நீள்பதிவு. ஆர்வமிருப்போருக்கு மட்டும்.

Aspects of the Novel – E M Forster:

Forster ஆங்கிலேய எழுத்தாளர். விக்டோரியன் எழுத்தாளர்களில் ஒருவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகம், விமர்சனம் என்று பலதளங்களில் இயங்கியிருக்கிறார். இந்தியா உட்பட பலநாடுகளில் வசித்தவர். இவருடைய Machine Stops என்ற Sci Fi கதையும், A passage to India என்ற நாவலும் எல்லோருக்கும் தெரிந்தவை. இவருடைய அல்புனைவு நூல்களில் முக்கியமானது இந்த நூல்.

1927 ல் எழுதப்பட்ட நூல் இது. அதன் பிறகு உலக அளவில் நாவல்கலையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள். முக்கிய விருதுகளான National Book Awards மற்றும் புக்கரின் இரு விருதுகளில் இடம்பெறும் நூல்கள், நாவல்களை வேறு கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டன. இருப்பினும் நாவலுக்குரிய அடிப்படைக் கூறுகள் மாறாமல் எழுதும் தமிழ்சூழலில் இந்த நூல் கொஞ்சம் வெளிச்சத்தைத் தூவக்கூடும்.

முன்னுரையில் Forster:

“எந்த ஆங்கிலேய நாவலாசிரியரும் டால்ஸ்டாய் அளவிற்கு மேன்மையாக மனிதனின் வாழ்க்கையை ( அகவாழ்க்கையும், ஹீரோவுக்குரிய வாழ்வும் சேர்த்து) சித்தரிக்கவில்லை. எந்த ஆங்கில நாவலாசிரியரும் தாஸ்தயேவ்ஸ்கி அளவிற்கு ஆத்மவிசாரத்தை ஆழமாக எழுத்தில் கொண்டு வரவில்லை. எந்த ஆங்கில நாவலாசிரியரும் Proust அளவு உள்ளுணர்வைச் சித்தரிக்கவில்லை. ஆங்கிலக்கவிதைகள் உலகில் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் ஆங்கில நாவல்கள் அவ்வளவு வெற்றிகரமாக அமையவில்லை”

Bronte sisterன் மூன்று புகழ் வாய்ந்த நூல்கள், Jane Austenன் கதையுலகம், Mary Shelly, Orwell, Dickens, Conrad, Virginia Woolf, Hardy, Eliot, D.H.Lawrence உள்ளிட்ட யாரும் வெற்றிகரமான உலகப்புகழ்பெற்ற நாவலுக்கு இணையாக எழுதவில்லை என்றால் உலகத்தில் நாவலே இல்லை என்றே நான் சொல்வேன். Wuthering Heights, Jane Eyre, Sons and Lovers க்கு இணையாகவும் வேறு நாவல்கள் யாரும் எழுதவில்லை.

நாவலின் அம்சங்கள் என இவர் ஏழைக் குறிப்பிடுகிறார். அவை:

  1. கதை (Story)
  2. கதை மாந்தர் (People)
  3. கதைக்கரு (Plot )
  4. கற்பனை ( Fantasy)
  5. கணிப்பு (Prophesy)
  6. கதைவடிவம் (Pattern)
  7. கதைச்சீர்பிரமாணம் (Rhythm)

கதை:

நாவலின் மிகமுக்கிய அம்சம் கதை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஒருவரியில் கதை சொல்வது ஆபத்தான விசயம். மோகமுள், பாபு யமுனாவை அடைவது, அபிதா காதலியின் மகளிடம் காதலியைத் தேடுவது, கன்னி Incest love என்று ஒருவரியில் சொல்வது எவ்வளவு அமத்தம்! War and Peaceஐ எப்படி ஒரு வரியில் சொல்வது?

எனவே “கதை என்பது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆவலைத் தூண்டும் வகையில் தொடர்ந்து செல்வது. ” அப்படி இவர் சொல்வதை எடுத்துக் கொண்டால் திரில்லர் நாவல்கள் தான் கூடுதல் ஆவலைத் தூண்டுவது. இவர் எடுத்துக் கொண்டது எல்லாமே உலக கிளாசிக்ஸ் எனவே இலக்கியத்தரம் இல்லாதவற்றைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை.

