எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்:
எஸ்.ரா சென்ற ஆண்டைப் போலவே இப்போதும் அவருடைய இந்த வருடத்தியப் புத்தகங்களை வருடத்தின் முடிவில் வெளியிட்டிருக்கிறார். இந்த வருடத்தின் புத்தகக்கண்காட்சி கேள்விக்குரியதாக இருக்கையில் அதை எதிர்பாராது தொடர்ந்து மற்ற பதிப்பகங்களும் நூல்களை வெளியிடுவது நல்லது. இந்த ஆண்டு, உலக இலக்கியம் பற்றிய நூல், சிறுகதைத் தொகுப்பு, குறுங்கதைத் தொகுப்பு, தமிழ் சினிமாக் கட்டுரைகள் தொகுப்பு, உலகசினிமா கட்டுரைத் தொகுப்பு, சிறார் நூல் என்று கலவையாக ஆறுநூல்களின் வெளியீடு.
- கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்:(உலக இலக்கியம்)
உலக இலக்கியங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. இவர் முன்னுரையில் சொல்வது போல் முக்கியமான ஆங்கிலப்புத்தகங்களும் தமிழில் வர நீண்டகாலம் ஆகிறது. முதலில் உரிமை வாங்குவதின் சிக்கல்கள் அடுத்தது மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இருக்கும் குறைவான வாசகர் எண்ணிக்கை. வேறு எப்போதும் இல்லாத அளவு தமிழில் இப்போது அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்ப்பாளர்கள் இயங்கிவருவது மட்டுமே ஆறுதலான விசயம்.
முதல் கட்டுரை Mobi Dick குறித்து. திமிங்கல நாவல். கதை மட்டுமன்றி பின்புலத் தகவல்களையும் இந்தக் கட்டுரையில் சொல்லி இருக்கிறார்.
கோ யுன்னின் The Little Pilgrim நூல் குறித்த அறிமுகக் கட்டுரை. என்னுடைய பிரமையாய் இருக்கலாம், இந்தக்கட்டுரையைப் படிக்கையில் இவர் குரலில் சொல்லக் கேட்டது போன்ற உணர்வு. அதே பேச்சு நடை.
John Steinbeckன் Grapes of Wrath நாவல் உருவாகியவிதம் குறித்த Journal பற்றிய கட்டுரை முக்கியமானது. முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். படிக்க வேண்டும்.
மோயான் எழுதிய Red Sorghum முக்கியமான நூல். அவருடைய பசி மற்றும் மாற்றம் என்ற இரண்டு நூல்களைப் பற்றிய கட்டுரை வழமைபோல் மோ யான்னின் புன்புலத் தகவல்களைச் சொல்கிறது. அம்மாவிற்குக் கதைசொல்லி கதைசொல்லக் கற்றுக் கொள்வது சுவாரசியமான விசயம்.
பால்சாக்கை காதல் படுத்திய பாடு பற்றிய கட்டுரை சுவையானது.
இருபத்தாறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. உலக இலக்கியத்தில் முக்கியமான ஆசிரியர்களின் புகழ்பெற்ற நூல்கள் அன்றி, அவர்களது அதிகம் வெளியில் தெரியாத நூல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் இந்தியக் கதாசிரியர்கள் சிலரது முக்கிய நூல்கள். கவிதைகளுக்குக் கூட மூன்று கட்டுரைகள் இருக்கின்றன. எல்லாமே இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் தான் ஆனால் புத்தகவடிவில் ஒரு கையேடு போல் வைத்துக் கொண்டு அடுத்து படிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொள்ள இந்த நூல் பேருதவியாக இருக்கும்.
- அவளது வீடு- சிறுகதைத் தொகுப்பு:
இருபது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எஸ்.ரா வின் மொத்த கதைகளிலிருந்து பத்து வாசகர்கள் அவர்களுக்கு சிறந்த கதைகள் என்று தோன்றியதை தேர்வு செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எஸ்.ராவின் உச்சபலம் என்பது அவரது சிறுகதைகளில் தான் என்று தோன்றுகிறது.
