தனுஜா – தனுஜா சிங்கம்:

ஆண் குழந்தையாகப் பிறந்து தனுஜன் என்ற பெயரில் வளர்ந்த இவர், இயற்கையின் தேர்வில் தன்னை தனுஜாவாக மாற்றிக் கொண்டார். பன்னிரண்டு வயதிலிருந்து ஜெர்மனியில் வளர்ந்தவர். பாலியல் தொழிலாளியாக நல்ல வருமானத்தை ஈட்டி வந்த இவர், சுயவிருப்பில் அதை விட்டுவிட்டு சுகாதாரத்துறையில் பற்கள் பராமரிப்பு கல்விபயின்று கொண்டிருக்கிறார். இருபத்தொன்பது வயதே ஆன இவரது இந்த சுயசரிதை, ஈழத்தின் திருநங்கைகளின் முதல் சுயசரிதை மட்டுமல்ல, தமிழில் முழுமையான LGBT பிரிவில் அடங்கும் முதல் சுயசரிதையும் இது தான்.

புத்தகத்திலிருந்து:

” பொது அறங்களால், பொதுநீதிகளால், பொதுக் கலாச்சாரங்களால், பொது இலக்கியங்களால், பொதுத் தத்துவங்களால் எங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. வரலாறு முழுவதுமே வஞ்சிக்கப்பட்டவர்களான எங்களது பயணம் புதிர்வட்டப்பாதை. இந்தப்புதிரை யாரும் அவிழ்த்ததில்லை நாங்கள் கூட அவிழ்த்ததில்லை”

இலங்கையில், இந்தியாவில் ஆண்குழந்தைகளுக்கு (பெரும்பாலும் பெண்குழந்தை இல்லாதவர்கள்) மையிட்டு, பூவைத்து அழகு பார்ப்பது சாதாரணமாக நடப்பது. இரண்டு மூன்று வயதுவரை அது ரசிக்கக் கூடியது. வளர்ந்த ஆண் குழந்தைகள்
பெண்போல நடந்து கொள்வது பெரிதாகக் கவனத்தைக் கவருகிறது.மூன்றாம் பாலினத்தை குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமன்றி அவர்களை குடும்பத்தில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளவும் மறுக்கிறார்கள். கௌரவம், அவமானம் பெற்ற குழந்தையைக்கூட கைகழுவி விடச் செய்கிறது. எல்லோராலும் கைவிடப்படுபவர் எளிதாகத் தேர்ந்தெடுக்கும் தொழிலாக பாலியல் தொழில் அமைகிறது.

உடலால் ஆணாக இருந்தாலும் மனதளவில் முழுமையான பெண்ணாக இருப்பதால் இவர்கள் ஒரு ஆணை அதே தீவிரத்துடனும், முனைப்புடனும் காதலிக்கிறார்கள். ஆண் விலகினால் பெண்களுக்குத் தோன்றும் அதே காதல் தோல்வி உணர்வை அடைகிறார்கள். ஆண்களில் ஒருபாலின ஈர்ப்பு மட்டும் உள்ளவரைத் தவிர மற்றவர்கள் இவர்களை கறிவேப்பிலை போல் உபயோகித்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். இந்த ஆண்டு புக்கர் இறுதிப்பட்டியலுக்கு வந்த Brandon Taylor ன் Real Life மூன்றாம் பாலினத்தினரின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் நாவல்.

திருநங்கைகளுக்காக ஒரு குடும்ப அமைப்பு-ஜமாத் அவர்களுக்கான சட்டதிட்டங்களுடன் இயங்குகிறது. பெண்களுக்கு பூப்புனித நீராட்டுவிழா போல் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததும் நாற்பதாவது நாள் சடங்கு நடக்கிறது. புதிதாக இன்னொரு திருநங்கை இளையவரை மகளாக ஏற்றுக் கொள்கிறார். பாலியல் தொழில் ஒரு வேலை செய்வது போல், கடமை போல் அவர்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. வயதான திருநங்கைகள் இளையவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பங்கு பெற்றுக்கொள்கிறார்கள்.

வயதுக்கும் அனுபவத்திற்கும் இணைந்திருக்கும் சம்பந்தம் சில நேரங்களில் விதிவிலக்காக அமைகிறது. அனாதையாய் தெருக்களில் வளரும் பதினைந்து வயது சிறுவனுக்கும் பெற்றோர் தினம் பள்ளிக்கு வாகனத்தில் கூட்டிப்போய் திரும்பக்கூட்டி வரும் பதினைந்து வயது பையனுக்கும் அனுபவம் எப்படி சமமாக இருக்க முடியும்? இருபத்தொன்பது வயதுக்குள் தனுஜாவுக்கு இருநூறு வருடத்திற்கான அனுபவங்கள்.

ஆணுக்குள்ள சுதந்திரம் தனக்கில்லையென்று பல பெண்கள் ஆணாகப் பிறந்திருந்தால் நல்லது என்று நினைப்பதற்கு நேர்மாறாக ஆணுடலை முழுக்க வெறுத்துப் பெண்ணுடலை அடைந்ததும் ஜென்மசாபல்யம் அடைந்ததாய் மகிழும் பெண்ணின் கதை இது. இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது அதில் முட்களும் கண்ணாடித் துண்டுகளையும் பல ஆண்கள் வீசியது மட்டுமன்றி இவர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்த திருநங்கையின் துரோகமும் சேர்ந்து கொள்கிறது.

உங்கள் ஆன்மாவால் படிப்பீர்கள் என் கதையை என்று முடிக்கிறார் இந்த சுயசரிதையை. இதைவிட நேர்மையான ஒரு எழுத்தை நீங்கள் இதற்கு முன் படித்திருக்க வாய்ப்பில்லை. சக்திவாய்ந்த கதைக்கு அலங்கார மொழிகூடத் தேவையில்லை என்பது மறுபடியும் நிரூபணமாகி இருக்கிறது. நிறைய இடங்களில் பேச்சு வழக்கிலோ இல்லை எதிர் இருப்பவரிடம் சொல்லும் தொனியிலோ இருக்கும் மொழிநடை அதன் உள்ளட.கத்தால் அத்தனை உணர்வுகளையும், வலியையும் வாசகருக்குக் கடத்துகிறது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வாசகருக்கு வேறுவேறு உணர்வைத்தரும். இந்த நூல் எல்லாத் தரப்பு வாசகர்களுக்கும் ஒரே உணர்வையே தரும். அது…… அவர்கள் வாழ்க்கை எவ்வளவு அதிருஷ்டவசமானது என்னும் சிந்தனை தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s