ஏவாளின் ஏழு மகள்கள் – பிரையன் சைக்ஸ்- தமிழில் அமலன் ஸ்டேன்லி:
பிரையன் சைக்ஸ்;
பிரிட்டிஷ் மரபணு நிபுணர். அறிவியல் பரப்புரைஞர். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் மானிட மரபணுவியல் பேராசிரியராய் இருந்தவர். டிசம்பர் 2020ல் மறைந்தார்.
அமலன் ஸ்டேன்லி:
அறிவியலாளர். சுற்றுச்சூழல் நச்சுயியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மரபணு மூலம் செய்தி, கண்டங்கள், காலங்கள் தாண்டி இன்றைய நம்மையும் வந்து சேர்ந்தது பற்றிய நூல் இது. அறிவியல் விசயங்களைக் கதை போல் சுவாரசியம் குன்றாமல் படிக்க வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம்.
இத்தாலிய ஆல்ப்ஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த இருவர் ஒரு ஆணின் பிணம், பனிக்குள் சிக்கி இருப்பதைப் பார்க்கிறார்கள். அவர்கள் கனவிலும் நினைத்திராதது அது ஐயாயிரம் ஆண்டுக்கு முந்தைய பிணம். அதைத் தொடர்ந்த ஆராய்ச்சி ஐரோப்பா மொத்த ஜனத்தொகையுமே ஏழுபெண்களின் வம்சாவளி வந்ததாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.
கி.மு 350ல் அரிஸ்டாட்டில் மரபணு குறித்துப் பேசியது ஆச்சரியமளிக்கிறது. என்றாலும் அது ஒரு ஆணாதிக்க வாதம்.தந்தையிடமிருந்தே மரபணுக்கூறுகள் பிள்ளைக்கு வருகின்றன என்பது. மகாபாரதக்கதை இன்னும் கொஞ்சம் Indepth ஆக இந்த விசயத்தை அணுகியிருக்கிறது. நியோகா முறையில் குழந்தைப் பேற்றிற்காக வியாசரின் அவலட்சணம் பொறுக்க முடியாது அம்பிகா புணர்ச்சியின் போது கண்களை மூடிக் கொள்கிறாள். திருதராஷ்டிரன் குருடாகப் பிறக்கிறான்.
என்னுடைய இரத்தம் என்று உரிமையாகச் சொன்னாலும் இரத்தத்தின் வகை எல்லோருக்கும் இப்போது தெரியும். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன் செய்த பல இரத்தம்ஏற்றும் நிகழ்வுகள் வேறுவகை என்பதால் எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஜார் மன்னரின் குடும்பம் கொலைசெய்யப்பட்ட பகுதி துப்பறியும் கதையின் வேகத்துடன் நகர்கிறது. பூண்டோடு அழிக்க வேண்டும் என்பதே எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் இருந்துவரும் நடைமுறை.
நியண்டர்தால் என்றால் யார்?கோவேறுக்கழுதைகளால் ஏன் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை?நியண்டர்தாலுக்கும் குரோ-மேக்னனுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பின் விளைவுகள்? மூதாதையரான சிம்பன்ஸிக்கும் நமக்கும் மரபணுப் பிறழ்வு எப்போது நடந்திருக்கக்கூடும்?
பற்களில் இருந்து DNA எடுக்கமுடியுமா?
விந்து X இல்லை Y குரோமோசோமைக் கொண்டு செல்வது எப்படி குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கிறது? இது போன்ற பலப்பல கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான விடை இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.
தாய்வழிச்சமூகத்தில் ஏழு மகள்களில் முதலாவது உர்சுலா. ஐரோப்பாவில் 11சதவீதத்தினரின் மூதாய். அவளது கதையும் முடிவும் எவ்வளவு வித்தியாசமானது! வேட்டையாடுபவனை விட ஆபரணங்கள் கொண்டுவந்தவனைத் தேர்ந்தெடுத்த பெண்.ஜீனியா வித்தியாசமான பெண். பெண்கள் வேட்டைக்குச் செல்லாத காலத்தில் தந்தையுடன் சென்றதில் இருந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றது வரை. ஹெலினா நாற்பத்தேழு சதவீத ஐரோப்பியர்களின் ஆதித்தாய்.
கணவனுக்காகத் தன் கையால் செய்த ஆபரணத்தை வைத்துக் காத்திருந்து, அவன் மரணமடைந்த செய்தி கேட்டு, மற்றவர்கள் போல் மறுமணம் செய்யாது வாழ்ந்து முடித்த வெல்டா. குழுவை விட்டு மாறிய தாரா. இரண்டாம் குழந்தை பிறந்ததும் மனமாற்றம் அடைந்த காத்தரீன், விவசாயத்தை ஆரம்பித்த ஜாஸ்மின். ஏழு பெண்கள். பெண்களின் வழியே சமூகமும், மொத்த மரபணு பரிமாற்றங்களும். ஐரோப்பாவில் குறிப்பாக ஆங்கிலேயர்களும் ஆணாதிக்கவாதிகள் தான். அது எப்போதோ பின்னால் நேர்ந்திருக்கக்கூடும்.
முழுக்கவே Finance மாணவனான எனக்கு அதிக சிரமமில்லாது இந்த நூலைப் படிக்க உதவியது, திரில்லர் நாவல்களில் வந்த Forensic Science, குறிப்பாக Patricia Cornwell. தனது கதாபாத்திரத்திற்காக Medical examiner அலுவலகத்தில் ஆறாண்டுகள் பணி செய்தவர். அப்படியும் சில தகவல்கள் Beyond my head, வழமை போல் Biologyல் முனைவர் பட்டம் பெற்றவர் உதவினார்
உண்மைத்தகவல்களைக் கற்பனைக் கதைகள் கொண்டு சுவாரசியமாக எழுதப்பட்ட நூல் இது. பல கலாச்சாரங்கள் கொண்ட இந்தியமக்களிடம் மரபணுச் சோதனைகள் நடத்தினால் என்னவெல்லாம் கண்டுபிடிக்கலாம்! ஆர்வமுள்ளோர் இதே வரிசையில் வால்காவிலிருந்து கங்கை வரை மற்றும் சேப்பியன்ஸ் என்ற இருநூல்களைப் படிக்கலாம். பூமி எப்போதும் பெண்களை மையம்கொண்டே சுற்றி வந்திருக்கிறது, அந்த பூமியே தாம் தான் என்ற ஆண்களின் கற்பிதம் எல்லாப் பிரச்சனைகளையும் உருவாக்கியிருக்கிறது.
பிரதிக்கு:
பாரதி புத்தகாலயம் 044- 24332424
முதல்பதிப்பு மார்ச் 2021
விலை ரூ.375.