அவளது வீடு – வீடென்று எதனைச் சொல்வீர் என்று மாலனின் கவிதை ஒன்று ஆரம்பிக்கும். அது போன்ற வீட்டிலிருந்து பெரியவீட்டை சொந்தமாக்க வேண்டும் என்ற தவிப்பே இந்தக்கதை. எவ்வளவு நுட்பமாக அந்த உணர்வுகள் மூன்று தலைமுறை கதையில் வெளிப்படுகிறது. கணவன் கதாபாத்திரம் கொஞ்சம் கவனமாக வந்திருக்கலாம். தலையாட்டி பொம்மை, அப்பாவி கடைசியில் வன்முறையாளனாகிப் போகிறான்.
ஆண் மழை- ” மழை தான் இந்த உலகின் மாபெரும் முத்தம்”. என்ன ஒரு வரி! நெடுங்குருதியில் வெயில்புராணம் பாடிய அதே கையா இதை எழுதியது! ஆண் மழை இவரது மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. உரையாடல்களில் மிக அழுத்தமாகச் சொல்லப்படும் கதை.
எம்பாவாய் – வாசிப்புப் பழக்கம் இருக்கும் பெண்கள் இந்தக் கதையைத் தவறாமல் படிக்க வேண்டும். சிற்பி செதுக்கும் நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட கதை.
பி.விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள் – குடும்ப வன்முறையின் உச்சகட்ட விவரிப்புகள் அதிர்ச்சி அளித்தது என்று நினைத்தால் அதைவிட அதிர்ச்சி முடிவில் உள்ளது.
நடுவில் உள்ளவள் – Best Day Ever நாவல் போல கதைசொல்லி கதையை சொல்லிக்கொண்டு போக, கடைசியில் தான் தெரியும் அவன் சொன்னது பொய் என்று தெரியும். இந்தக் கதையிலும் அதே யுத்தி கையாண்டிருக்கப்படுகிறது.
பனாரஸ் – இது ஒரு Fantasy கதை. தமிழில் திருத்தமான Fantasy கதைகள் குறைவு. இவ்வகை கதைகள் நாம் எங்கு இருந்தாலும் அந்த கதைஉலகத்தின் உள்ளே கொண்டுபோய் விட்டுவிடும். முழுக்க தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் இது ஒரு இந்தியக்கதை.
கற்பனைச்சேவல்- சேவல் ஒரு Obsession பற்றிய கதை. சேவல் சிலருக்கு அவர்கள் பார்க்கும் உத்யோகம் இல்லை வேறு எதுவானாலும் இருக்கலாம். ஏன் பலருக்கு முகநூலாகக்கூட இருக்கலாம்.
தனலட்சுமியின் துப்பாக்கி – இந்தக் கதையின் மையக்கருத்து கடைசிவரியில் தான் தெரியும் அதற்குள் எங்கெங்கோ செல்லும் கதை. தனலட்சுமியின் மனமாற்றம் கூட அவள் வீட்டின் நிலைமையை உணர்ந்ததனால் இருக்கலாம். Beautiful story.
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது- நாளிதழ்களில் பலமுறை பார்த்த செய்தியே கதையாகி இருக்கிறது. கதை பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் இருப்பது மட்டுமல்ல நுட்பமான பல விசயங்கள் சேர்ந்து இதை சிறந்த கதையாக்கி இருக்கின்றன.
சௌந்தரவல்லியின் மீசை – மீண்டும் நுட்பமான உணர்வுகளைப் பேசும் கதை. மூக்கு கொஞ்சமாய் கோணல் என்று யாராவது சொல்லும்வரை அதை கவனித்திருக்கவே மாட்டோம். கடைசியில் அம்மாவும் பெண்ணும் சேர்ந்து கண்களின் ஓரத்தைத் துடைத்துக்கொள்ள வைக்கிறார்கள்.
இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு இது. எஸ்.ரா ஓரிரு கதைகளைத் தவிர எந்த பரிசோதனையோ, யுத்தியோ மேற்கொள்ளவேயில்லை. நேரடிக் கதைசொல்லலில் சிறந்த கதைகள் சொல்ல முடியும் என்பதற்கு Classic example இந்தத்தொகுப்பு. இன்னொரு விசயம், உலகக்கதைகளின் வாசிப்பு இருந்தும் இதில் ஒரு கதையில் கூட அதைப்பற்றிய சின்னத்தொடல் கூட இல்லை. ஒரு அயல் நாவல் படித்தால் அதைக் கதையில் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்பு பெருகிவரும் காலத்தில் இது பாராட்டத்தக்க விசயம். எல்லாமே மண்ணின் கதைகள்.
இன்னொருவகையில் அநேகமாக எல்லாக் கதைகளும் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. அவர்களது அக உணர்வுகள், பழக்கங்களும் பாவனைகளும் அழகாக வந்திருக்கின்றன. தகவல்கள், விவரங்கள் மேலே மேலே ஏற்றிக்கொண்டு போய் கதையை மிக நெருக்கமாக உணரவைக்கிறார். எஸ்.ராவின் சிறுகதைகளைப் படிக்காதவர்களுக்கு பரிந்துரை செய்யப் பொருத்தமான தொகுப்பு இது என்பதில் எனக்கு கணத்தயக்கம் கூட இல்லை.
- கர்னலின் நாற்காலி- (குறுங்கதைகள்):
முன்னுரையிலேயே “இவை குறுங்கதைகளா என்ற பிறர் வியாக்கியானம் குறித்து எனக்கு முக்கியமில்லை, கதைசொல்லும் கலையைக் கொண்டு விதவிதமாக சொல்லிப்பார்க்கும் சிறுவனைப் போல் என் எழுத்து” என்கிறார். சிறுவனை உவமைகூறுவது எஸ்.ராவின் தன்னடக்கம். ஆனால் அதே நேரத்தில் ரோஜா என்ற பெயரில் முதலில் அறிமுகமான பூவின் மணம், வடிவம், அழகு எல்லாவற்றையும் அனுபவித்த ஒருவன் வேறொன்றைக் காட்டி யாரேனும் ரோஜா என்கையில் இல்லை என்று மறுப்பதும் இயற்கைதானே. என்னைப் பொறுத்தவரை இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒருகதை கூட குறுங்கதை இலக்கணத்திற்குள் அடங்குவதாய்த் தோன்றவில்லை.
125 கதைகள் அடங்கிய நெடிய தொகுப்பு. சாலை ஓவியன், அம்மாவின் புத்தகம், இரண்டு பிராத்தனைகள், வீடென்பது, சூட்கேஸ், குடும்பசண்டை போன்ற குறைந்தபட்சம் ஐம்பது கதைகளையேனும் மிகவும் ரசித்துப் படித்தேன். எஸ்.ராவின் பிரத்யேக மொழிநடை எல்லாக் கதைகளிலுமே இருக்கிறது. தண்ணீரில் மூத்திரம் போனால் யாருக்கும் தெரியாது என்று கிழவி சொல்கையில் சிரிப்பதா அனுதாபப்படுவதா என்று யோசிக்க வைக்கும் Subtle humour. புத்தகம் தான் எனக்கான ஜன்னல் என்கிறார் ஒருகதையில். அடுத்து படிக்கவே தோன்றாமல் அதையே யோசித்துக் கொண்டிருந்தேன். அது போன்று Quotes எடுத்தால் நிச்சயம் நூறு தேறும் இந்தப் புத்தகத்தில். “A rose by any other name would smell as sweet” என்று ஷேக்ஸ்பியர் சொல்வதும் உண்மைதானே.
