பீரங்கிப்பாடல்கள் – என்.எஸ்.மாதவன்- மலையாளத்தில் இருந்து தமிழில் இரா.முருகன்:
என்.எஸ்.மாதவன்:
திருப்பணித்துராவில் பிறந்தவர். என்.எஸ்.மாதவனின் தந்தை ஐ.ஆர்.எஸ். அதிகாரி. மாதவன் I A S அதிகாரியாகப் பணியாற்றியவர். மலையாள நவீன இலக்கியத்தை மடைமாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். சாகித்ய அகாதமி விருதும், மூன்று முறை கதா விருதும் பெற்றவர். இவருடைய சிறுகதைகளில் பலத்த கவனத்தைப் பெற்றவை. இந்த நாவல் இதுவரையான இவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுவது.
இரா.முருகன்:
சிறுகதைகள், கவிதைத்தொகுப்பு, நாவல்கள், கட்டுரைத் தொகுப்பு என்று முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மலையாளத்தில் இருந்து பல மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இந்த நூல் குறித்து இவரது முன்னுரையில் சொல்கிறார். ” நான் இல்லாவிட்டாலும் இறுதியில் வசனம் இருக்கும், இந்த நூலாக.”
ஏன் பத்துவருடங்கள் இடையில் எழுதவில்லை என்ற இரா.முருகனின் கேள்விக்கு என்.எஸ். மாதவனின் பதில்;
“பேச்சுத் துணைக்கு இன்னொரு சக மலையாளியோ, படிக்க மலையாளப் பத்திரிகையோ இல்லாத நிலை. அந்த இடமும் சூழலும் என் சிந்தனையை, எழுத்தை வெகுவாகப் பாதித்தன. என் கதாபாத்திரங்களின் மொழியைப் பேசி, அவர்களின் உணவை உண்டு, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை நானும் வாழ்ந்திருக்காமல் நான் இலக்கியம் படைக்கமுடியாது. பெரும்பாலும் மலையாளத்தில் எழுதி வந்த நான் எழுத்துத் தடை வந்தடைய அடுத்த பத்தாண்டுகள் மாதவன் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜீவித்திருக்க, மாதவன் என்ற எழுத்தாளர் காணாமல் போனார்.”
எட்வினா தெரேசா மரியாகொரத்தி அன்னா மார்க்கரீத்தா ஜெசிக்கா, 1951ல் லந்தன்பத்தேரி என்ற கற்பனைத்தீவில் கணக்குத்திருடிய வீட்டில் பிறக்கிறாள். அவளுடைய தாத்தா போர்த்துகீசியரிடம் வேலைபார்க்கும் பொழுது கப்பல்கட்டும் கணக்கைத் திருடிப் படகுகள் செய்ய ஆரம்பித்ததால் கணக்குத்திருடிய வீடு என்ற பட்டப்பெயர். அவள் தந்தை வயதுகாலத்தில், இளம்மனைவிக்கு குழந்தை பாக்கியம் கேட்டு மண்ணில் பல அதிசயங்கள் செய்த கர்த்தரிடம் இறைஞ்ச, இடி இப்போது விழித்துக்கொள் என்று ஆணையிட்டதும் முயற்சிசெய்து உருவான கணத்திலிருந்து அவள் கதையைச் சொல்கிறாள். நான்லைனியர் முறையில் கதை பலதிசைகளில் பயணிக்கிறது. நாவல் முழுதும் ஜெசிக்கா அவள் கதையைச் சொன்னாலும் கட்சி அரசியல், மத அரசியல், சமூக அரசியல் என்று இது முழுமையான அரசியல் நாவல்.
கொச்சியில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தக் கற்பனைத் தீவில் கதை நடக்கிறது. கொச்சி முதலில் போர்த்துகீசியராலும் பின்னர் டச்சு மற்றும் ஆங்கிலேயராலும் கைப்பற்றப்பட்ட பிரதேசம். சமீபத்திய கணக்கெடுப்பின் படி ஏறக்குறைய 40% கிருத்துவர்கள் (அதில் நிறைய உட்பிரிவுகள்). இவர்கள் இல்லாமல் சீனர்கள், அராபியர்கள், யூதர்கள், இத்தாலியர்கள் என்று பலநாட்டினர் தொடர்ந்து வந்ததால் கொச்சி ஒரு கலவையான கலாச்சாரம் கொண்டது.
