உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்- பெருந்தேவி:
ஆசிரியர் குறிப்பு:
மொழியில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யும் நவீனகவிஞர். எளிதில் திருப்தி அடையாது கவிதைகளைச் செதுக்கிச்செதுக்கி பின் பதிவிடுபவர். பலவருடங்கள் அகாடெமிக் ஆக இருந்தபோதும் நல்லிக்கியத்தை அடையாளம் தெரிந்து அனுபவிப்பவர். புனைவுலகத்தில் சமீபத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஏற்கனவே, ஸ்ரீவள்ளி என்ற பெயரில் எழுதியதும் சேர்த்து பத்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
பெருந்தேவியின் கவிதைகள் மேல் தீராக்காதல் எனக்கு. புற்றீசல் போல் கவிதைகள் மூச்சுத்திணற வைக்கும் காலகட்டத்தில், நல்லகவிதைகள் அடையாளம் காணப்பட்டு, காலத்தை எதிர்த்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் நல்லகவிதைகளை, காதலிக்கும் போதிருக்கும் முட்டாள்தனம் இல்லாமல், காதலிக்கும் அதே தீவிரத்தோடு நேசிப்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் கவிதைகளுக்குக் காட்டும் நேசச்சூட்டின் இதம் எழுதியவருக்கும் கொஞ்சம் சென்று அவர்கள் கண்மூடித் தூங்கும் போது, சிறிய புன்னகையைச் சிந்தச் செய்யட்டும்.
கொரோனா காட்சிகள் நகரெங்கும் பார்த்து நகரும் கவிதை. மரணம், Unemployment, இடப்பெயர்வு, OCD பற்றி எல்லாம் சொல்லிப் போகும் கவிதை, புறாவிடு தூதைக்கடந்து இப்படி முடிகிறது. கவிதைகள் தானே சிலவரிகளை எழுதிக்கொள்கிறதா என்ற என் சந்தேகம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
” ஒரு மூடிய அங்காடியின் முன்பு
சில முதியவர்கள் நிற்கிறார்கள்
ஒரு வேகமான காற்று
காலியான அடுக்குகளுக்குள்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
அவர்களைத் தாண்டி விரைகிறது
ஒரு பெரிய குழிக்கு அருகில்
கூட்டமாய்க்
காத்திருக்கின்றன பிணங்கள்
அவசரமாய் உள்ளே தள்ளுகிறார்கள்
வாகனத்தில் ஏறுகிறார்கள்
விடப்பட்ட ஒரு பிணம் முணுமுணுக்கிறது
வாகனத்திலிருந்து ஒருவன்
திரும்பிப் பார்க்கிறான்
அவன் கண்களுக்குள் நுழைகிறது”
கொரோனாவுக்குப் பின் என்ற தலைப்பிட்ட கவிதை இது. பேரழிவிற்குப் பின் பேதங்கள் இல்லை, அன்பு நிலைக்கட்டும்.
“எனக்கு யாரோடும் விரோதமிருக்காது
யார் பாராமுகமும் வருத்தம் தராது
என் இதயம் சுத்திகரிப்பு இயந்திரத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டது
கடைசி எதிர்பார்ப்புகள்
புதைக்கப்பட்ட இடத்தில்
யதேச்சையாகக்கூட
பூஞ்சை முளைக்கவில்லை
நானும் தயாராகவே இருக்கிறேன்
பெயரற்ற வழவழத்த கூழாங்கல்லாக
ஓசையற்ற பாதையற்ற மலையடிவாரத்தில்
ஒளிந்து கிடப்பேன்”.
இரவில் பலருக்கு எட்டுமணி நேரம் கண் மூடிக்கண் திறக்கும் கணம். தனிமையும் வெறுமையும் சேர்ந்தால் எல்லா இரவுகளும் நீள்இரவுகள். இந்தக்கவிதைக்கும் அந்தப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை எனினும் கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் என்று பாடும் சுஜாதாவின் சோகமுகம் தோன்றுகிறது.
” சிலசமயம்
உன்உதடுகள் கோணுகின்றன
உன்னை நினைத்துக்கொள்ள
யாராவது இருக்கிறார்களா
உன்னில் நீயென எதுவும் மிச்சமில்லை
ஒரு பெருமூச்சு எழும்புகிறது
கூரையில் முட்டிமோதி உடைகிறது
மூச்சுகள்
உன்னைச் சுற்றி வளைக்கின்றன
வேகவேகமாகவே தள்ளுகிறாய்
அவை நீளப் புழுக்களாகின்றன
ஊர்கின்றன
உன் முகத்தில் உன் உதட்டில்
உன் இமைகளுக்குள் காதுகளுக்குள்
ஆனால் பொறுத்துக் கொள்கிறாய்
உனக்குத் தெரியும்
சில மணிநேரங்களுக்குப் பின்னர்
ஒரு பொய்யான காலை
கிறுக்குப் பிடிப்பதிலிருந்து
உன்னைக் காப்பாற்றிவிடும்”.
