போர்க்குதிரை – லஷ்மி சரவணகுமார்:
ஆசிரியர் குறிப்பு:
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். யுவபுரஸ்கார் விருது உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். திரைக்கதாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இது இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு.
வீடு திரும்புதல்:
ரூஹ் போல குறுநாவலாக வந்திருக்க வேண்டிய கதை. ஊர் சுற்றுவதில் பேரார்வம் கொண்ட இவருக்குப் பிடித்த Subject கொண்ட கதை இது.
Woofingஐ மையமாகக் கொண்டது. உண்மை தான், தோல்விகள், தாழ்வுமனப்பான்மை, அவமானங்கள் எல்லாமே நம் Comfort zoneஐ விட்டு வெளியே வருகையில் நீங்கி விடுகின்றன. முகம் தெரியாத பிரதேசங்களில் பயணம் அதற்குச் சிறந்தவழி.
கம்பமத யானை:
இது உருவகக்கதை. சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா என்றிருப்பார் கண்ணதாசன். பெண் காமத்தில் பேரண்டம். நான் சூரியன் என நம்மைக் கற்பிதம் செய்யச் செய்பவள். துவந்த யுத்தத்தில் தோற்றதாய் பாவனை செய்பவள். அவளுக்குத் தெரியும், அவள் ஜெயித்தால் காமம் செத்துவிடும் என்று. அருமையான கதை இது.
தடியன் சேகர்:
இப்படித்தான் கதை முடியும் என்று எளிதில் யூகிக்கவைக்கும் கதை.
குருவைத்தேடி:
மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் சொன்னது பலமுறை நிரூபிக்கப்பட்ட விசயம். எல்லா மதத்திற்கும் பொருத்தமானது அது. இந்தக்கதை, நான் புதுசா கதை எழுதி இருக்கிறேன், படிக்கிறீங்களா என்று கேட்பவர்களின் கதை போல் இருக்கிறது.
ஆலமரத்துயில்:
வங்கிகள் Repayment capacity பார்க்காமல் எந்தக்கடனும் வழங்குவதில்லை. ஆனால் பயிர்க்கடன் இந்த விதியில் அடங்காது.
பயிர்க்கடன் வராக்கடனானால் கொடுத்தவரின் தலையில் வங்கிகள் சுமத்துவதில்லை என்பதால் அதற்கான வசூலிப்பு நடவடிக்கைகள் எப்போதும் குறைவு. (கதை வழக்கம் போல் வங்கி நடைமுறைகள் தெரியாமல் எழுதப்பட்டது) ஆனால் விவசாயிகளால் வான்பொய்த்துக் கடன் கட்ட முடியவில்லை என்னும் குற்ற உணர்வு தாங்காது தற்கொலை செய்கிறார்கள் என்பது ஆதார பூர்வமான உண்மை. எல்லோருக்கும் சாப்பிடக் கொடுத்தவர்களை கடன் கட்ட முடியாதவர்களாக்கியது யார்?
கிறுக்குக் கன்றுகுட்டி:
எருமையில் ஆண் கன்றுக்குப் பெரிதாக மதிப்பு இருப்பதில்லை. அத்துடன் ஒருவனை இணைத்து அழகாகப் புனையப்பட்ட கதை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விதியின் கைகளைப் பிடித்து நடக்கும் கதை.
இந்தக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல:
சுஜாதாவின் நகரம் போன்ற கதை. கிராமத்தில் இருந்து வருபவர்களுக்குப் பிடிபடாத நகரம். ஆரம்பத்தில் எடுத்த ஓட்டத்தைக் கடைசிவரை நிறுத்தாத கதை. இவரது இந்த பாணிக்கதைகளை மறந்தும் யாரும் கற்பனை என்று சொல்ல முடியாதவண்ணம் உயிரோட்டம் இருக்கும்.