அடுத்து இவர் சொல்வது கதைக்காலம். சுருக்கமாகச் சொன்னால் War and Peaceம் சரித்திர நாவல் பொன்னியின் செல்வனும் சரித்திர நாவல். இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்? War and Peaceல் இருக்கும் சரித்திரத் தகவல்கள் எல்லாம் உண்மையானவை. அந்தக்கதை ஒரு காலகட்டத்தின், ஒரு சமூகத்தின் இலக்கியப் பிரதிபலிப்பு. அதனால் தான் அது இன்றும் உலகமெங்கும் இன்றும் போற்றப்படுகிறது. பொன்னியின் செல்வன் பாட்டி சொல்லும் கற்பனைக் கதை, எந்த வாழ்வையும் பிரதிபலிக்கவில்லை, இலக்கியத்தன்மை துளிகூட இல்லை, பதினெட்டு வயதுக்கு மேல் படிக்க முடியாத நூல்.

அடுத்து நாவலில் கதை ஒரு காலகட்டத்தைத் தாண்டியதாக இருக்க வேண்டும் என்கிறார். இன்றைய சூழலில் அது பொருந்தாது. தமிழின் நல்ல நாவல்களில் ஒன்றான “நாளை மற்றுமொரு நாளே” ஒரேநாளில் நடப்பது.

அடுத்தது இப்போது வரும் உலகநாவல்களில் கதையம்சத்தை விட, காட்சி சித்தரிப்புகள் (Handmaids Tale) உணர்வுகள் (Colour purple) கதைக்களத்திற்கான ஆய்வுத் தகவல்கள் (Where the Crawdass Sing) யுத்திகளை உபயோகித்து கதையைக் கொண்டு செல்தல் (The House of the Spirits) அல்புனைவுகளின் பாணியில் நாவல் (The Employees) என்பது போல் இவர் காலத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் மிகப்பெரிய மாறுதல் கதை சொல்லலில் நடந்திருக்கிறது.

கதைமாந்தர்:

உங்கள் மனைவி/கணவர் இல்லாத போது அவரது அலைபேசியை ஆராய்ச்சி செய்கிறீர்கள், ஏனெனில் அவர்குறித்து தெரியாத விசயங்கள் இன்னும் உங்களுக்கு இருக்கும் என்று உறுதியாக நம்புவதால். ஆனால் நமக்கு மலர்மஞ்சம் பாலியை நன்றாகத் தெரியும், யமுனாவைத் தெரியும், காகித மலர்கள் பங்கஜத்தைத் தெரியும், கரமுண்டார் வீடு காத்தாவைத் தெரியும். பார்க்காத நூற்றுக்கணக்கான பெண்களை/ஆண்களை நமக்கு முழுதும் தெரிய வைத்தது அந்த நாவலாசிரியர்கள் தான்.

ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ஹென்றியும், ஜே ஜே சில குறிப்புகள் ஜே ஜேயும் எப்படி இந்த உலகத்தில் இருந்து அந்நியமாகிப் போகிறார்கள்? நாவலாசிரியர் அவர்கள் மூலம் வாசகருக்குக் கடத்தவிரும்பும் செய்தி என்ன?

Sons anf Loversன் Gertrudeஐ நம்மால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை.
Wuthering Heightsல் Heathcliff அத்தனை கொடுமைகள் செய்தும் நம்மால் ஏன் அவனை வெறுக்க முடியவில்லை. Emma வின் குறைகள் நமக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் ஏன் அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைக்கிறோம்?

எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் நாவலாசிரியர் எப்படி கதாபாத்திரத்தை வாசகர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படிச் சித்தரிக்கிறார்.
அன்னாவின் அலைக்கழிப்புகள், மனஅவசங்கள் முழுமையாகப் பதிவாகியிருக்கின்றன. அன்னா கரீனினா படித்த யாரும் அன்னாவைத் திட்டுவதில்லை. அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாள் மணவினை தாண்டிய உறவை அவள் வாயாலேயே ஒத்துக் கொள்கிறாள். ஆனால் அதற்கான காரணம்/நியாயம் எதையும் ஒருவார்த்தை சொல்வதில்லை. தி.ஜா இங்கே அப்புவின் கதையைச் சொல்கிறார், அலங்காரத்தம்மாள் கதையை இல்லை. இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகையை ஏற்றுக் கொண்டோம், புதுமைப்பித்தன் கல்யாணியை ஏற்றுக்கொண்டோம். இதே தி.ஜாவின் தங்கம்மாள் மீதும் அனுதாபம் கொண்டோம். ஏன் அலங்காரத்தம்மாள் மீது எல்லோருக்கும் கோபம்? அவள் காரணம் சொல்லவில்லை. அதனால் உங்களால் மன்னிக்க முடியவில்லை.