இது ஒரு குடும்பக்கதை. சிறுகதையாய் சொன்னால் பத்துபக்கங்களுக்குள் சொல்லலாம். ஆனால் பத்துவரிகளில் இந்தக்கவிதை கடத்தும் அதே உணர்வு அழுத்தத்தை அது தருமா? தரலாம், தரமுடியாமலும் போகலாம்.
” அவள் அம்மா அவளிடம்
எப்போதும் அறிவுறுத்துவார்
வட்டமாக வழவழப்பாக இரு
………………
அவள் வட்டத்திலிருந்து நீள்வட்டமானாள்
அம்மா போதுமென்று சொல்லும்வரை
நீண்டாள் ஒரு நாள்
நீண்ட கோடாக வீட்டுக்குவந்து நின்றாள்
இத்தனை சப்பையாகியிருக்க வேண்டாம் என்று அம்மா
நினைத்ததைச் சொல்லவில்லை
அப்பா இடுங்கிய கண்களால்
அக்கறையில்லாமல் பார்த்தார்
அவள் வாசலிலேயே
மடிந்து உட்கார்ந்தாள்
ஒரு பக்கமே இல்லாத
கால்களை விரித்த
பசித்த முக்கோணமாக.”
கொரோனாவின் தாக்கம் பல கவிதைகளாக உருவெடுத்திருக்கின்றன. சுற்றிலும் பேரழிவு நடந்து கொண்டிருக்கையில் கவிமனம் அதில் உழலாமல் வெளியே வருவது கடினம்.
மாடவீதியில் ரோபாட் போன்ற கவிதைகள் கொரோனாவைச் சுற்றியே வந்தாலும் பெருந்தேவியின் நித்தியதேடலான புதுமொழியை ஏந்தியே வருகின்றன. முருங்கைக்காயை மறைக்கும் பாட்டியும் சிரிக்கத்தெரியாத ரோபாட்டும் அவலச்சூழலில் dark humour.
இத்தொகுப்பிலும் அநேகமாக எல்லாமே எதிர்கவிதைகள். அழகியலைத் துறந்த, உணர்ச்சியோ கிளர்ச்சியோ மூட்டாத கவிதைகளை எதிர்கவிதைகள் என்று சொல்லலாம். குங்குமம், கண்மை என்று பார்த்தமுகம், முகம்கழுவித் துடைத்துத் திரும்புகையில் பளிச்சிடுமே, அது போன்ற அழகு எதிர்கவிதைகள்.
என் வாழ்க்கையிலிருந்து தான் கவிதை எழுதுகிறேன், எமக்குத்தொழில் கவிதை என்று பல அறிவிப்புகள் கவிதைகளினூடே தந்திருக்கிறார். கவிதையை உபதொழிலாக்கினால் பல்லிளிக்க ஆரம்பித்து எல்லாரும் பார்த்து சிரித்தபிறகு கடைசியாக நமக்குத் தெரியவரும். “சோகக் கதை என்றால் சோடி இரண்டு ரூபா!
காதல் கதை என்றால் கை நிறையத் தரவேணும்!” என்ற புதுமைப்பித்தனின் அதே எள்ளல் நிறையக் கவிதைகளில், குறிப்பாக விசேஷச்சலுகை கவிதையில்.
சொற்களை சொக்கட்டான் உருட்டுவது போல் உருட்டுகிறார், அபலையாய், அகங்காரியாய் தன் கவிதைகளில் பலமுகங்கள் எடுக்கிறார், சாந்தோம் கடற்கரையில் தனியாக நிற்கிறார், அமெரிக்காவில் கனவுகளை துணைக்கு வைத்துக்கொள்கிறார், காலத்தில் பின்னகர்ந்து அம்மா அப்பாவின் அதிகபுன்னகையின் காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். Absurdism பெருந்தேவியின் கவிதைகளில் அடிக்கடி வந்து போகும். தமிழ் நவீன கவிதைகளுக்குப் பெருந்தேவியின் பங்களிப்பு தொடர்கிறது, அந்தப் பங்களிப்பின் பெறுமானம் பெரிதாக உணரப்படாத சூழலிலும்.
பிரதிக்கு:
உயிர்மை பதிப்பகம் 044- 48586727
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.110