தேனொடு மீன் – இசை:
ஆசிரியர் குறிப்பு:
கோயம்பத்தூரில் வசிக்கிறார். பொது சுகாதாரத்துறையில் பணி. இதுவரை இவரது ஏழு கவிதைத்தொகுப்புகள், நான்கு கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இது இவரது ஐந்தாவது கட்டுரை நூல்.
காஹா கத்தசஈ என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 251 பாடல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சங்கப்பாடல்களின் சாயல் பெரும்பானவற்றில். நிலமும், மொழியும் வேறானாலும் எப்போதும் பெண்கள். பொ.ஆ 200 க்கும் 450க்கும் இடையில் எழுதப்பட்டவை இவை. இந்தப் பாடலைக் கவனியுங்கள்.
“மாமி
ஒரு தாமரைக்கும் சேதமில்லை
ஒரு வாத்தும் அஞ்சிப் பறக்கவில்லை
ஆனால்
ஒரு மேகத்தைப் பின்னாலிருந்து
தள்ளியிருக்கிறார்கள்
ஊர்க்குளத்தில்”
இதில் மேகத்தையும் ஊர்குளத்தையும் அதே பொருளில் எடுத்துக் கொள்பவரை, லிப்டில் போகையில் மின்சாரம் நிற்க சாபமிடுகிறேன்.
இந்தப் பாடல் மீறலின் அழகியல். செழித்து வளர்ந்த பருத்திக்காடு காதலருக்கு அடைக்கலம் தந்த வேடந்தாங்கல். ஆனால் இன்று:
” சோரம் போகிற மனைவி பருத்திக்
காட்டை உழும் முதல்நாளில்
கலப்பைக்குத் திலகமிடுகையில்
நடுங்குகிறது அவள் கை
வேட்கை மீதூர”
நீரில் இன்னொரு ஆடவன் நிழலைப் பார்த்ததால் மகனை விட்டு தாயைக் கொல்லச் செய்த கதைகளைச் சொல்லி பயமுறுத்தியே எங்களை வளர்த்தீர்களே!
சேலம் பாபுவின் நினைவஞ்சலி அடுத்த கட்டுரை. பாபுவின் பிரபலமான கவிதை இது:
சற்று முன்
இறந்தவனின்
சட்டைப்பையில்
செல்போன்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
கையில் எடுத்த
காவலர்
“சார் யாரோ
அம்முன்னு கால் பண்றாங்க”
என்கிறார்
ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து
மூடுகின்றன.”
சொப்ன சஞ்சாரம் சுயசரிதை சாயலில். தேடித்தேடிக் கிடைப்பது இல்லை கிடைக்காததன் ஆனந்தத்தைச் சொல்லும் கட்டுரை. எவ்வளவு பிடித்த பண்டமெனினும் தினமும் காலையில் ஏழுமணிக்குத் தவறாது சாப்பிட வைத்தால் எத்தனை நாள் மதுரமாகும்!
அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரை இதுவரை அவரைப் படிக்காதவர்களை மலர்ச்சரத்தில் கட்டி இழுத்துக் கூட்டிவரும் முயற்சி.
பதினான்கு கட்டுரைகளும் இரண்டு நேர்காணலும் அடங்கிய நூல். இசை மரபிலக்கியத்தில் தீரா ஈடுபாடு கொண்டவர். ஷேக்ஸ்பியரை ஆழ்ந்து படித்தவர்களின் ஆங்கிலம் போல் மரபிலக்கியம் படித்தவரின் தமிழ் எப்படியாகிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
கம்பராமாயணம், மிஷ்கின், பெருமாள்முருகன் என்ற கலவையான கட்டுரைகள் இருந்தாலும் கவிதைகளே முன்னுரிமை பெற்றிருக்கின்றன. நாசமாய்ப்போன மலர், தேனொடு மீன், அபி கவிதைகள் என்று முழுக்கவே கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்கு கடலை சாப்பிட்டு முடித்து சாப்பிடும் வெல்லத்துண்டு போல் தனிச்சுவை. இவரது கவிதைகளில் வருவது போலவே உரைநடையிலும் பகடி இயல்பாக வருகிறது.
கதைகளைப் படிப்பவர் எல்லோரும் கதைகளைப் புரிந்து கொள்வார்கள். வார்த்தைகள் தாண்டிய அர்த்தத்தை நோக்கி பயணம் செய்யும் வாசகர் குறைவு. அதனாலேயே தி.ஜா, அசோகமித்ரன் போன்றவர்கள் முழுமையாகப் படிக்கப்பட்டதில்லை. முத்துலிங்கம் கதை ஒன்றுக்கான இவரது கட்டுரை, எதைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதைக்கூறும் வழிகாட்டி. எவ்வளவு வேகமாகப் படித்தாலும் சில வார்த்தைகள்/வரிகள் கண்ணைக் கொக்கிபோட்டு இழுப்பது ஒரு பயிற்சி.
இசையிடம் இன்னொரு சிறப்பு, பிராகிருத மொழிக்கவிதைகள் சொல்கையிலேயே கம்பராமாயணம், தனிப்பாடல் திரட்டு, காமத்துப்பால், சங்கப்பாடல்கள் என தொடர்பும் முரணும் தொடர்ந்து வந்து போகின்றன. புத்தகத்தின் நுழைவாயிலில் இருக்கும் முதல் கட்டுரையைப் போல சிறந்த கட்டுரையைப் படித்து வெகுநாட்களாகின்றன.
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 96777-78863.
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 125