அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்- சுரேஷ்குமார இந்திரஜித்:
ஆசிரியர் குறிப்பு:
நாற்பது ஆண்டுகளாக சிறுகதை எழுதி வரும் இவரது முதல்நாவல் 2019ஆம் ஆண்டு வெளியானது. 2020 விஷ்ணுபுரம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது சமீபத்தில் வெளிவந்த நாவல்.
கோவில்கள் இத்தனை இல்லாமலிருந்தால் இத்தனை படையெடுப்புகள் நடந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. எவ்வளவு எளியவர் ஆயினும் கோவிலுக்குக் கொடுத்தால் பலமடங்கு திரும்பவரும் என்பது நம்பிக்கை. அதனால் தான் குசேலர்-அவல் கதை.
கோவில்கள் எல்லோரையும் அன்றும் சமமாக நடத்தியதில்லை இன்றும் சமமாக நடத்துவதில்லை. மீனாட்சி அம்மன் கோவிலில் நாடாரும், தாழ்த்தப்பட்டவராகச் சொல்லப்பட்டவர்களும் ஆலயப் பிரவேசம் செய்ததை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல் இது.
சங்கரலிங்க நாடார் தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டது Madura Coatsஆகத்தான் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், 24 மணிநேரத்தில் 3 ஷிப்டுகள் செழுமையான வியாபாரம் என்றிருந்த நிறுவனம். மதுரையை தூங்காநகரம் ஆக்கியதில் இந்த நிறுவனத்திற்கும் பங்குண்டு.
அம்பிகா பொற்றாமரைக் குளத்தில் சங்கரலிங்க நாடாருடன் பேசுவது கவிதை. பூதாகரமான பிரச்சினை
முன்னிருக்கையில் குருவியை ரசிக்கும் பெண். அம்பிகாவின் சாயலில் பெண்கள் பார்த்ததுண்டா? ஆமாம் நாடார் ஏன் சேலை நிறம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்?
அம்பிகா, ருக்மணி அருண்டேலின் காலடித்தடங்களில் தொடர்ந்து நடக்கிறார்.தன்னை விட இருபத்தைந்து வருடங்கள் கூடிய ஆங்கிலேயரை, சைவஉணவில் தீரா நம்பிக்கை கொண்டிருந்த, இங்குள்ளோருக்கு பலவிதத்திலும் கலாச்சார அதிர்ச்சி கொடுத்த அந்த பெண் ஒரு சுயசரிதையை எழுதி இருக்கலாம். ஜனாதிபதி பதவியை வேண்டாம் என்ற பெண்ணின் எழுத்து எவ்வளவு நேர்மையாக இருந்திருக்கும்.
சிறிய நாவல் இது. அசல் கதாபாத்திரங்கள் பலருடன் கற்பனைப் பாத்திரங்களும் வருகிறார்கள். கள் விற்பனையிலிருந்து நாடார் பஞ்சுத்தொழிலுக்கு யோசிக்காமல் மாறுவது, அக்கிரஹார மனிதர்களின் பேச்சுக்கள், அம்பிகாவின் பெற்றோரின் எதிர்வினை எல்லாமே பார்த்த கதையை சொல்வது போல் இயல்பாக வந்திருக்கிறது. இணையத்தில் பெரும்பாலான தகவல்கள் கிடைத்ததாகச் சொல்கிறார். இணையம் எல்லாப் பொழுதுகளிலும் நம்பத்தகுந்தது அல்ல. என்றாலும் முக்கியமான நிகழ்வை ஒட்டிய புனைவு என்ற வகையில் இது முக்கியமான நாவல். இவரது Subtle humour, குறிப்பாக தண்டபாணி கம்யூனிசத்தை விளக்கும் பகுதிகளில் சிறப்பு. பிற்பகுதி நா.பாவின் லட்சிய பாத்திரங்கள் பேசுவது போல் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
அடுத்தது ஆங்கிலேயர் குறித்து நமக்கு இன்னும் இருக்கும் மயக்கம். ஜெர்மானியர், ஜப்பானியர் ஏனென்று கேட்காமல் கொல்வார்கள். ஆங்கிலேயர் தவறாமல் நம்மை ஏன் அவர்கள் கொல்ல வேண்டியதாகிறது என்பதை நமக்குச் சொல்லி பின்தான் கொல்வார்கள். முஸ்லீம் ஆட்சி நடந்த போது கலவரம் இல்லை சரி, பகதூர்ஷா மறைவுக்குப் பின் அடுத்த நூறு ஆண்டுகள் கழித்தும் கலவரம் இல்லையே! அப்போது இருவரிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டது யார்? ஆங்கிலேயர்கள் குறித்து தவறான புரிதல் இன்னும் இங்கிருக்கிறது. Shashi Tharoor An Era of Darkness எனும் புத்தகத்தை லண்டனில் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை இதை படிக்கும் பதிப்பகத்தார் யாரேனும் தமிழில் வெளியிட்டால், அடுத்த ஏழுதலைமுறைக்கு சகலசம்பத்துகளுடன் இருப்பார்கள்.
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 96777-78863.
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ 200