பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள் – ஆனந்தி ராமகிருஷ்ணன்:

ஆசிரியர் குறிப்பு:

கணிப்பொறி அறிவியலில் இளங்கலையும் சமூகவியலில் முதுகலையும் பயின்றவர். மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

முன்னுரையில் இவர்:

” உணர்தலின் தேசத்தில் உணர்த்துதல் பிழை… காலக்கோடுகளின் கணக்கில் எழுதாமல் இருப்பது பெரும் குறை…..
அபரிதம் விடுபட சிக்காத சொல்லுக்குள் எல்லாம் காத்திருத்தல் பதின்நிலை….. பிரபஞ்சத்தின் ரகசியங்களுக்குள் நடப்பவை அத்தனையும் காலயந்திரத்தின் நிறை…..”

ஒவ்வொருவர் கவிதைக்கும் தனிமொழி. அந்த மொழியைப் புரிந்து கொள்கையில் கவிதையின் கதவு திறக்கிறது. புரிதல் இல்லையெனில் அது சொற்களின் சேர்க்கையாய் முடிந்து விடுகிறது. Sylvia Plath ன் Daddy கவிதை புரிந்தவர்களுக்கு அது எழுப்பும் உணர்வலைகளே வேறு.

ஞாபகங்கள் என்னும் இவர் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது:

” புகைப்படம் சுவரில் ஞாபகமாய்
படிந்து கிடக்கிறது
யாரும் கவனிக்கவில்லை
அதன் இருப்பை
பல ஞாபகங்களை முன்னெடுத்துச்செல்லும்
அதன் யோசனைக்கு
அகலிகை பாஷை”

உண்மையில் புகைப்படம் இருக்கிறதா என்ற கேள்வி வருகையில் கவிதை அனுபவமாய் உங்களுக்குள் புக ஆரம்பிக்கிறது.

அமுதயட்சி என்ற வார்த்தைக் கோர்வையே வித்தியாசம். யட்சியில் இருவகை என்பதனால் இருக்கலாம்.
நானென்றால் அது நானும் அவனும்

” அத்துமீறும் அன்பின்
அத்தியாயங்களில்
திசையெங்கும் அமுதயட்சி
உன் ஒரு பார்வைக்கும்
இன்னொரு பார்வைக்கும்
இடையிலான என்
நேசத்தின் இளைப்பாறல்கள்
செல்லாத ஞாபகங்களைச்
சொல்லாமல் தொலைத்தபின்
நிறைவோடு,
தொடர்பற்று கிடைப்பதெல்லாம்
நேர்நிலை விசித்திரம்
கண்கொண்ட தூரம்வரை
உன் காட்சிப்பிழைகள்
இனி மெல்லச்சாகும் வரம்
ஒன்று கிடைக்கப்பெறலாம்
வாழ்வின் நிகழ்தகவுகள்
மொத்தமாய் உன்
தூரம் வரை தான்”

நினைவுகளால் வரைந்த சித்திரம் இது:

” மொழியற்ற குரலை
நடுநிசியில் பொருத்தும் யுத்திகளில்
சற்று அவரவர் கண்களும்
யோசித்துப்பின் மறந்ததெல்லாம்
நினைவுகளின் குட்டிக்கதைகள்
கரம்பற்றும் விரலிடுக்குகளில்
சாத்திரத்திமிரின்
சலனமற்ற சித்திரங்கள்”

நேசத்தின் மொழியாய் சில கவிதைகள். அலைக்கழிக்கப்படும் மனதின் வலியைச் சொல்லும் சில கவிதைகள். சகஉயிருக்கு மதிப்பின்றி தோட்டாக்களால் சிதறிவிழும் உடல்களுக்குச் சில கவிதைகள். சொல்லிய சொல்லுக்கும் சொல்லாத சொல்லுக்கும் புது அர்த்தம் காணப்புறப்படும் சில கவிதைகள்.

தனிமை, காத்திருப்பு, நேசம், அர்ப்பணிப்பு முதலியன திரும்பத்திரும்ப வேறுவேறு சொற்களைப் பொருத்திச் சொல்லப் படுகிறது. சபிக்கப்பட்ட நேர்த்தி என்பது போல் strange pairing of words இவர் கவிதைகளில் அடிக்கடி வருகின்றன. அதே போல் எல்லா உணர்வுகளைச் சொல்வதிலும் ஒரு Casual tone இருக்கிறது. அதுவே அதன் அழுத்தத்தைக் கூட்டுவதாகவும் இருக்கிறது.

பிரதிக்கு:

வாசகசாலை 9942633833
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ 90.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s