபோனதன் அறிகுறி.
வதை முகாம் என்பது, குறைந்த அளவு அரை ஆள் சாப்பிடும் உணவு, நான்கு ஆட்கள் செய்யும் வேலை. வேலை செய்யாவிடில் பலமாகத் தாக்கப்படுவது. உடல் ஒத்துழைக்காமல் இறுதியில் மரணம் வந்து விடுதலை அளித்துவிடும். சமீபத்தில் வந்த The Tattooist of Auschwitz நாவல், புனைவு என்ற போதும் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டது. ஆர்வமிருப்பவர் வாசிக்கலாம்.
தூக்குத்தண்டனை மற்ற கைதிகளின் முன்னிலையில் நிறைவேற்றப்படுகிறது. தூக்குத்தண்டனை கைதிகள் எவருமே அழுவதில்லை. அவர்களின் கடைசி வார்த்தையாக ஜெர்மனியை சபித்துக் கொண்டே இறக்கிறார்கள்.
நாஜிகளை விட்டுவிடுவோம். விசித்திரப் பிறவிகள். அரை ரொட்டிக்கு ஏராளமானோர் அடித்துக் கொண்டதை வேடிக்கை பார்க்கும் ஜெர்மன் தொழிலாளர்கள் எந்த ரகம். ஆடன் நகரில் தண்ணீரில் நாணயத்தை வீசி எறிந்து பழங்குடிகள் தண்ணீருக்குள் பாய்ந்து, அதைப் போராடிக் கைப்பற்றுவதைப் பார்த்து ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் எந்த ரகம்?
Holocaust நூல்கள் புனைவோ, அபுனைவோ எல்லாமே பயங்கரமானவை. மனித வரலாற்றில் கறை என்று சொல்லப்படும் நிகழ்வுகளை நிகழ்த்தியோர் அதற்குண்டான தண்டனையை அடைந்ததாக வரலாறே இல்லை. எப்போதும் அவர்கள் சொல்வது அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. நாஜி SS அதிகாரிகள் பலர் பொதுமக்களுடன் கலந்து விட்டனர். ஜெர்மனி இளைஞர்கள் எந்தக் குற்றஉணர்வுமில்லாமல் வாழக் கற்றுக்கொண்டார்கள்.
- பிரதிக்கு:
- எதிர் வெளியீடு 99425 11302
- முதல் பதிப்பு அக்டோபர் 2020
- விலை ரூ 230.