பேரருவி – கலாப்பிரியா:
ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலியில் பிறந்தவர். தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். ஐம்பதாண்டுகளாக எழுதிக் கொண்டு இருக்கிறார். இருபத்திரண்டு கவிதைத் தொகுப்புகள், பன்னிரண்டு உரைநடைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. சமீபத்தில் நாவல் எழுத ஆரம்பித்தவரின் மூன்றாவது நாவல் இது.
மற்றாங்கே, எட்டயபுரம், சுயம்வரம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் ஆழ்ந்து மூழ்கி ஆனந்தப்பட்டபோது இளமை நிறைய மீதி இருந்ததால் நெருக்கமாகிப்போன கவிதைகள் அவை. “மருத மர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி” என்பது போல் காதலும், பாலியலை வரிகளில் மீட்டும் வீணையைப் போன்ற கவிதைகளைத் தந்தவர்.
குற்றாலத்தில் எடுக்கப்போகும் ஒரு சினிமாவிற்குத் திரைக்கதையும் சில லொகேஷன்களும் பார்க்க மூவர், ஒருவருக்கு தெரிந்த மிராசுதார் வீட்டுக்கு வருவதில் ஆரம்பிக்கும் கதை. திரைக்கதை பூரணமாவதற்குள் அந்தக் குடும்பத்தின் கதையும், பல கிளைக்கதைகளும் வந்து விடுகின்றன.
உதுத்துத் தாளிச்சது, சுண்டக்கறி, அங்கனாக்குழி,முளைப்பாரி கரைப்பது, சீவிலி தூக்குவது, கவட்டாப்புள்,கோட்டிக்காரன், எருவி வச்சிறது, வல்லா வல்லடி, உளுத்தம் பருப்பு சோறும் எள்ளுத்துவையலும் (எனக்கு கூடவே கருப்பட்டி) என்று வரிசையாய் வரும் திருநெல்வேலி வட்டாரச் சொற்களும், கலாச்சாரமும் புரிந்தோர் கூடுதலாய் ரசிக்கலாம் இந்த நாவலை.
சாந்தி முகூர்த்தம் முடிந்த பெண் குளிக்காமல் குழந்தைகளைத் தொட்டால் சீர் தட்டும் என்பது, பிள்ளையாருக்கு மிளகாயை அரைத்துப் பூசினால் மேலெல்லாம் காந்தல் எடுத்து மழைபெய்யச் செய்வார் என்பது போல் தெற்கத்திக்காரர்களுக்கு எத்தனை எத்தனையோ நம்பிக்கைகள்.
ஆனந்திக்கு சற்றே தி.ஜாவின் உயிர்த்தேன் செங்கம்மா சாயல்.
” அருமையான ஆகாய நீலநிறக் காட்டன் சேலையில், இறுகப்பின்னிய குட்டைச்சடையை மீறி முன்நெற்றியில்
கொம்பைப்பிடிக்கக் காற்றில் அல்லாடும் அவரைக்கொடி போல சுருண்டு ஆடும் ஸ்பிரிங் முடிகளுடன், உதட்டுக்கு மேல் அரும்பிநின்ற வேர்வை முத்துக்களுடன்……………….
அவளே பசியும் அவளே உணவுமாக மாறிமாறிப் பரிமாற………….”
“அவள் குளித்துத் தலைஉயர்த்திக் கட்டி, சின்ன சந்தனக்கீற்றும், குங்குமமுமாகத் தன்அழகை அவள் நின்றிருந்த நிழலில் விட்டுவிட்டுத் தான் போனாள்”
காமத்தில் ஈடுபடுவோர் சாதாரண சமயங்களை விடத்துணிச்சலாக காரியங்களில் இறங்குவது வழக்கம்.
நாற்பதடி தண்ணீர்பைப்பை காரிருளில் குத்துமதிப்பாக ஏறுபவனுக்குப் பகலில் ஏறுவதற்கு உயரத்தில் கால் நடுங்கும். இந்த நாவலில் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவனின் காமம் என்பது வித்தியாசமான கதைக்கரு.
யவனராணியில் நாகலிங்கப்பூவை வைத்து படையாலோசனை சொல்வது தீவின் கிழவி, அப்போது உடனிருப்பது பூவழகி இல்லை அலிமா என்று நினைவு.
சரளமான மொழிநடையும், கதையெங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளும் (வாலி, வயலார்,மருதகாசி கொஞ்சமாக) குற்றாலத்தில் இப்போதும் இருக்கும் அசலான இடங்களும் இந்தக் கதையின் பலம். சிறுவயது குற்றாலம், தென்காசி நினைவுகள் மேலெழுந்து வந்தன. நாகராஜன் ஊருக்குப் போகையில் முத்துக்குமாரை துணையிருக்கச் சொல்வது, ஊருக்குக் கிளம்புமுன் நடக்கும் கடைசிக்காட்சி போன்ற சின்னசின்ன பலவீனங்கள். மற்றவர் ஊருக்குப்போக, முத்துக்குமார் சைலேந்திரிக்குப் துணையாக லாட்ஜில் தங்குவேன் என்று சொல்ல, அப்போது அதெல்லாம் வேண்டாம் நம் வீட்டில் தங்குங்கள் என்பது Logically acceptable. ஆனால், வரும் எல்லோருக்கும் சொல்ல ஒரு கதை, கதைக்குள் கதையாக ஏராளமான கதைகள் இருந்தும் நாவல் கட்டுக்குலையாமல் தாமிரபரணியில் வெள்ளத்தில் ஓடும் தண்ணீர் போல முதல் பக்கத்தில் இருந்து வேகமாக ஓடுகிறது. குற்றாலத்தில் தங்கி வந்த உணர்வு அப்புறம் ஆனந்தியைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நாவலின் வெற்றிக்கு அறிகுறி.
பிரதிக்கு :
சந்தியா பதிப்பகம் 044-24896979
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ 270.