தட்டழியும் சலதி – கோமதிராஜன்:
ஆசிரியர் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதுநிலைப் பொறியியல் பட்டதாரி. தனியார் பள்ளி ஆசிரியர். ஒரு கட்டுரைத் தொகுப்பும், ஒரு கவிதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளியிட்டுள்ள இவருடைய முதல் நாவல் இது.
முற்றிலும் கேள்விப்படாத புதிய நூல்களை Intuitionல் தேர்ந்தெடுப்பது மார்க்கெட்டிங் பாஷையில் சொன்னால் Cold Call. Hit rate குறைவு எப்போதும். ஆனால் எந்தவித முன்முடிவுகளுமின்றி ஒரு நூலை அணுகும் ஆனந்தம் அதில் இருக்கிறது. முத்துக்களும் எப்போதேனும் கிடைக்கும்.
மூன்று குழந்தைகளுடனும் நிறையக் கடனுடனும் தட்டழிந்து கொண்டிருந்த பரமன், மனைவி திட்டி அவமானப்படுத்தி விட்டாள் என்று வீட்டை விட்டு ஓடுகிறான்.
பட்டகாலிலேயே படும் கெட்டகுடியே கெடும் என்பது இந்தக் குடும்பத்தைப் பொருத்தவகையில் நூற்றுக்கு நூறு சரியாகப் போகிறது.
தான் பார்த்த வாழ்க்கையை நாவலாக எழுதியிருக்கிறேன் என்றிருக்கிறார் முன்னுரையில். தூத்துக்குடி வட்டார வழக்கில் அந்தக்குடும்பத்தின் திண்டாட்டம் வரை இயல்பாய் செல்லும் கதை பின் தடுமாற ஆரம்பிக்கிறது. திரிபுரசுந்தரி என்னும் லஷ்மியின் நாயகிகளுக்கு நேரும் அசந்தர்ப்பங்கள் எல்லாம் இதில் திருநாவுக்கரசுக்கு நேர்கிறது. சொல்லாமலேயே வருடக்கணக்கில் ஒருதலை ராகம் காதல் செய்கின்றாள் ஒருத்தி.
உலகின் சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் அதிகம் வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். நாவல் எழுதுவதற்கு தேவைப்படும் சின்னச்சின்ன விசயங்களைக் குறித்த ஆய்வுக்கு ஏராளமான நேரத்தைச் செலவு செய்கிறார்கள். தாங்கள் எழுதும் நாவலை பலமுறை படித்துத் திருத்தித் திருத்தி பின் தான் அவர்களிடமிருந்து அந்தப்பிரதி நகர்கிறது. இப்போதுள்ள சூழலைப் பார்க்கையில் தமிழில் புத்தகங்கள் கொண்டுவருவது தான் மேற்கூறிய சிரமங்கள் ஏதுமின்றி நடக்கும் காரியமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பிரதிக்கு:
டிஸ்கவரி புக்பேலஸ் 87545 07070
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.160.