கலவியின் நிலைகள் மட்டுமன்றி, பிறழ்காமம் குறித்த சிற்பங்களையும் கோவிலில் வடித்த நம் முன்னோரின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? அந்த சிலைகள் வடிக்கப்பட்ட காலத்தில் மேலைநாடுகளில் கூட காமத்தை வெளிப்படையாகப் பேசுவதில்லை. பின்னரே நம்மிடம் பாசாங்கு தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். நாலுசுவருக்குள் என்பது நாகரீகமாக இருந்திருக்கும். தஞ்சை பிரகாஷ் போல் வெகுசிலர் இல்லாதிருந்தால் சரோஜாதேவி புத்தகங்களே Erotic இலக்கியமாக இருந்திருக்கும்! Fifty Shades of Gray தமிழில் எழுதியிருந்தால் அது எவ்வாறு உள்வாங்கிக் கொள்ளப்படும்!
இந்தக்கட்டுரைத் தொகுப்பு காமம் குறித்த புரிதலை விளக்க முயற்சிக்கும் நூல். காமம் யார் கைக்கும் சிக்காத பூதம். ஒருவர் சொல்லி விளங்கப் போவதில்லை. எனினும் நல்ல துணிச்சலும், மிகுந்த நேர்மையும் கொண்ட எழுத்து, தமிழில் அபூர்வமாகக் கிடைக்கும் சரக்கு என்பதால், இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
வாழ்வின் அடிப்படைத் தேவைகள், உணவு, காமம், உடை, இருப்பிடம். உணவு இல்லாத கொடும்பசியில் காமஉணர்வு வர வாய்ப்பில்லை. பின் இரண்டும் முன்னிரண்டை ஒப்பிடுகையில் ஆடம்பரம்.
காதல் இல்லாத காமம் சாத்தியமில்லை என்கிறார்களே, துணை இறந்தபின் தோன்றும் காமஉணர்வுகள் தான் தனித்து இயங்குவதாகச் சொல்வதில்லையா!காமத்தில் பெண்ணுக்கு, இல்லை என்று சொல்லும் உரிமை இல்லை என ஒரு சமூகம் பொதுவாக நம்புகையில் எல்லா சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன.
பெண்கள் அன்பு கொண்டு பின் உறவு கொண்டு உறவுகொள்ளக்கொள்ள நேசம் மிகுதியாகக் காண்கிறார்கள். ஆண்களுக்குஉறவின் பின் நேசம் குறைவது தயாரிப்புக் குறைபாடு.
Dating cultureல் இருந்து நாம் எப்படி வேறுபடுகிறோம்? Dating rape என்ற ஒன்றும் இருக்கிறது இல்லையா? பெண்/ஆண் வாடையையே பார்க்காது வளரும் சமூகம் திருமணத்தின் பின் எவ்வாறு திடீரென முதிர்ச்சி காட்டும்?
கழிவறை இருக்கை என்ற தலைப்பில் உள்ள கட்டுரை மிக முக்கியமானது. ஆண்கள் பெண்களை தங்கள் கழிவைக் கழிக்கும் இருக்கையாக அவசரமாக உபயோகித்துக் கொள்கிறார்கள் என்ற கருத்துக்கு பல உதாரணங்கள் தருகிறார்.
காமத்தில் புரிதல் இல்லாததால் வரும் வக்கிரங்களைப் பற்றிய கட்டுரை. குழந்தைகளிடம் வல்லுறவு என்பது போன்ற வக்கிரங்களைத் தவிர மற்றவை எல்லாம் சம்பந்தப்பட்ட இருவரின் அணுகுமுறையைப் பொறுத்தது. பெண்களின் கண்களைப் பார்த்துப் பேசுதல் ஒரு பயிற்சி. அதை வைத்துக் கண்ணியத்தை எடை போட முடியாது.
திருமணம் தாண்டிய உறவுகள் கட்டுரையில் சொல்லிய காரணங்களையும் தாண்டி, Coercion, momentary weakness என்பது போன்றும் பல காரணங்களால் நடக்கின்றன. எல்லாவற்றையும் விட சமூக ஊடகங்கள் வழங்கும் அதிக சந்தர்ப்பங்கள் முக்கிய காரணி.நம்பிக்கை என்பது எப்போதும் 0% இல்லை 100%. இடையில் ஒரு புள்ளி என்பதே கிடையாது.நட்பென்பதே நம் திருமண உறவுகளில் கிடையாது. நெருங்கிய நண்பர் காதலித்து மணம்புரிந்தாலும் முதலில் பலியாவது நட்பு.திருமணம் என்னும் நிறுவனம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது தெரியவில்லை. அதீத சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்கிறோம் என்பதைத் தாண்டி வேறு சொல்வதற்கில்லை.
மேல்கூறிய கருத்துக்கள் புத்தகத்தை வாசித்தபின் எழுந்தவை. சில ஆசிரியர் கூற்றுடன் முரண்படவும் செய்கின்றன.முப்பத்திரண்டு தலைப்புகள் அடங்கிய கட்டுரைகள். தன் அனுபவம், நண்பர்கள் அனுபவம், விசாரித்துத் தெரிந்து கொண்டவை எல்லாவற்றையும் இணைத்து எழுதியிருக்கிறார்.
உறவே இன்றி ஒற்றுமையாய் பரஸ்பர அன்பு குறையாது பல வருடங்கள் ஒன்றாய்க் கழிக்கும் தம்பதியைப் பார்த்திருக்கிறேன். கணவன் வேலைநிமித்தம் மாதக்கணக்கில் வெளியூர் போனதே காரணம் என்று சொல்லும் பெண்ணையும் பார்த்திருக்கிறேன். இப்படித் தான் வாழ்க்கை என அறுதியிட்டுச் சொல்ல முடியாதது போல், Sexual poverty நிறைந்த நாட்டில் காமம்கூட ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

உடலமைப்பிலும் ஒரு கட்டுரையில் சொல்வது போல் ஆணுக்கு வல்லுறவு கொள்வதற்கு சாதகமான சூழ்நிலை. அதே நேரத்தில் 1:10 என்ற கணித சமன்பாடு பெண்ணுக்கு சாதகமாக இருப்பது போல் ஆணுக்கு சாத்தியமேயில்லை.
ஒரு ஆண் தான் கொண்ட பல உறவுகள் ( அதில் முக்கால்வாசி கற்பனைக் கதைகள்) பற்றி ஒரு இராணுவவீரன் மெடல்கள் பற்றிச் சொல்லும் பெருமையுடன் பேசுவது போல் இங்கே பெரும்பான்மையான பெண்கள் பேசுவதில்லை. சுயசரிதை சாயல் வரும் நூல்களில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையைக் கையாளுகிறார்கள். சுதந்திரமான, தைரியம் வாய்ந்த பெண்களும் குடும்பத்தினருக்கு சங்கடத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, உள்ளடக்கங்களிலும் அதே தைரியத்தைக் கடைபிடித்திருக்கிறார். நிச்சயமாக புத்தகத்திற்கு நிறைய Homework செய்திருக்கவும் வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி நேர்மையான எழுத்து. நிறைய லதாக்கள் தங்கள் கடிவாளங்களைக் கழற்றி எறிந்து எழுத வரட்டும்
பிரதிக்கு:
நோராப் இம்ப்ரிண்ட்ஸ்
97909 19982
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 225