சமீபத்தில் கேரளா சென்றிருந்தோம். அதிகாலையில் எழுந்து விட்டேன். நண்பர் சற்று நேரம் கழித்து எழுந்தார். படுக்கை சற்றும் கலையவில்லை. சின்ன சுருக்கம் இல்லாமல் ஒரு நேர்த்தியான ஒழுங்கு. நான் தூக்கத்தில் குப்புற, ஒருக்களித்து, மல்லாந்து என பலவகைகளில் உருண்டு படுத்து காலையில் பார்த்தால் போர்வையும், படுக்கை விரிப்பும் எதிர்திசையில் சுருண்டிருக்கும்.
செய்திகள் முடிந்த உடன் சாப்பாடு என்பார் இன்னொரு நண்பர். காலை ஏழரை மணிக்கு காப்பி மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு என்று எல்லாம் மிகச்சரியான நேரத்தில். பத்து நிமிடம் முன்பு கேட்டால், பத்து நிமிடம் ஆகட்டும் என்பார். ஒருவேளை தவறினால் நேரங்கழித்து சாப்பிட மாட்டார். என்னைப் பொறுத்த வரை அகால நேரத்தில் கூட மகிழ்வுடன் சாப்பிடத் தயார்.
எங்கள் இருவருக்கும் மணமாகவில்லை அப்போது, சித்தூரில் இருந்தோம். நான் ஒரு வீட்டில் இருந்தேன். நண்பர் இன்னொரு வீட்டில் …….. வங்கியில் பணிபுரிபவருடன். திடீரென்று அவர் மாறுதலாகிப் போனார். இவரை வீட்டைக் காலி செய்யச்சொல்லி விட்டார்கள். என் வீட்டில் நான் மட்டும் தான் என்றாலும் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்த்து, சினிமா மற்றும் வெளியே ஒன்றாக சென்று திரும்பவும் ஒரே வீட்டுக்கு வருவது உசிதமில்லை என்று இருவருக்கும் தோன்றியதால் அவருக்கு வீடு பார்க்க தொடங்கினோம்.
பிரம்மச்சாரிகளுக்கு அங்கே வீடு கிடைப்பது கடினம். எனக்கு என் முன்பிருந்தவர் புண்ணியத்தில் கிடைத்தது. எங்களுடன் மதிய உணவு எப்போதாவது சாப்பிடும் மணமான ……… வங்கிக்காரர் அவர். வீட்டுக்காரரிடம் நண்பருக்கு எப்படியோ கெஞ்சி இரண்டாவது மாடி வீட்டை வாங்கிக் கொடுத்தார். இவர்களது இரு வீடுகளுக்கு மட்டும்வெளியில் இருந்து செல்லும்படி தனியாக சின்ன இரும்புக்கதவு. ஒன்பது மணிக்கு பூட்ட வேண்டும். சத்தம் வரக்கூடாது என்று நூறு நிபந்தனைகள். எனவே பெரும்பாலும் நான் அங்கு போவதில்லை. நண்பரின் வீடு அத்தனை ஒழுங்குடன் இருக்கும் என் வீட்டுக்கு எதிர்மாறாக. பேப்பர் மடிப்புக் கலையாமல் தேதி வாரியாக, காலண்டரில் பிசிறில்லாமல் கிழிக்கப்பட்டு, துணிகள் அடுக்கப்படும் விதம், எத்தனை நாள் கழித்து வந்தாலும் ஒரு பொருள் அதே இடத்தில் என்று அசாத்திய நேர்த்தி. ஒரு நாள் மதிய உணவு முடித்து விட்டு தலைவலிப்பதால் வீட்டுக்கு சென்று சற்று ஓய்வு எடுப்பதாக நண்பர் கூறி சென்றார். அன்று முதற்காட்சிக்கு பதிவு செய்த திரைப்படத்திற்கு போவதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் கூறிச் சென்றார். அலுவலகம் முடிந்ததும் வீடு செல்வதற்கு பதிலாக அப்படியே அவரைக் கூட்டிச் செல்லலாம் என்று அவர் வீட்டுக்கு சென்றேன். மணி அடித்ததும் கதவைத் திறக்காமல் ஜன்னலைத் திறந்த நண்பர் அதற்குள் ஐந்தாகி விட்டதா என்றார் பதற்றமாக. அவரது பதற்றம் எனக்கு அதிக பதற்றத்தைத் தந்தது. நான் கீழே காத்திருப்பதாகவும் அவர் தயாராகி வரும்படியும் சொல்லி விட்டு கீழே இறங்கினேன். முதல் மாடியில் …… வங்கிக்காரர் வீட்டின் வெளியே பூட்டப்பட்டிருந்தது. கீழே சென்று சிறிது நேரத்தில் முதல்மாடிக்காரர் வந்து விட்டார். அவருடன் சிறிது நேரம் பேசியபின் காப்பிக்கு அவர் வீட்டுக்கு அழைத்தார். உங்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைக்கிறேன் என்றேன். இருக்காதே என்றவர் மேலே சென்று பால்கனியில் நின்று மனைவி இருக்கிறார் வாருங்கள் என்று அழைத்தார். இல்லை சினிமாவிற்கு நேரமாகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கையில் என் நண்பர் தயாராகி கீழே வந்து விட்டார். அவரது வெள்ளை நிறத்திற்கு பொருத்தமாக கறுப்பு டீ ஷர்ட், ஜீன்ஸ், தலையை நன்கு பின்னிழுத்து வாரி, நகங்கள் மிகச்சரியாக வெட்டப்பட்டு எல்லாவிதத்திலும் ஒரு அசாத்திய ஒழுங்கு.