உச்சை- ம.நவீன்:
ஆசிரியர் குறிப்பு:
ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இதுவரை பேய்ச்சி நாவல் உட்பட இவரது பத்து நூல்கள் வெளியாகியுள்ளன. இது சிறுகதைத் தொகுப்பு.
கழுகு:
இருவருக்குள் நடக்கும் Mind game தான் கதையே. யார் ஜெயிக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஒரு கதை சொல்லட்டுமா என்ற விஜய் சேதுபதியின் நோக்கம் தான் அமிர்தலிங்கத்தின் நோக்கமும். எப்படியானாலும் சிவா ஆறுமாதத்தில் மீண்டும் அங்கே வருவது உறுதி.
உச்சை:
உச்சை கதை போல் பல கதைகள் இங்கிருப்பவரின் கண் திறக்க வரவேண்டும். வெள்ளைக்காரன் நம்மை நாயென்றே அழைத்தான், நாயாகவே மதித்தான். அப்போது துரை என்று சொன்னவர்கள் இங்கே இன்னும் மறவாது சொல்ல ஆசைப்படுகிறார்கள்.
சியர்ஸ்:
உண்மையும் கற்பனையும் கலந்ததே வாழ்க்கை. கற்பனையை உண்மை என்று நினைப்பதும் சில நேரங்களில் ஆறுதலாக முடிகிறது. “உறுதியா சொல்ல முடியாது” என்ற மூன்று வார்த்தை இந்தக்கதையை அழகாக்கி இருக்கிறது.
ராசன்:
திருடுனது தப்பில்லையா என்ற கேள்விக்குப் பதிலே இன்னொரு திருட்டுக்கு வழிவகுக்கிறது. சாமர்த்தியமாய் ஏமாற்றவும் திறமை வேண்டும். அத்தனைக்கும் பிறகும் கடைசியில் தீபன் சொல்வது அதையே நிரூபிக்கிறது.
கன்னி:
தொன்மத்தில் இருந்து கன்னிமார் கதை வாய்வழி சொல்லப்படுகிறது. மோசம் செய்யப்பட்டு இறந்த பெண்கள் கன்னி தெய்வங்கள்! ஏழு கன்னிமாரில் எண்ணிக்கை ஒன்று குறைவதும், பேய்க்கதை கிரைம் கதை ஆவதும் புத்திசாலித்தனமாய் சொல்லப்பட்டிருக்கிறது.
பூனியான்:
கல்வி, பயிற்சி, அறிவு எல்லாமே சில நேரங்களில் உபயோகமில்லாமல் போகிறது. கடவுள் நம்பிக்கையே கூட இது போன்ற ஒரு பயத்தில் வருவது தான். ஒரு வேளை இருந்தால்……
அருண் ரீத்தாவிற்கு மனநலசிகிச்சை அளிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கையில் ரீத்தா அவனுக்கு அதையே செய்திருக்கிறாள்.
ஒலிப்பேழை:
ஒலிப்பேழை வித்தியாசமான கதை.
பாடகி/மந்திரவாதியின் இசை பட்சிகள் மட்டும் கேட்கும் சங்கீதமாகிறது. கிளிகள் மட்டும் கேட்டுணரும் இசை அமானுஷ்ய சூழலை உருவாக்குகிறது.
பட்சி:
பட்சி ஒரு நம்பிக்கைத் துரோகம். இன்னொரு வகையில் இட்டஅடி நோக எடுத்த அடி கொப்புளிக்க என்று அமராவதியைப் பாட கலைமகள் நடந்து போனதைப் போல மஞ்சள் பட்சி வந்துவிடுகிறது. இன்னொரு வகையில் கதைசொல்லியின் கையறுநிலை. எல்லாம் சேர்ந்தது தான் இந்தக்கதை.
டிராகன்:
ஜப்பானியர் சயாம் ரயில்பாதைக்கு ஆட்களைப் பிடித்துச்சென்ற காவத்திய கதை. சமூக, ஒழுக்க விதிகள் என எல்லாமே பசியின் முன் தோற்கும். போலியோவால் பாதிக்கப்பட்ட மகனுக்கும் அம்மாவுக்கும் கடைசியில் ஒரு புரிதல் கிடைக்கிறது.
ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பு இது. மாயம், அமானுஷ்யம் போலத் தோற்றமளிக்கும் எல்லாக் கதைகளிலும் கடைசியில் Realityயே தங்கிவிடுகிறது. நிறையக்கதைகளில் இருவருக்கு இடையே நடைபெறும் Mind game கதையாகி இருக்கிறது. சில கதைகள் பேய்ச்சியின் தொடர்ச்சி போல் காட்சியளிக்கின்றன. ஒரு Subtle humour அநேககதைகளில் இழையோடுகிறது.
தொன்மத்தைத் தொட்டுக் கொண்டே நவீன கதைசொல்லல் சாத்தியம் என்பதை நவீன் இந்த சிறுகதைத் தொகுப்பில் நிரூபித்திருக்கிறார். எல்லாக் கதைகளிலுமே சொல்லிய விதத்தில் ஒரு புத்திசாலித்தனம் தெரிகிறது. ஒருசில வரிகளில் சத்தமில்லாது கதை ஒளிந்திருக்கும் யுத்தியைப் பயன்படுத்துகிறார். அதே போல் கதைக்குள் கதையாக ஒரு கதை வருவதும் ஆனால் அது நம்பத்தகுந்ததா இல்லையா என்ற சந்தேகத்துடன் Open ending ஆக இருப்பதும் கதைகளை அழகாக்குகின்றன. நல்ல தொகுப்பு. சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும் கதைகள்.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 220