- வெண்ணிற நினைவுகள் – தமிழ்சினிமா கட்டுரைகள்:
சினிமாக்கள் எப்படியோ நம் வாழ்வின் ஒரு அங்கம் போல் கலந்து விடுகின்றன. முதல் நாள் முதல் ஷோவில் படம் என்பதில் இருந்து வீட்டுக்குத் தெரியாமல் பார்த்த படங்கள் எவ்வளவு நினைவுகளைச் சுமந்து வருகின்றன! பலமாதங்களுக்கு முன்னால் இன்று இரவுஏழு மணிக்கு சன்லைப்பில் இந்தப்படம் என்று குறுஞ்செய்தி வந்தது. அந்தப்படத்தின் முக்கியத்துவம் எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். இருவர் வீட்டிலும் வேறு யாரேனும் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்திருந்தாலும் அது ஒரு செய்தி. அவ்வளவு தான்.
மூன்றுமுடிச்சு படம் பற்றிய கட்டுரையில் ஒருவரி ” எழுத்தாளர்கள் எல்லாம் இந்த உலகின் மனசாட்சிகள்”.
வ.உ.சி யாக சிவாஜி கப்பலோட்டிய தமிழனில் நடித்திராவிட்டால் வ.உ.சி பெயர் தமிழகத்தில் பலருக்குத் தெரிந்திருக்காது. இறப்பதற்கு முன் எழுதிய கடன் பட்டியல் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது.
மகேந்திரனின் முக்கியமான படங்களில் ஒன்று உதிரிபூக்கள். அந்தப் படத்தில் நடிப்பு, இசை, பாடல், கதை எல்லாமே நன்றாக இருக்கும். நல்லதோ கெட்டதோ எப்போதும் சேர்ந்தாற்போல் தானே வருகிறது.
நினைத்தாலே இனிக்கும் படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் ஜெயப்பிரதா படிக்கும் புத்தகத்தின் காட்சியைத் தொடரும் இந்தக் கட்டுரையும் ஒரு கதை.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பாட்டில் துணைநடிகையாக வஹிதா ரஹ்மான்!
அந்த நாள் எந்தப்படத்தை தழுவி எடுத்திருந்தாலும் தமிழ்படங்களின் மாஸ்டர்பீஸ்களில் அதுவும் ஒன்று.
வீடு படத்திற்கு இவர் எழுதியிருப்பது “ஒரு திரைப்படம் வாழ்க்கைப் போராட்டத்தின் சிறிய துண்டினை துல்லியமாக சித்தரித்தால் போதும், அது முக்கியமான கலைப்படைப்பு ஆகிவிடும்.
வழக்கு எண் 18/9ன் கதை இவரை பலமாகப் பாதித்திருக்கிறது. இவருடைய சிறுகதை கோகிலவாணியை யாருக்கும் நினைவில்லை இதே கதை வேறு கோணத்தில்.
நாலுவேலி நிலம் படம்பற்றி நல்லதொரு கட்டுரை. ஈஸ்வரியின் குரல் காதுக்குள் ஒலிக்கிறது “அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன் நத்தி வரும் மச்சானுக்கு முத்து சரம் நானாவேன்”.
அவள் அப்படித்தானில் ரஜினி ஸ்ரீபிரியாவிடம் சொல்வார். “நேற்று நீங்கள் முடியாது என்றதோடு அந்த விசயம் முடிந்து விட்டதே” இன்று கூட அந்த முதிர்ச்சி நம்மிடம் கிடையாது அப்புறம் அந்தப்படம் அப்போது எப்படி ஓடியிருக்கும்.
பசி படத்திற்கு ஷோபாவைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை.
