மிளகு – சந்திரா தங்கராஜ்:
ஆசிரியர் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பிறந்தவர். பத்திரிகையாளர். சினிமா இயக்குனர். மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஏற்கனவே வெளி வந்துள்ளன. இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு.
மேற்குத்தொடர்ச்சி மலையே இந்தக் கவிதைகளின் நாயகி. டீசல் வாடையடிக்கும் தார் ரோடுகளும், மூச்சை முட்டவைக்க நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களும், குறுவாளை கச்சையில் மறைத்த மனிதர்களும் இழந்ததன் வலியைக் கூட்டுகிறார்கள். பாரி மகள்களின் சோகம் போல் அன்றிருந்த எதுவும் இன்றில்லை.
பாட்டியின் மரணத்தைச் சொல்லும் கவிதை இறப்பிற்கு முன் தெரிந்த சமிக்ஞைகளைச் சொல்லிச் சென்று
அமானுஷ்யத்தில் முடிகிறது
” பனிநீர்உதிர நடுங்கும் தண்டங்கீரையாய்
நொடிந்துகிடந்த அவள் உடல் முன்பெல்லாம் மலைக்குளிரைக் குடித்துக் கிடக்கும்
கொட்டும் மழையை மந்தரித்து
ஊதிவிடும்
கைக்கடங்காத அணங்கவள்
நேற்றிரவு கனவில் மறையும்
விளக்குகளைக் கண்டவள்
மரணத்தின் தனிப்பாடலை
அடைக்கலாங்குருவி
பாடுகிறது என்றாள்
காடெங்கும் துயரத்தின் பாவு கொடி…..”
அத்தனை எளிதல்ல என்னோடு வாழ்வது. கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது.
” அத்தனை எளிதல்ல
ஒரு மலையைப்பிடுங்கி
உன்வீட்டுக்குள் வைத்துக்கொள்வது
மலைக்குப்பின்னே
சூரியன் பிரகாசிப்பதை
தூர அமர்ந்து பார்.’
நீயும் நானும் சேர்ந்திருந்ததுமில்லை என்றும் பிரிந்திருந்ததுமில்லை. நினைவில் ஏறிப்போகும் நெடுந்தூரப் பாதையில் வேகத்தடைகள் இருப்பதுமில்லை.
“நீயறியா என் சிரிப்பு
மயானத்தில் பூத்த ஒற்றைப்பூ
நீயறியா என் கண்ணீர்
காதலின் தேன்சுவை
நீயறியா என் காதல் கருப்பசாமிக்கு வைக்கும் வெள்ளை எருக்கு
நீயறியா என் காமம்
ஆற்றில் கரையும் மண்”
மரணத்தின் கரங்களை இறுகப்பிடித்து அழைத்துச் செல்லக் காத்திருக்கும் கவிதைகளில் ஒன்று:
“மரணம் ஒரு கனமான அமைதி தான்
என்னதான் செய்யமுடியும் அதற்கு
பள்ளத்தாக்கில் காற்று வீசுகிறதா
என்று எட்டிப்பார்த்து விட்டு
ஒருதுளிப்பாலை அருந்தக்கொடுங்கள்
கடைசியில் எனக்கு கொஞ்சம்
வேர்க்காமல் இருக்க வேண்டும்”
அழகை ஆகுதியாக்கினேன் அஸ்வமேதயாகம் நடத்தலாம் வா:
“யுதிர்காலத்தின் காட்டிசையைப்போல்
சரசரத்து உட்புகுகிறாய்
அழகிய இலை நடனம்
நெகிழ்ந்யுதிர்கிறது துடியிடை
அள்ளிச்சேர்க்க முடியாமல்
நால்திசையும் சிதறுகிறது தீயின்பம்
நிதானமாகப்பருக
ஒருமுறையேனும் தலக்குப்பற
விழவேண்டும்’
குடும்பப் புகைப்படத்தில் வெளிர்நீலப் புடவையில் அழகாக இருக்கும் அதே அம்மா தான் இதுவும்:
” ஒற்றைத் தலைவலியோடு
நெற்கட்டுக்களை சுமக்கும் அம்மா
ஒருத்தியாய் மூனு ஏக்கர்
நிலத்தில் களையெடுப்பாள்
ஒரு மத்தியானம் நாங்கள்
தட்டாமாலை சுற்றியதற்கு
அவள்பருத்திக்காட்டில்
கிறுகிறுத்து விழுந்தாள்”
குறிஞ்சித்தினையை மூன்று பகுதிகளில் கவிதைகளாக எழுதியிருக்கிறார். காமத்தைச் சொல்வதாகட்டும், பால்யத்தைச் சொல்வதாகட்டும், மலைநிலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்வதாகட்டும், அடைத்த மடையைத் திறந்தவுடன் பாயும் முதல்நீரின் பாய்ச்சல் வார்த்தைகளில் இருக்கிறது. பால்யத்தின் கரடி முட்டும் மலைவீட்டிலிருந்து நிரந்தரமாய் பிரிந்ததை, கார்கள் முட்டும் நகரச்சாலைகளில் நினைத்துப் பார்ப்பது கூட சர்ரியல் காட்சி தான்.
கசப்பை, ஒழுங்கின்மையை, சோகத்தை, விரக்தியைக்கூட அழகாக ரசிக்கத்தக்க வகையில் வார்த்தைகளைச்சேகரம் செய்து கவிதைகளாக்கியிருகிறார்.
” ஒடிசலான பெண்ணின்
இடுப்பைப் போன்று
சுருங்கிவிட்ட வாழ்வை
கொலை செய்ய முடியாமல்
சர்க்கரை மாத்திரையை
விழுங்கிக் கொண்டிருக்கிறார்”
கவிதைகள் மொழியின் ஆகச்சிறந்த அழகு என்பதை நாம் மறவாதிருக்க அவ்வப்போது தமிழில் கவிதைத் தொகுப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்தபோது அவ்வளவு பழக்கமில்லாத சந்திரா இந்தத் தொகுப்பின் மூலம் ஸ்நேகமாகிப் போனார்.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல் பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 170.