ஆதாமின் துரோகம்:
ஓரினச்சேர்க்கையில் இருப்பவனுக்கு இருக்கும் நுண்ணுணர்வுகள் குறித்த கதை. ஒரு ஆண் ஒரு பெண்ணை எந்த அளவிற்குக் காதலிக்க முடியுமோ அதே அளவிற்கு இன்னொரு ஆணையும் காதலிக்க முடியும் என்ற புரிதல் இங்கு
குறைவு. தமிழில் நான் படித்த சிறந்த LGBT கதைகளில் இதுவும் ஒன்று.
போர்க்குதிரை:
Metafictionஆகவும் இல்லாமல் Surreal story ஆகவும் இல்லாது இடையில் நிற்கும் கதை.
ரகசியத்தின் அரூப நிழல்கள்:
காமத்தின் சுவிசேஷம் என்ற வார்த்தைக் கோர்வையையும் இவர் எச்சரிக்கையையும் தாண்டி கதை பல்லிளித்தால் என்ன செய்வது? பாலியலை எழுதுவது தவறில்லை, அது இலக்கியமாவதும் புதிதில்லை. ஆனால் இது போன்ற கதைகள் இலக்கியப்பிரிவில் சேர விரும்பாது Softporn queue வில் எழுத்தாளரைக் கேட்காமலேயே போய் நின்று விடுகின்றன.
இப்படியாக அவளின் சில காதலர்கள்:
சிறந்த உளவியல் கதை இது. Pistanthrophobia இருக்கும் ஒருவனைப் பற்றிய கதை. பொதுவாக அம்மாவிடமோ, மனைவியிடமோ ஏற்படுவது இது. நடக்கக்கூடாது என்ற பயமும், நடக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஒருங்கே இருக்கும். நல்ல Presentation இந்தக்கதை.
பதினோறு கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வித்தியாசமான கதைகள். காமத்தை மையச்சரடாய்க் கொண்டு கதை எழுதுகையில் வித்தியாசம் தெரியும் படி எழுதுவது சிரமமான விசயம். ஆனால் நாவலை, குறுநாவலை சிறுகதைக்குள் சிரமப்பட்டு அடைத்தது போன்ற தோற்றமளிக்கும் சில கதைகள்.
லஷ்மி சரவணக்குமாரின் மொழி தடைகளில்லாத இடத்தில் பாயும் நீர். சிலநேரங்களில் சுஜாதாவின் சாயல் போல் எழுதுகிறார். “ஜோதியின் கணவன் என்பதைத் தாண்டி சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு செல்வராஜைக் குறித்து எதுவுமில்லை” சில நேரங்களில் கவித்துவ வரிகள். “நினைவின் நதியெங்கும் அவன் முத்தங்கள் கூழாங்கற்களென நிரம்பியிருக்கிறது”
சில இடங்களில் தத்துவார்த்தம். இத்தனையும் கலவையாய் ஒரு தொகுப்பில் படிப்பது நல்லதொரு அனுபவம்.
தரவரிசையிலும் கதைகளில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். கம்பமத யானை, ஆதாமின் துரோகம் போன்ற சிறந்த கதைகளும் இருக்கின்றன. சராசரி தரத்திற்குக் கீழ் இருக்கும் குருவைத் தேடி போன்ற கதைகளும் இருக்கின்றன. இவரது தனித்துவம் என்பது இவர் எடுக்கும் வித்தியாசமான கதைக்களங்களும் அதனை இவர் சொல்லும் மொழியும்.
ஓரினச்சேர்க்கை பற்றி எழுதுவது பெரிய விசயமில்லை. அந்த நிராகரிப்பு, அருவருப்பு, காதல் என்று எல்லா உணர்வுகளையும் நுட்பமாகக் கதையில் கொண்டு வருதல் கடினம். அதே போல் தான் Call boy குறித்த கதை. இடையிடை நம்பிக்கையின் கீற்றுகள் அனுபவங்களிலும், மொழிநடையிலும். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதையாகி இருக்கும். சிறுகதைகளின் பிரச்சனையே அது தான் T20 போல் Settle ஆக நேரம் கிடைப்பதில்லை.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம், 98400 65000
முதல் பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 260.