தாயார் சன்னதி – திருநவேலி பதிவுகள்- சுகா:
ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலியில் பிறந்தவர். பாலுமகேந்திராவின் மாணவர். படித்துறை படத்தின் இயக்குனர். பல திரைப்படங்களில் வசனகர்த்தா. மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல் இவரது திருநெல்வேலி நினைவுகள்.
முதல் கட்டுரையே புத்தகத்தை முடிக்காமல் கீழே வைக்கக்கூடாது என்று நம்மிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்கிறது. திருநெல்வேலியில் மட்டுமல்ல, மதுரையைச் சுற்றிய கழுதை கூட வெளியில் போகாது என்பார்கள். அத்துடன் இன்னொரு விசயம், சிறுவயதில் நம்மீதும், பிறர் மீதும் நாம் கொண்ட அனுமானங்கள் எல்லாவற்றையுமே காலம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைத்துப் போடுவது.
இசை குறித்து, கர்நாடிக் ராகங்கள் குறித்துப் பல கட்டுரைகளில் அங்கங்கே தகவல்கள் வருகின்றன. எல்லா ராகங்களையும் சாருகேசிக்கு மாற்றும் திறமை வாய்ந்த பாடகர்! ஹார்மோனியம் கட்டுரை இவரது இசை ஈடுபாட்டையும், ஞானத்தையும் சொல்லும் கட்டுரை.
நுட்பமான நகைச்சுவை, புத்தகம் முழுதும் வந்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் சினிமா பாடல்கள் சிறுவயதில் பள்ளியில் கேட்ட பாடல்களை ஞாபகப்படுத்துவது, ஆறாவது படிக்கும் மகனை உடையவன் மனைவியின் சொந்த ஊரில் அவள் நல்ல பெண்தானா என்று விசாரித்துத் தெரிந்து கொள்வது, அம்பி நிமிர்ந்து பார்க்காததுக்கு சொல்லாத காரணம், விஜயலலிதாவுக்கும் விஜய நிர்மலாவுக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் தாத்தாவிற்குக் கோபம் வருவது, ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பாக்கல, என்பதுபோல.
வீரையன் தாத்தா போல வழிப்போவாருக்கு எல்லாம் துணைபோய் வாழ்க்கையைக் கழித்தவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். கல்யாணம், இழவு எல்லா வீடுகளிலும் சொந்த வீட்டு விசேஷம் போல ஓடியாடிக் கொண்டே இருப்பார்கள். இப்போது வாழ்க்கை சுருங்கி நம் பாட்டை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறோம்.
முழுக்க முழுக்க திருநெல்வேலி வட்டார வழக்கு, அங்கிருக்கும் மக்கள் குறித்த இவரது நினைவுகளில் திருநெல்வேலி மணம் வீசுகிறது. வண்ணதாசன் பாஷையில் தாமிரபரணி ஈரம் சொட்டுகிறது. ஊர் என்பது என்ன? நம் நினைவுகளில் இருக்கும் மக்களும் நிகழ்வுகளும் தானே. அங்கு சாப்பிட்ட சொதி மற்றும் சுண்டக்கரியின் ருசி நினைவில் இன்னும் தங்கியிருக்கிறது. கூடவே அதீதமாய் வெட்கப்பட்ட அந்தச் சின்னப்பெண்ணும்.
சுகாவின் எழுத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அதனால் தான் இந்த நூலில் உள்ள எல்லாக் கட்டுரைகளுமே சுவாரசியமானதாக இருக்கின்றன. மனிதர்களை அவர்கள் பலம் பலவீனத்துடன் நகைச்சுவை கலந்து எழுதும் எழுத்து. பிள்ளைகள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு ஆச்சியிடம் பணமில்லை என்று அவளுக்கு காசு தருவது போல யோசிக்க வைக்கும் இட.ங்களும் நிறைய இருக்கின்றன. திருநெல்வேலியின் மொழியும் அவர்களது சவடாலும் தெரிந்தவர்கள் இந்த நூலை வெகுவாக ரசிக்கலாம். அவை இரண்டும் அறவே அறிமுகமில்லாதவர்கள் ஒரு புதிய உலகத்திற்குள் போய் வரலாம். நிறைய எழுத வேண்டும் இவர்.
பிரதிக்கு:
சந்தியா பதிப்பகம் 044-24896979
முதல்பதிப்பு 2020
விலை ரூ. 250.