இருட்டில் ஒரு புனிதன் – பி.எப். மாத்யூஸ்- தமிழில் சுஜா ராஜேஷ்:
பி.எப். மாத்யூஸ்:
1986ல் இருந்து மலையாளத்தில் எழுதுகிறார். இலக்கியம், திரைத்துறை இரண்டிலும் இணைந்து பணியாற்றும் இவர் ‘குட்டிசிரான்’ படத்தின் திரைக்கதைக்குத் தேசியவிருது பெற்றவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நினைவுக்குறிப்பு நூல் வெளிவந்துள்ளன. இது இவருடைய சமீபத்தில் வெளிவந்த முதல்நாவல்.
சுஜா ராஜேஷ்:
கேரள மாவட்டம் இடுக்கியில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்த்துறை பேராசிரியர். எழுத்திலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்டவர். மனைவியின் பெயரில் எழுதுகிறார்.
விவிலியம் படித்தவருக்கு Lazarus என்றால் யார் என்று தெரியும். நான்கு நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்தவன். இந்த நாவலிலும் இருவர் Lazarusஐ ஏதோ ஒரு வழியில் தொடர்கிறார்கள். Jesus Lazarusஐ உயிர்த்தெழுவித்தது போல் சாத்தானும் தன் பங்குக்கு முயற்சிக்கிறான்.
பெயர் சொல்ல விரும்பாத எழுத்தாளரின் கதையில் பல வினோத/அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. முக்கியமாக யார் பற்றிய கதையோ அவர்கள் இருவரும் அவர்கள் கதையை சொல்வதில்லை. துணைபாத்திரங்கள் கனவில், கடிதத்தில், நேரில் கதை சொல்கிறார்கள். அதனால் கதை கொஞ்சம் முன்னுக்குப்பின் முரணாகப் போகிறது. கடைசியில் பொறுமை இழந்த எழுத்தாளரும் கதையில் ஒரு கதாபாத்திரமாகிவிடுகிறார்.
சாத்தானும் ஒரு அத்தியாயத்தில் அவனுடைய கதையைச் சொல்கிறான். அதில் ஓரிடத்தில் சொல்கிறான். நான் சகலசக்திகளும், சித்திகளும் வாய்க்கப்பட்டவனல்லன், நான் ஒரு கற்பனைப்பாத்திரம். சாத்தான் சொல்லாத ஒன்றை பூர்த்திசெய்து கொள்வது உங்கள் பொறுப்பு.
Nonlinear novelல் Magical realismம் நம்பக்கூடாத கதைசொல்லிகளும், ஒன்றிலிருந்து தொடங்கி வேறாக முடியும் சம்பவங்களைக் கொண்ட நாவலை இத்தனை சுவாரசியமான வாசிப்பிற்கு ஏற்றதாகச் செய்வதில் எழுத்தாளரின் ஜீனியஸ் அடங்கி இருக்கிறது. மிகவும் வித்தியாசமான நாவல் இது. இந்திய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் புக்கர் இன்டர்னேஷலுக்குக் கடும்போட்டியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
கிருத்துவ நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் முழுக்க முழுக்கச் சொல்லும் நாவல் இது. சாத்தான் சகலசக்திகளுடன் அவனைத் தடுக்கும் எல்லா முயற்சிகளையும் முறியடிக்கிறான். Dr John Faustusன் சாத்தான் வேறு, இந்தியாவில் இருப்பவர்கள் சொல்லும் சாத்தான் வேறு என்பதை அறிக.
மரணத்திற்குப்பின் யார் நமது வாழ்வை தொடர்ந்து நடத்திவைக்கப் போகிறார்கள்? கடவுளா இல்லை சாத்தானா? மூலம் எப்படி இருந்தது தெரியாது ஆனால் தமிழில் மொழிபெயர்க்க சிரமத்தை ஏற்படுத்தும் பிரதியாகத் தான் இருந்திருக்கும். சுஜா ராஜேஷ் இது போன்றதொரு சிறந்த புத்தகத்தைத் தமிழில் கொண்டுவந்ததற்குப் பாராட்டுக்கள். காலகட்டம் வெளியீடு தொடர்ந்து இதுபோன்ற நூல்களைப் பதிப்பிக்க வாழ்த்துக்கள்.
பிரதிக்கு:
காலகட்டம் வெளியீடு 99946 66435
முதல்பதிப்பு மே 2019
விலை ரூ 225