எல்லா மதங்களிலும் எல்லாக்கால கட்டங்களிலுமேயே மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பதில்லை. பஞ்சம், படை, கொள்ளைநோய், வைசூரி வராமல் தடுக்க புனித செபஸ்தியானோஸைக் கொல்ல எய்தஅம்பை விட்டுத் தடுக்கலாம் என்று அப்பாவி ஜனங்கள் முடிவெடுக்கிறார்கள்.
1950ல் இருந்து 1965 வரையுள்ள காலகட்டத்தில் குறிப்பாக லத்தீன் கிருத்துவர்கள் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல் இது. சமூக, அரசியல் மாற்றங்கள் மதநம்பிக்கைகளிலும் பிரதிபலிக்கிறது. சவிட்டு நாடகங்கள் போல் கிருத்துவர்கள் விடியவிடிய சொல்லும் கதை ஒரு வரி இருவரிக் கதையாக மாற்றம் கொள்கிறது. தவிர்க்க இயலாது இந்திய சரித்திரமும் முன்னும் பின்னும் போய் வருகிறது.
உலகத்தின் அதி அற்புதமான பிரியாணியைச் சமைக்கிறார்கள், மலையாளக் கவிதைகளை ரசிக்கிறார்கள், இறுதித் தீர்ப்பு நாளுக்குப் பயந்து அளவான குற்றங்களை செய்கிறார்கள், அம்மை ஊசிக்குப் பயப்படுகிறார்கள், சினிமாக்களில் மோகம் கொள்கிறார்கள், நாடகத்தில் காந்தி கோட்ஷேயைக் கொல்கையில் மகிழ்கிறார்கள், நேருவின் தோல்விக்குப் பின்னான மரணத்திற்கு வேதனைப்படுகிறார்கள், கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்படுகிறார்கள், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் கேரளாவில் முதன்முறையாக கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைக்கிறார்கள், இடது வலது என பிரிவு ஏற்படுகிறது, கழிப்பறை இல்லாது தேவாலய நிலத்தில் மலம்கழித்த பெண்ணுக்கு பிசாசு பிடித்ததாகப் பழிவிழுகிறது, சிறுபெண்ணுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுகையில் திருச்சபையும், கட்சியும் நாங்கள் இதில் தலையிட முடியாது என்கிறார்கள், அப்பாவி மக்கள் சேலை முள் பழமொழியைச் சொல்லி அமைதிகாக்கச் சொல்கிறார்கள், மாதவனின் இளமைக்கால நினைவுகள் நாவலாகி இருக்கிறது.
நேர்காணலில் கூறியது போல இந்தநாவலுக்காக நிறையத் தகவல்களைத் திரட்டியிருக்கிறார், சவிட்டு நாடகத்தின் பழைய அபூர்வமான பிரதிகளை வாசித்திருக்கிறார், நிறைய பயணம் செய்திருக்கிறார், நிறையத் தோழர்களுடன் தகவல்களுக்கு சந்திப்புகள் நடத்தியிருக்கிறார். மலையாள வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல் இது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலை, சிறிதும் சுவாரசியம் குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார் இரா.முருகன். கிண்டில் அளவில் 617 பக்கங்கள். பக்க அளவில் மட்டுமன்றி உள்ளடக்கத்தில் இருக்கும் நாட்டார் பாடல்களாலும் இந்த மொழிபெயர்ப்பு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியது. சிறப்பாக செய்திருக்கிறார்.” பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும”. அதற்காக அச்சுப்பிரதியை விட கிண்டில் பிரதிக்கு அதிக விலை வைக்கக்கூடாது பதிப்பகத்தாரே! வீட்டை புத்தகங்களுக்கு விட்டுவிட்டு வெளியில் படுக்கும் நிலை வரக்கூடாது என பயந்துதானே கிண்டிலில் வாங்குகிறோம்.
https://www.amazon.in/dp/9386737485/ref=cm_sw_r_wa_apa_glt_fabc_N9FK9MAWQTMDEH309WHS