கதைக்கரு:

கதைக்கரு என்பது எப்போதும் நம்முடைய இரகசிய வாழ்க்கை. எம்.ஜி.ஆர் இடத்தில் திரையில் ஒரு கணமேனும் ரசிகன் தன்னைச் சேர்த்துக் கொள்கிறான். பெண்கள் வலிய வந்து காதலிப்பது என்பது Sexual poverty நிறைந்த ஆண்சமூகத்தில் வெற்றிகரமான பார்முலா. Austen அந்த உலகத்துக்கு இங்கிலாந்தின் சிறுநகருக்கு நம்மைப் பதினெட்டாம் நூற்றாண்டுக்குத் தூக்கிச் சென்றதால் அந்தக்கதைக்கரு நமக்குப் பரிச்சயமானதாகிறது.

ராஜா இறக்கிறார் அதன் பின் ராணி இறக்கிறாள் என்பது கதைக்கரு. இங்கே ராஜா ஏன் இறக்கிறார்? முதுமை, நோய், சதி, பயம், கொலை எதுவாக வேண்டுமானாலும் இறக்கலாம். அந்தக் கதையையே கொஞ்சம் கொஞ்சமாக நாவல் சொல்லப்போகிறது. சரி ராணி ஏன் இறக்கிறாள்? ராஜா இறந்த வருத்தத்தில் இறக்கலாம். ராஜா நான் மந்திரியோடு வைத்த உறவு தெரிந்து இறந்தாரே என்ற குற்ற உணர்வில் இறக்கலாம். தீராக்காதலில் துணையைப் பிரிந்த உடன் இறக்கலாம். மந்திரியே விஷம் வைத்திருக்கலாம். எனவே ராஜா, ராணி இறப்பது என்பது கதைக்கரு. எப்படி என்று ஐயம்திரிபுஅற சுவாரசியமாகச் சொல்வது நாவல்.

கற்பனை;

கற்பனை, Fantasy என்பது மனோரதத்தில் கற்பனைக்குதிரைகளை தட்டி விட்டு உட்கார்ந்து கொள்வது அல்ல. Frankestin Maryஇன் கற்பனை. Insect காஃப்காவின் கற்பனை. ஆனால் அந்தக் கற்பனை எல்லாமே நிகழ்கால வாழ்வின் ஏதோ ஒரு பிரச்சனையை வாசகருக்கு உரித்து. காட்ட உதவின. Fablesல் Fantasy element இருந்தாலும் பெரும்பாலும் இலக்கியம் ஆவதில்லை. Gulliver’s travelsல் அவன் முன்பின் அறியாத தீவுகளுக்குச் செல்வதும், யவனராணியில் இளஞ்செழியன் பல தீவுகளுக்குச் செல்வதும் ஒரே இலக்கியத்தரம் வாய்ந்ததா என்று யோசியுங்கள். இரண்டுமே கற்பனைப் பயணங்கள், ஆனால் முன்னது உலகின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்று.

எனவே கற்பனை என்பது, நாவலுக்கு அத்தியாவசியமான அம்சமாக இருப்பினும் நாவல் இலக்கியத்தரம் கற்பனையினால் தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லா நாவல்களும் சொந்த/பார்த்த வாழ்க்கைகளில் இருந்து எழுதப்படுவதில்லை. கற்பனை இல்லாது நாவல் கடினம். சுருக்கமாகச் சொன்னால்
கற்பனை எங்கெல்லாம் ஒரு நிதர்சனத்தை வலியுறுத்த விரும்புகிறதோ அப்போது அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சாபவிமோசனம் போன்ற கதைகள் இந்தப்பிரிவில் அடங்குகின்றன. Alex Haley ன் Roots Semi fiction. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட யாத்வஷேம் Semi fiction. யாத்வஷேம் போல தமிழில் ஏன் நாவல்கள் வருவதில்லை? இரண்டு காரணங்கள், ஒன்று நீண்ட ஆய்வுக்குத் தேவையான பொறுமையோ இல்லை நேரமோ இங்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பன்னிரண்டு வருட ஆய்வு யாத்வஷேம். இணையம் வளர்ந்ததில் தமிழில் Wikipedia writers வளர்ந்திருக்கிறார்கள். இரண்டாவது, ஜெருசலேம், லாஸ் ஏன்ஜல்ஸ், ஐரோப்பா என்று கதைக்காக காசு செலவழித்து அலையும் மனநிலையோ பொருளாதாரமோ இங்கே இல்லை. நேமிசந்திராவின் கன்னடப்புத்தகங்கள் தமிழ்ப்புத்தகங்களை விட அதிகம் விற்கப்போவதில்லை. ஆனால் எழுத்தாளரின் Ego என்று ஒன்று இருக்கிறது. அதற்கு விலையில்லை. அல்லது நேமிச்சந்திரா அதற்குக் கொடுத்த விலை தான் ஆய்வும், பயணங்களும். தமிழில் Ego என்பது இலுப்பைப் பூக்கள் தான் சர்க்கரையை விட இனிப்பு என்று உறுதியாய் நம்புவது.

