திருமதி பெரேரா- இஸுரு சாமர சோமவீர- தமிழில் எம்.ரிஷான் ஷெரிப்:
இஸுரு சாமர சோமவீர:
இலங்கையைச் சேர்ந்த நவீன தலைமுறை சிங்கள எழுத்தாளர். இலங்கை சுகாதார அமைச்சில் பணிபுரிகிறார். இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. தனித்தனியாக கவிதைத் தொகுப்புக்கு, சிறுகதைத் தொகுப்புக்கு இலங்கை கொடகே சாகித்யவிருது பெற்றிருக்கிறார். இது இவரது சிறுகதைத் தொகுப்பின் சமீபத்திய தமிழ்மொழிபெயர்ப்பு.
எம்.ரிஷான் ஷெரிப்:
இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழுக்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளை செய்து வருபவர். இவர் எழுதிய நூல்கள் தவிர்த்து, ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு, ஐந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகள், நான்கு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நாவல்கள் வந்துள்ளன. இலங்கை சாகித்ய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி விருது பெற்றவர்.
மிகவும் எதிர்பார்த்து புத்தகம் வர ஆவலோடு நான் காத்திருந்த சிங்கள எழுத்தாளர்களில் இருவர் முக்கியமானவர். ஒருவர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி, மற்றொருவர் இவர்.
கிராஞ்சி:
கலைக்கு மொழி கிடையாது என்பது மட்டுமல்ல அடுத்தவரின் வேதனை என்ன என்பதை சரியாக வெளிப்படுத்தவும் முடியும். ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் ஹிட்லர் பற்றிய பேச்சைத் தொடர விரும்புவதேயில்லை. அவர்களை அறியாது வெளிப்படும் குற்ற உணர்வு. ஆங்கிலேயர்களுக்கோ, அமெரிக்கர்களுக்கோ அது அறவே கிடையாது.
சிங்களர் ஒருவரின் பார்வையில் நசிந்துபோன தமிழ் குடும்பம், அவர்களுக்கு எங்களைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்பதைப் போல் உணர்வது, தமிழர் எல்லோருமே புலிகள் என்று நினைப்பது, சிங்களர் என்றால் அனுமதி வாங்கா விட்டாலும் பெரிய பிரச்சினை எதுவும் வராது என்கிற நிலை, வேட்டுப் போட்டதில் பெருமை என எல்லாமே நுட்பமாகப் பதிவாகியிருக்கின்றன. கடைசி வரியுடன் உடன்பட முடியாது. அடிவாங்கி புரையோடிய புண்ணின் வலியும், அடித்தோம் என்ற குற்ற உணர்வில் எழும் வலியும் எப்படி ஒன்றாக முடியும்?
திருமதி பெரேரா:
திருமணம் என்னும் நிறுவனத்தில் பொறியில் அகப்பட்ட எலியாய் மாட்டிக்கொண்டு சுயம் இழந்த பெண்ணின் கதை. வீட்டில் வளரும் பூனைக்கும் இந்தப் பெண்ணுக்குமுள்ள ஒரே வித்தியாசம், பூனை பசி என்றால் சத்தமிடும்.
Fantasize செய்வதில் தெரிந்த ஆணை வைத்து செய்யலாம். பிரபலங்களை வைத்தும் செய்யலாம். ஆனால் இது வித்தியாசமான Fantasizing. அந்த நேரத்தில் தான் திருமதி பெரேரா தன் வாழ்நாளிலேயே மகிழ்ச்சியாக இருந்த தருணமாக இருக்கும்.
எனது மீன்:
ஒரு சிறுகதையில் பல விசயங்களைக் கொண்டுவந்து சிறுகதை வடிவம் குலையாது இருப்பது மட்டுமல்ல அதனை அழகாக்குவதும் எளிதல்ல. முதல் பகுதி போரின் கொடூரங்கள். அடுத்து அண்டிநிற்கும் வாழ்க்கை. மூன்று சிறுவனின் ஆசையும் அதற்கு அவன் செய்து கொள்ளும் சமரசங்களும், நான்கு சிறுவனின் நினைவுச்சின்னம். இந்த நான்கும் சிறுவனின் கோணத்தில் எவ்வளவு அழகாக சேர்ந்து வருகிறது என்பதே கதை.
நீரணங்குத்தீரம்:
ஒருபாலின உறவில் சமூகச் சிக்கல்களையும், குடும்பச் சிக்கல்களையும் சொல்லும் கதை.
Stray sexல் ஈடுபடுபவர்கள் ஒருநாளும் ஒரு பெண்ணை மணமுடித்துத் திருப்தியான தாம்பத்யவாழ்க்கை வாழமுடியாது. இவர்களது அகபுற பிரச்சினைகள் நன்றாக வந்திருக்கிறது இந்தக் கதையில்.
