சாலாம்புரி- அ. வெண்ணிலா:
ஆசிரியர் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்தவர் இவர். முதுகலை உளவியல், கணிதம் படித்தவர். கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார். நாவல், சிறுகதைகள்,கவிதைகள், ஆய்வுநூல்கள் என பலதளங்களிலும் இயங்கிவரும் இவருடைய இரண்டாவது நாவல் இது.
வெண்ணிலாவின் மொழி அழகு. தன் கண்முன் விரிந்த சரித்திரத்தை இவர் எழுதலாமே என்று சிலநேரம் நான் நினைத்ததுண்டு. இந்த நாவல் அது தான். எத்தனை உயிரோட்டம் இதில்! இவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாய் என்றும் இருக்கப்போகும் நாவலிது.
திருநெல்வேலிப் பக்கத்தில் சீதனவெள்ளாட்டி என்பார்கள். அது போல் மணப்பெண்ணுடன் சேர்ந்து செல்லும் கிழவி, அங்கிருப்பவருடன் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லித் தருவதுடன், சாந்தி முகூர்த்தம் திருப்தியாக நடந்ததா என்பதையும் கண்டுகொள்கிறாள்.
நடராஜனின் பத்தொன்பதாம் வயதில் அவன் அப்பா அகாலமரணம் அடைந்ததும், அவனது அம்மா,மனைவி அடுத்துப்பிறந்த நாலுகுழந்தைகள் என ஆறு ஜீவன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு விழுகிறது. அத்துடன் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த திராவிடர் முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிறது. கட்சியை வளர்க்கும் பொறுப்பும் இருக்கிறது. நல்லூர் சிறுநகரம். நடராஜனின் குடும்பம் வழியே நல்லூரின் கதையும்
கண்முன்னே விரிகிறது.
ஊர்குளத்தில் தண்ணீர் எடுக்க விடவில்லை என்று, இரவோடு இரவாக குளத்தில் துணிதுவைத்து, மலம்கழித்து மாசுபடுத்துகிறார்கள், கவுண்டர் பெண்ணின் ரவிக்கையை இழுத்து ஊர் முன்னால் அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் ஒருவன், உடையவன் இல்லைன்னா ஒருமுழம் கட்டை என்பது போல் பதினாறுவயதுப் பெண்ணை வேறுவழியில்லாமல் மூன்றாம் தாரமாய்க் கட்டிவைக்கிறார்கள், பேய் ஓட்டுகிறேன் என்று பெண்ணைக் கொல்கிறார்கள். ஐம்பதுகளில் நடக்கும் அம்மையப்ப நல்லூரின் கதைதான் இந்த நாவல்.
பிரதான கதாபாத்திரம் கட்சியில் இருப்பதால் தமிழக அரசியலும் கதையோடு கூடவே பயணிக்கின்றது. நீதிக்கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்……. ( பெரியாரின் கண்ணீர்துளிகள் வசனத்தைக்கூட விடவில்லை வெண்ணிலா) ஐம்பதுகளின் தமிழக அரசியல் இப்போது படிப்பதற்கு கொலைகாரன் யாரென்று தெரிந்த துப்பறியும் நாவலைப் படிப்பது போல் இருக்கிறது.
கீதையில் மட்டும் கடமையைச்செய் பலனை எதிர்பாராதே என்று சொல்லவில்லை, கட்சிகளும் அதையே சொல்லித் தருகின்றன.
வாழ்க்கை என்பதே கூட்டு மனநிலை என்று நம்பிய மனிதர்களின் காலகட்டத்திய கதை இது என்கிறார் முன்னுரையில். மணமாகி குழந்தைகள் வளர்ந்ததும், பெற்றவர்களே அந்நியர் எனத் தோன்றும் மனநிலையில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏகாம்பரி பாட்டி போல் வாழ்க்கையில் சுகமே அனுபவிக்காமல் எல்லோரது வீட்டுத் துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்ளும் சமூகமாய்த் தான் முன்பு இருந்தோம். ஊர்குழந்தைகளுக்கும் சுடசுடக் கிண்ணத்தில் சாதம் வைக்கும்
கன்னியம்மாளிடம் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் மனிதம் இருந்தது. இலட்சியவாதிகள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர் மனைவியர் அதிக வாதையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதே பொதுவிதி. நினைவில் உள்ளவர்களை எழுத்தில் கொண்டு வந்தால் அவர்கள் வாசகர்கள் எல்லோருக்கும் எப்போதுமே தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். ரத்தமும் சதையுமாய் மனிதர்கள் இதில் நடமாடுகிறார்கள். நானூற்றைம்பது பக்கங்கள் இந்த நாவலுக்கு குறைவு என்றே தோன்றுகிறது.
பிரதிக்கு :
அகநி வெளியீடு 94443 60421
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 400.