கணிப்பு:

கணிப்பு Prophesy என்பது Nostradamus சமாச்சாரமோ இல்லை போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்பதோ அல்ல. இந்த மரம் சாட்சியாக நானும் இவர்களும் என்ற ஆதவன் சிறுகதையில் கணவன் ஒரு கணிப்பும் வாசகன் ஒரு கணிப்பும் கணிப்பார்கள். ஆதவனின் பெரும்பாலான சிறுகதைகள் இந்த கணிப்பு என்ற இலக்கணத்தில் அடங்கும். பார்த்தீர்களா உலகம் எப்படியாகிவிட்டது என்று கல்கித்தனமாகவோ அல்லது உலகம் மொத்தத்திற்கும் அறிவுரை சொல்லவே பிறந்ததாக உறுதியாக நம்பிய மு.வ அல்லது லட்சியபுருஷர்கள் புருஷிகள் மட்டும் மண்ணில் வாழத்தகுதி பெற்றவர்கள் என்ற நா.பாத்தனத்தையும் விட்டு வெகுதூரத்தில் இருப்பது இந்தக் கணிப்பு. Preaching செய்வது பாதிரியாரின் வேலை, இலக்கியவாதியின் வேலையல்ல.

கதைவடிவமும் கதைச்சீர்பிரமாணமும்;

James Hadley Chase (இவர் எழுதியது இலக்கியமில்லை) கதைகளில் ஒரு Pattern இருக்கும். ஆரம்பிக்கையில் நல்லவனாக இருக்கும் கதாபாத்திரம் பின்னர் ஆசையினால் சமூகவிரோதியாக மாறும். முரகாமியின் நாவல்களில் பிரதான கதாபாத்திரம் எதையோ தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டே இருக்கும். இது நாவலாசிரியரின் Pattern.

கதையின் வடிவம் என்பது, அந்தக் கதைக்குப் பிரத்தியேகமானது. எம்.கோபால கிருஷ்ணனின் மனைமாட்சி நாவலில் ஒரு Pattern இருப்பதைக் கவனியுங்கள். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள். பள்ளிகொண்டபுரத்தில் ஒரு Same pattern அது போல் புயலிலே ஒரு தோணிக்கு. எல்லா நல்ல இலக்கியப் படைப்புகளிலும் ஒரு வடிவம் கலையாது அமைந்திருக்கும்.

இசையில் இருப்பது போல் எழுத்திலும் ஒரு Rhythm இருந்து கொண்டே இருக்கும் My love is like a red red rose என்பது போல் எழுதுவது மட்டும் Rhythm இல்லை. தமிழில் Rhythm நன்றாக வந்திருக்கும் நாவல் என்றால் உடன் தோன்றுவது கிருபாவின் கன்னி. லாசராவின் ரிதம், தி.ஜாவின் ரிதம் அசோகமித்ரனின் ரிதம் கிராவின் ரிதம், ஆ.மாதவன், சா.கந்தசாமியின் ரிதம் என்பது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏற்கனவே கூறியது போல் நாவல்கலை சமீபகாலங்களில் யுத்திகளினாலும், வடிவத்தாலும், உள்ளடக்கத்தாலும் நிறையவே மாறியிருக்கிறது. இவர் சொல்வது போல் நாவல் என்பது 50,000 வார்த்தைகளை மிக வேண்டும் என்ற வரையறைகளை எல்லாம் யாரும் இப்போது நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் அடிப்படைக் கூறுகள் பல இன்னும் மாறவில்லை. ஆங்கிலேயர்களின் நாவல்கள் மட்டுமன்றி அவர் காலத்திய உலக இலக்கிய நூல்களை எடுத்துக்கொண்டு, சில நேரங்களில் அந்த நாவல்களின் பத்திகளைக் கொடுத்து, ஒப்புமைப்படுத்தி, வித்தியாசப்படுத்தி அவரது கருத்தைச் சொல்கிறார்.

Magical realism போன்ற யுத்திகள் இவர் இதை எழுதியபின் வந்தவை. When we Cease to Understand the World, The Employees போன்ற முழுக்கவே ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நாவல்கள் அப்போது இல்லை.
எனவே இந்த நூல் நாவல் குறித்த அடிப்படைப் புரிதலை மட்டுமே வழங்கும். தொடர் வாசிப்பு, பரந்த வாசிப்பு மட்டுமே நாவல் குறித்த மேலதிகத்தகவல்களை வழங்கும். நாவலாசியர்களும் நாவல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள வாசகர்களும் தவறாது வாசிக்க வேண்டிய நூல் இது.
https://www.amazon.in/dp/B0119Q1A1Q/ref=cm_sw_r_wa_apa_glt_VYWZ862RH2JCQTZXV1C5

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s