அன்புள்ள நிமாலிக்கு:
ஒரு ஒப்புதல் வாக்குமூலக் கடிதமே கதை. கணவன் மனைவிக்கு எழுதுவது. இந்தக் கதையின் சிறப்பம்சமே, குழந்தைப் பருவத்திலிருந்து மற்றவர்களிடம் இருந்து மாறுபட்ட ஒருவன், யாரும் மனைவியிடம் சொல்லத் தயங்கும் உணர்வுகளைச் சொல்வது.
இறப்பர்:
காற்றில் கரைந்து போன பால்யத்தின் தீஞ்சுவை நினைவுகளை மீட்டெடுக்கும் யத்தனமாய் ரப்பர் தோட்டம் போட விளைபவனின் கதை. பிரத்யேக அனுபவங்களின் தூண்டலாய் நாம் செய்யும் காரியங்கள் மற்றவர்க்கு பைத்தியக்காரத்தனமாய் இருப்பது வியப்பில்லை. சிறிய கதையில் குடும்பத்து உறுப்பினரது தெளிவான சித்திரங்கள் மட்டுமன்றி, போரின் கொடூரங்களும் இடையே வந்து போவது கூடுதல் சிறப்பு.
நீலப்பூ சட்டை:
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா என்ற கண்ணதாசனின் வரி நினைவுக்கு வந்தது. வயதாக, அனுபவம் சேர பெண்கள் மாறிவிடுகிறார்கள். ஆண்கள் தான் மாறுவதேயில்லை.
பெண்கள், ஆண்கள், பூக்கள், பழங்கள்:
Beautiful story. பார்வையாளன் கோணத்திலிருந்து சொல்லும் கதையில் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு முழுதும் புரியும் படி சொல்ல முடியுமா?
சாந்த:
எல்லோருள்ளும் இருக்கும் இன்னொருவன் பற்றிய கதை. புலிகள் சிங்களக்குடும்பத்தில் குழந்தைகளையும் சேர்த்து எல்லோரையும் வெட்டிக் கொன்றதாய் ஒரு வரி வருகிறது. வென்றவர் சொல்வதே வரலாறா?
அது:
அது ஒரு Extra terrestrial. எங்கெல்லாம் அடுத்தவர் பார்க்கக்கூடாது என்று காரியங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் வந்து அது சம்பந்தப்பட்டவரைத் தப்பிக்க வைத்து விடுகிறது. அதைப் பார்த்தால் சொல்லுங்கள்.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. அநேகமாக எல்லாக் கதைகளுமே
அதிகம் பேர் தொட்டிராத கதைகள்.
இதில் எது சிறந்த கதை என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை சிரமம். எல்லாமே அகஉணர்வின் அடியாழத்திற்கு சென்று எடுத்தவற்றை, கடைவிரிக்கிறேன் பார் என்ற தொனி சிறிதும் இல்லாமல் போகிற போக்கில் கதைசொல்லும் யுத்தியில் புனையப்பட்ட கதைகள். அதே போல் பல வேறுபட்ட விசயங்களைக் கதையில் சொல்லி அதை மையஇழையுடன் சம்பந்தப்படுத்துவதும் இவருக்கு எளிதாக இருக்கிறது. இவருக்கு புதுக்கதைக் கருவிற்கும், களத்திற்கும் எப்போதுமே பஞ்சமிருக்காது என்று தோன்றுகிறது. நீலச்சட்டையை அவள் எதற்கு வாங்குகிறாள் ஆனால் கடைசியில் நடந்தது என்ன யோசித்துப் பாருங்கள். பெண்கள், ஆண்கள்…. கதை ஒரு தேர்ந்த கதைசொல்லி சொல்லும் கதை.
மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே ஒரு கட்டத்தைத் தாண்டிவிடுவதால் அது ஒருநாளும் Blind date ஆக இருக்க முடியாது. ஏனென்றால் ஒருவர் ஏற்கனவே படித்துப் பிடித்து அதை மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ரிஷானின் மொழிபெயர்ப்பும் அவரது தேர்வுகளும் ஏற்கனவே Benchmarkஐ ஏற்படுத்தி விட்டன. முன்னுரையில் இவரது சிங்களம் படிக்கக் கடினம் என்பார்கள் ஆனால் இதை மொழிபெயர்க்க எனக்குச் சிக்கல் இல்லை என்கிறார். ஆங்கிலம் பேசத்தெரியாவிட்டாலும் இவர் சரியாகப் பேசவில்லை என்று கண்டுபிடிப்பது போல் சிங்களம் தெரியாவிட்டாலும் உங்கள் சரளத்தை வைத்தே சிரமம் ஏதுமில்லை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்
பிரதிக்கு:
விற்பனை:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
டிஸ்கவரி புக்பேலஸ் 87545 07070
ஆதிரை வெளியீடு
முதல்பதிப்பு டிசம்பர் 2020/ ஜனவரி 2021
விலை. ரூ 140