ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலியில் பிறந்தவர். எழுபதில் எழுத ஆரம்பித்து ஏறக்குறைய நூற்றைம்பது சிறுகதைகள், ஏழு நாவல்கள் (குறுநாவல்கள்) என்று ஐம்பது வருடங்களில் எழுதியது குறைவாகத் தோன்றுகிறது. சமகாலத்தின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். அவரது எல்லாக் கவிதைகளையும் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இந்த நூல்.
வண்ணநிலவனின் எஸ்தரும், கடல்புரத்திலும் படித்து அது குறித்து எவ்வளவு நேரம் பேசியிருப்போம் என்பதை நினைவாற்றல் அதிகமுள்ள தோழர் R P ராஜநாயஹம் தான் சொல்ல வேண்டும். எஸ்தர் புத்தகம் கிடைக்காத நேரம் அது. கடன் வாங்கிப் படித்தோம். அன்னம் நவகவிதை வரிசையில் இவரது மெய்ப்பொருள் என்ற முதல்தொகுப்பு வந்தது.
என்னூர் என்ற தலைப்பில் இப்படி ஆரம்பிக்கும் கவிதை :
“ராஜாபிள்ளை வீட்டு
கண்ணாடி பீரோவுக்கு
பக்கத்தில் பத்மாக்காவின்
சாந்துப்பொட்டு இழிசல்கள்
பாத்திரம் விளக்கும் பவானியக்கா
வீட்டில் அம்மா இல்லாத நேரத்தில்
சொன்ன சொல்லை மறந்திடலாமோ
பாடுவாள்”
கலாப்பிரியாவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்தக்கவிதை ஊருக்குள் பல காட்சிகளை சொல்லிவிட்டு இப்படி முடிகிறது:
“டால்ஸ்டாயின் மரணமும்
ஏ எம் ராஜாவின் மரணமும்
ரயில்வே ஸ்டேஷனில்
நடந்த மாயமென்ன?”
கல்யாண்ஜியின் புகழ் பெற்ற “நான் பழுத்திருந்த போது…….” என்ற அபிதா கவிதையைப் போல இவர் கவிதை:
“நாகரீகத்தின் எல்லையும்
அநாகரீகத்தின் விளிம்பும்
அருகருகே இருக்கின்றன அபிதா
காதலுக்கும் காமத்துக்கும்
இடையே உள்ள மின்னல்கோட்டைத்
தொட்டுத்தொட்டு மனம்
ரணமாகிவிட்டது.
வண்டுகள் மலரை வலம்வருவது
உடலை வளர்க்கவா
உயிரை வளர்க்கவா
விடைதெரிந்தால்
சொல் அபிதா”
எனக்கு மிகவும் பிடித்த இவரது கவிதை இது:
“எதையேனும் சார்ந்திரு
கவித்துவம், தத்துவம், காதல்
இங்கிதம் சங்கிதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல்
உலகம் காணாமல் போய்விடும்.”
மார்க்ஸியத்தில் இருந்து விலகி ஹிந்து தத்துவங்களில் மனம்தோய்ந்த காலத்தின் எச்சங்களாய் சிலவரிகளை அங்குமிங்கும் பார்க்க முடியும்.
” அவரவர் வானம்
அவரவர்க்கே யானாலும்
அடியாமல் பிடியாமல்
வசப்பட வழியில்லை”
“மனவெளியில் அலைந்துருகும்
கருங்காக்கை
முகம் திருப்பிப் பார்த்தாலோ
அகங்காரக் கரைச்சல்”
“உன் தவமியற்றி
ஓயும்
என் காலச் சிறு நிழல்”
இந்தக்கவிதையில் வரும் உபவாசங்களையும், பிணம் எரிப்பதையும், சாம்பல் கரைப்பதையும் என்னவென்று யோசித்துப் பாருங்கள்:
” சொப்பனங்களில் கரைந்து கிடந்தபோது
உன் உபவாசங்களை முகர்ந்தேன்
என் பிணத்தை நானே எரித்தேன்
மயானச் சாம்பலைக்
காலத்துருவேறிய நதியில் கரைத்தேன்
கணவன்- பிள்ளைகளென்று
காலந்தள்ளும் உன்னிடம்
நினைவுகள் வேய்ந்த
குடிசையை விட்டு செல்கிறேன்
பத்திரமாகப் பார்த்துக்கொள்”
படைப்பாளி என்று என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று இவரது கவிதை ஒன்று முடியும். கவிதைகளில் இவர் உயரம் குறைவே. ஆனால் உரைநடைப்புனைவில் இவரது உயரம் மிக அதிகம். இவர் மீது விளம்பரவெளிச்சம் எப்போதும் படர்ந்ததில்லை. துக்ளக் துர்வாசர் போல வாழ்வாதாரத் தவறுகளும் உண்டு. எனினும் நம்காலத்திய மகாகலைஞர்களில் ஒருவர். வண்ணநிலவனைப் படிக்காத நவீனத்தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் ஒரு அவயம் இல்லாதிருக்கும். எஸ்தர், கடல்புரத்தில் நூல்களில் வைத்திருக்கும் நேசத்தை இன்னும் மறக்கவில்லை நெஞ்சம்.
பிரதிக்கு :
சந்தியா பதிப்பகம் 044-24896979
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 70.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s