அந்திமழை மே 2021 சிறுகதை:
மாபெரும் தாய் – அகரமுதல்வன்:
” தொன்மை உறைக்குள் செருகப்பட்ட மிகநீண்ட கருப்புநிற வாள்களாய் திசையெங்கும் பனைகள் உடல் நீட்டி நின்றன. காம்பினில் அகாலமுடைத்து இதழ்விரிக்கும் நித்தியகல்யாணியின் நறுமணம் சூரியத்தழலின் நரம்புகளையும் மயக்கியதைப் போல காலைவெயிலில் சுகம் சுழலும்”.
அகரமுதல்வனின் மொழிநடை மீது எப்போதும் பொறாமை எனக்கு. நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர் எழுதிய கதை இது. கன்னி நாவலைப் படிக்கையில் ஒரு அரைமயக்க நிலையில் வாசித்ததைப் போலவே இந்தக்கதையையும் படிக்கலாம்.
சீதா, திரௌபதி போலவே ஆச்சியும் மண்ணுக்குள் இருந்து வந்தவள். மனித யத்தனத்தில் முடியாதவற்றை தன் மந்திரக்கத்தியால் தீர்க்க வல்லவள்.
கோபிதாவிற்குப் பேய் பிடிப்பதாகச் சொல்லப்படுவது அவள் பருவமடைந்த உடனேயே என்பது முக்கியமான விசயம். உடலிலிருந்து எக்கச்சக்கமாக இரத்தம் வெளியேறியதைப் பார்த்து பயந்து கோபிதாவுக்கு Hallucination என்று நினைப்பவர் நினைக்கலாம். பேயை நம்புபவர் நம்பலாம்.
எஸ்தர் சிறுகதையில் பஞ்சம் காரணமாக ஊரைக்காலி பண்ணுபவர் பாட்டியை விட்டுவிட்டு நகரவேண்டியதாகிறது. பாட்டி நிர்கதியானவள். ஆனால் ஆச்சி அவளே ஊரை விட்டு வரமுடியாது என்கிறாள். அவள் விடுதலையின் பீடத்தில் ஓர் நிமிர்வு. மகாசக்தி அல்லது மாபெரும் தாய். ஆச்சி ஒரு Metaphor. அகரமுதல்வன் அனுபவித்து எழுதிய மற்றுமொரு கதை.