இருபத்தாறு தமிழ்படங்கள் குறித்த நூல் இது. எல்லாமே வெளியான போதோ, பிற்காலத்திலோ அதிகம் பேசப்பட்ட படங்கள். விமர்சனமாக இல்லாமல் அதையொட்டிய தகவல்களையும் சொல்லிச் செல்கிறார். (நாலுவேலி நிலம் படத்தைப் பேசுகையில் தி.ஜாவின் மிகமுக்கிய நாவல் பற்றிய குறிப்பு வருகிறது). அந்தநாள், மர்மயோகி (சிறுவயதில் பார்த்து பயந்தபடம்) போன்ற பலர் மறந்த படங்களும் இந்த நூலில் வருகின்றன.
தமிழ் திரையுலகு அதிசயங்கள் நிறைந்தது. அசோக்குமார் போன்ற படங்கள் 1941ல் இந்தியாவில் வேறெந்த மொழியிலும் வந்திருக்க வாய்ப்பில்லை. தி.ஜாவின் அமிர்தம் கதையை ஒட்டிய எதிர்பாராதது 1954ல் வந்துவிடுகிறது. மறக்க முடியுமாவில் எஸ்.எஸ்.ஆர் தேவிகா சந்திக்கும் காட்சி. மீறல்களைப் பற்றிய கவலை இல்லாமல் கதைகளை நம்பி பரிட்சார்த்த முயற்சிகளில் இருந்த தமிழ்சினிமாவின் பெருஓட்டத்தை அதன் ரசிகர்களாகிய நாம் தான் நம் ரசனை குறைபாடு எனும் லகானைப் பிடித்து நிறுத்தியிருக்க வேண்டும்.
- அரூபத்தின் நடனம் – (உலக சினிமா)
உலக சினிமா என்பது பெருங்கடல். உலக சினிமாவைத் தொடர்ந்து பார்ப்பவர் இருவர் தரும் பட்டியலில் பொதுவானவை விரல்விட்டு எண்ணும்படி இருக்கும். எஸ்.ராவின் பட்டியலும் வித்தியாசமாகவே இருக்கிறது. இதில் தொன்னூறு சதவீதப் படங்கள் நான் பார்த்ததில்லை, அதனால் குறிப்பாக எதையும் சொல்ல முடியவில்லை.
பொதுவாக சினிமாவின் கதை, காட்சி அமைப்பு, தொடர்புடைய விசயங்களை தன் ரசனை அடிப்படையில் சொல்கிறார். News of the World என்ற இவ்வருடப் படத்திற்கு Critcal reviews இணையத்தில் கிடைக்கிறது பாருங்கள். அநேகமாக உள்நாட்டுப்போருக்குப்பின்னான Texas வாழ்க்கையைப் பற்றி எல்லோருமே சொல்கிறார்கள். நமக்கு அது தெரியாது
எனவே நாம் அதனைப் பார்த்த பிறகு தகவல்களைத் தேடி ஆய்வு செய்ய வேண்டியதாகிறது. நேரமின்மை தான் என்னைப் பொறுத்தவரை பெரிய எதிரியாகிறது உலகப் படங்களைப் பார்ப்பதற்கு.
உலகப்படங்கள் குறித்து சமீபத்தில் அதிகமாகவும் நுட்பமாகவும் பேசிய கோகுல் பிரசாத் சொல்கிறார்:
“அந்தப் படத்திலிருந்து நான் கண்டடைந்த சிந்தனை, அந்தப் படத்தின் நோக்கம் என்ன என ஆராய்வது, இயக்குனரின் வாழ்க்கை கண்ணோட்டம், இயக்குநரின் முந்தைய படங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது அல்லது அந்தக் குறிப்பிட்ட படத்தின் கதைக்கருவைக் கொண்ட மற்ற படங்களுடனான ஒப்பீடு, character arc-ஐ அணுகிய விதம், அதன் உச்ச கணங்கள், தொழில்நுட்ப அழகியல் அம்சங்கள், அதன் சமூகப் பார்வை என்ன போன்ற விசயங்களை என் கட்டுரையில் கொண்டு வருவேன்”.
