மெச்சியுனை….. – உமா சங்கரி:
ஆசிரியர் குறிப்பு:
தி.ஜாவின் மகள். ஹைதராபாத்தில் வசிக்கிறார். தமிழ்நாட்டில் பல இடங்களில், பெங்களூரில் இவரை முன்னிறுத்தி தி.ஜா நூற்றாண்டு விழா நடத்தும் முயற்சிகளுக்கு கோவிட் தடைவிதித்து விடவில்லையென்றால், வாசகர் பலருக்கும் இவர் நேரில் அறிமுகமாகியிருக்கக்கூடும். இந்த நூல் தந்தையைப்பற்றி மகள் நினைவுகூறும் நூல்.
ஒரு பேட்டியில் உமா சங்கரி:
“நானும் என் கணவரும், விவசாயிகளின் பிரச்னைகள், நிலம் இல்லாத விவசாயக்கூலிகளின் பிரச்னைகள், அவர்களுக்கு நிலம் சொந்தமாக்குதல், மனித உரிமைகள், தீண்டாமையை எதிர்த்து தலித்துகளின் சமஉரிமைப் போராட்டங்கள் போன்ற பல இயக்கங்களுடன் ஈடுபட்டிருந்தோம். நாங்கள் செய்த பணிகளை காண்பதற்கு முன்பே அப்பா போய்விட்டார். இருந்திருந்தால் பெருமைப் பட்டிருப்பார்”.
எந்த மகளுக்குமே எவ்வளவு வயதானாலும் தந்தையைவிட வேறு ஆண்மகன் மேல் எதிர்பார்ப்பே இல்லாத காதல் இருக்க வாய்ப்பில்லை. புகழ்பெற்ற தந்தைகளின் மகள்கள் இந்திரா, பெனாசீர் என்று முற்றுப்புள்ளி வைக்க முடியாத பட்டியல். மெச்சி ஊரார் புகழ்கையில் மேனி சிலிர்ப்பது இயல்பே.
உமா சங்கரியின் இணையப்பேச்சு, மற்றும் இரண்டு மூன்று நேர்காணல்கள் படித்திருக்கிறேன். வண்ணம் கலக்காத வார்த்தைகளில், மனதில் தோன்றியதை சொல்பவர். ஆரம்பத்திலேயே அப்பா போல் எழுதவராது என்று பிள்ளைகள் முயற்சிக்கவில்லை என்பதையும், ஐம்பது வருடங்கள் கழித்தும் வாசகர் அவரை விரும்பிப் படிப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அவர் பற்றிய செய்திகளை கருத்தாக சேமித்து வைத்திருந்திருப்போம் என்பதிலும் அதே நேர்மை தெரிகிறது. தி.ஜாவின் மனைவியோ, மற்ற பிள்ளைகளோ இன்று இல்லை என்றசூழ்நிலையில் இவரது நினைவில் தங்கியவையே இந்த நூல்.
மூத்த சகோதரிக்கு கணவர் மறைந்ததும் தலைமழித்து நார்மடிப் புடவை கட்டவைக்கிறார்கள். இரண்டாவது சகோதரிக்கு அது பதினேழு வயதிலேயே நடக்கிறது. பாயசம் உள்ளிட்ட எத்தனை கதைகளில் நார்மடிப் புடவையைப் பரிவோடு அணுகியிருப்பார்!
தி.ஜா நெருங்கிய நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ தன் படைப்புகள் குறித்து விவாதித்ததாகத் தெரியவில்லை. இப்போது போல் சமூக ஊடகங்கள், சைக்கிள் ரிப்பேர் கடையில் சைக்கிளை மொத்தம் பிரித்து எண்ணெய் கிண்ணத்தில் பாகங்களைப் போடுவது போல், கதைகளுக்கு Overhaul செய்யும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. உமா சங்கரி ஹோமியோபதி மருத்துவர் என்று ஓரிரு வரிகள் சொல்லும் போதே அனந்தசாமி தான் அது என்று தெரிகிறது. தான் பார்த்த, கேட்ட விசயங்களைக் கதைகளாக்கி இருக்கிறார் என்பது உறுதியாகிறது.
பல அரிய புகைப்படங்களுடன், நினைவுகூரக்கூடிய தகவல்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார். புத்தகத்தின் வடிவமைப்பும், கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், புதுப்புத்தக மணமும், பழைய சோவியத் யூனியன் பத்திரிகை போல் வழுவழுப் பக்கங்களுமாய், இது போல் புத்தகங்கள் வந்தால் கிண்டில் வாசிப்பு குறைந்து விடும் போல் தோன்றுகிறது. சிறிய நூல், பல அறிந்த தகவல்கள் எனினும், உயிருக்குக்குயிராய்க் காதலித்துப்பின், வேறுமணம் செய்த பெண்ணைப் பற்றி, பலவருடங்கள் கழித்து யாரேனும் பேசுவதைக் கேட்கும் சுவாரசியமும், ஆனந்தமும் இந்தநூல் தி.ஜா ரசிகர்களுக்கு வழங்கக்கூடும்.
பிரதிக்கு:
Cre-A திருவான்மியூர்
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 150.