ஆசிரியர் குறிப்பு:
படைப்புத்துறையில் இயங்கி வருபவர். அகராதியியல், பதிப்பியல், மூலபாடவியல் ஆகிய கல்விபுலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் இவரது பலநூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது 2020ல் இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
கடைக்குட்டி:
கடைசிவரியில் சட்டென்று எழுந்து நிற்கும் கதை. குடியும், இயலாமையும் அப்படித்தான் பேச வைக்கும்.
நுங்கு:
ஆடுகளை வைத்து பூனாச்சி நாவல் எழுதியவருக்கு ஆடுகளை வைத்து சிறுகதை எழுதுவது சிரமமா என்ன! கதை முழுக்க ஆடுகள் வந்தாலும் இது ஆடுகள் குறித்த கதையில்லை.
போதும்:
இருவருக்கு சம்மதம் இருப்பினும் காதல் கல்யாணத்தில் முடியவேண்டும் என்ற கட்டாயமில்லை. கடைசிபத்தி, கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னும் வித்தியாசம் தெரியாது போன்றவை நல்ல எழுத்தாளரை சாதாரண எழுத்தாளர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது.
வீராப்பு:
கடைசிவரை வெகு இயல்பாகச் செல்லும் கதை அசாதாரணமாக முடிகிறது.
பொண்டாட்டி:
சாமி வரம் கொடுத்தும்…… தனிமை எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும் என்பதே விதி.
முத்தம்:
வித்தியாசமான கதை. திருப்பரங்குன்றம், அழகர் கோவில் போன்ற இடங்களில் இவர்களுக்கு நாற்பது வருடங்கள் முன்னே இது நடந்திருக்கிறது. எல்லாத் தொழில்களுக்கும் அடிப்படை விதி ஒன்று இருக்கிறது. அது மீறப்படுவதால் வரும் விளைவு கதைமுடிவு. “உதடு இன்னும் ஒட்டிக்கொண்ட மாதிரியே இருக்குது….”
ஒரு சின்ன உளவியலும் இருக்கிறது. தன்இனம் எனும்போது தன்னை அச்சூழ்நிலையில் வைத்து Visualize செய்வதும் நடக்கும்.
ஆட்டம்:
கதையே இல்லாது நல்ல கதை சொல்ல முடியும் என்பதற்கு உதாரணம் இந்தக்கதை.
தொடை:
கும்பலாகச் செல்லும் பெண்களில் காதோரம் ரோஸ் வைத்த பெண்ணை யாரென்றே தெரியாமல் அவள் என் ஆள் என்று சொல்லும் பழக்கம் இன்னும் இருக்கிறதா?
அருவி:
சிறுவயதில் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் கொண்டாட்டம் நடத்தாதவர் இருக்க முடியாது. அசம்பாவிதம் எதுவும் நடந்தால் என்ற சிந்தனையும் கிடையாது, இருந்திருந்தாலும் போயிருப்போம்.
நாய்:
நாய் தன் உயிருக்கு ஆபத்து என்றாலும் எஜமானரை விட்டு ஓடுவதில்லை. நாம் தான் சின்னப் பிரச்சினை என்றாலும் ஓடிவிடுவோம்.
கருவாடு-
சிறுவயதில் எதுவெல்லாம் பெரிய விசயங்களாகத் தோன்றுகிறதோ அதுவே பெரியவரானதும், சிறிய விசயங்களாகிப் போகின்றன. வாழ்க்கை சிறியனவற்றை பெரிதாக, பெரியனவற்றை சிறியதாக சொக்கட்டான் காய்கள் ஒவ்வொரு உருட்டலில் மாறுவது போல் வேடிக்கை காட்டுகிறது.
பந்தயம்:
உறவுகளை Test செய்தால் எத்தனை பேர் தேறுவார்கள்!
பசி & அபிசேகம் & பரிகாரம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகளின் பயணம் நேரெதிர். ஆனால் அவர்கள் இருவரும் தான் சேர்ந்து வாழவேண்டும்.
தொழில்:
தக்கையின் மீது நான்கு கண்கள் கதைக்கு எதிர்திசையில் பயணிக்கும் கதை.
சிரிப்பு:
மதுவில் விழும்நேரம் செயல்கள் முன்பு திட்டமிடாப்பாதையில் செல்வது சகஜம்.
ஆடு:
ஒரு நிகழ்வு. இரண்டு கோணங்கள்.
மாயம்:
பெண் முன்னால் தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொள்ளும் குணம் ஆணுக்கு எந்த வயதிலும் போகாது.
ஒளி:
இறந்தவர்களுக்கு யார்மேல் அதிக பிரியமோ அவர்கள் கனவில் அடிக்கடி வருவார்களாமே உண்மையா!
இருபது கதைகள் கொண்ட தொகுப்பு. எல்லாமே இந்த வருடம் எழுதியவை. மொத்தமாகப் படிக்கையில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள கதைகள் போல் இருக்கிறது. அதனால் தான் முன்னுரையில் இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என்று சொல்லியிருக்கக்கூடும். மா.அரங்கநாதன் கதைகளில் வரும் முத்துக்கருப்பன் போல் இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் முருகேசு. வேறுவேறு களங்களில் வந்தாலும் முருகேசின் உருவம் ஒன்றே.
வழமை போல் விவசாய, நடுத்தர வர்க்கத்தின் கதைகள் இவை. கதைக்கரு என்று இல்லாமல் சின்ன சம்பவங்களை, உணர்வுகளைக் கதையாக்கியிருக்கிறார். சில நல்ல கதைகளும், சில சராசரிக் கதைகளும் கலந்த தொகுப்பு. ஆனால் எல்லாக் கதைகளிலுமே பெருமாள் முருகனின் Touch இருக்கிறது. மூன்று கதைகளைத் தவிர மற்றவை பிரசுரமாகாத கதைகள். சுவாரசியமான வாசிப்பனுபவத்தை வழங்கும் தொகுப்பு. கடைக்குட்டி, முத்தம் போன்ற கதைகளில் இவர் பெயர் இல்லாவிட்டால் கூட இவர் தான் எழுதியது என எளிதாக சொல்ல முடியும்.

பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 96777 78863
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 200.