உலகப்படங்களைத் தொடர்ந்து பார்த்துப் பதிவிடும் வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம் சொல்கிறார் ” உணர்வு ததும்பும் படங்களையே நான் விரும்பிப் பார்ப்பேன், இதயத்தைத் தொடாத அதிக தொழில்நுட்பம் மட்டுமே சார்ந்த படங்களைத் தவிர்ப்பேன். உலகப்படங்கள் புதிய கலாச்சாரம், வரலாறு, நிலப்பரப்பு முதலிய தகவல்களைத் தேடி ஆராய வைப்பவை. Kim Ki Dukன் Spring Summer Autumn Winter Spring படம் முழுக்க புத்தமதத்தின் அடிப்படையில் வாழ்க்கையை விசாரிக்கும் படம் என்பதால் புத்தமதத்தைப் பற்றி அடிப்படைத் தகவல்கள் தெரிந்து கொண்டு எழுதலாம் என்றிருக்கிறேன்”
இதெல்லாம் செய்தேன் என்றால் என்னால் வாரத்தில் ஒரு புத்தகம் கூடப் படிக்கமுடியாது என்பதால்தான் நான் உலகப்பட விமர்சனத்தின் பக்கத்தில் கூடப்போவதில்லை. எல்லோரும் ஒருமித்து சொல்லும் வெகுசில படங்களைப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்வது.
அறுபது உலகப்படங்களில் வடக்கன் வீரகதா, கங்காதின் போன்ற இந்தியப் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த அகிரா குரோசாவாவில் இருந்து அதிகம் தெரியாத Guido Santi and Tina Mascara போன்றோரின் படம் வரை பேசியிருக்கிறார். திரைப்பட ஆர்வலருக்கு கதை அறிமுகத்துடன் கூடிய இந்தப் புத்தகம் அதிக தேடுதல் இன்றி அவர்கள் ரசனைக்கேற்ப பார்ப்பதற்கு உதவியாக இருக்கக்கூடும்.
- நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து – சிறார் நாவல்:
சிறார் இலக்கியம் என்பது ஆங்கிலத்தில் பரந்த உலகம். தமிழில் விருப்பத்தேர்வுக்கு மட்டுமன்றி வேகமாக வாசிக்கும் குழந்தைகளுக்குப் போதுமான நூல்களும் இல்லை. நான் படித்த பள்ளியின் நூலகம் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. இன்றும் அதிக நூல்கள் இல்லை. வாய்மொழிக் கதைகள் அருகிவரும் பொழுதில், சிறாரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி YA fictionல் அவர்களை நிலைநிறுத்தி, வளர்கையில் அவர்களை தேர்ந்த வாசகர்களாய் மாற்றாவிடில் Pdf கேட்கும் வாசகர்களே எஞ்சி இருப்பார்கள்.
இந்த சிறார் நாவல் தனியார் ஆங்கிலப்பள்ளிக்கும் அரசாங்கப் பள்ளிக்கும் இடையேயான ஆரோக்கியமில்லா போட்டியைப் பற்றிய கதை. கடைசியில் ஆங்கிலப் படங்களில் வருவது போல் ரேஸ் ஒன்று நடக்கிறது. மாணவர்களை உள்ளே வைத்து யாரேனும் ரேஸ் போவார்களா என்ற லாஜிக் பார்க்காத குழந்தைகள் இந்த நாவலை விமர்சனம் செய்வதே முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
எஸ்.ராவின் எல்லா சிறுகதை நூல்கள், நாவல்கள், சென்றவருடமும் இந்த வருடமும் வெளிவந்த எல்லா நூல்களையும் படித்தவன் என்ற வகையில் என் தனிப்பட்ட கருத்து இவரது பலம் முதலில் சிறுகதைகளிலும் அதற்கடுத்து நாவல்களிலும்.