நான் கண்ட பெங்களூரு – பாவண்ணன்:
ஆசிரியர் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். நாற்பதாண்டுகளாக எழுதும் இவரது மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், பத்தொன்பது சிறுகதைத் தொகுதிகள், இருபத்தி நான்கு கட்டுரைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்த நூல்கள். 1989ல் இருந்து பெங்களூரில் வசித்து வரும் இவரது பெங்களூர் நினைவுகள் குறித்த நூல் இது.
பெங்களூர் என்றாலே எண்பதுகளில் பார்கள், தாராளமான பெண்கள், இரவு வாழ்க்கை என்று இளைஞர்கள் மனதில் பதிந்திருந்த விசயம். அவர்கள் அறியாதது அப்போதே பெங்களூரை Pensioner’s paradise என்பது. இப்போது பெங்களூரில் இரண்டுமில்லை. இவரும் சொக்கட்டான் உருட்டலில் பெங்களூர் வந்து சேர்ந்து மூன்று பத்தாண்டுகள் கடந்து விட்டது.
பெங்களூரில் இருப்பவர்களுக்கே தெரியாத நான்கு கண்காணிப்பு கோபுரங்கள், பேகம் மஹால், மர்பி ரோடு பெயர் காரணம் என்பது போல் பல விசயங்கள் இடையிடை வருகின்றன.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்கள் உள்ளே வரக்கூடாத கப்பன் பார்க்கில் இருக்கும் கிளப்பில் இன்றும் கோட் ஷூ இன்றி உள்ளே நுழைய முடியாது. பல விசயங்களில் நாம் ஆங்கிலேயர்களை இன்னும் எஜமானர்களாக நினைக்கிறோம்.
யட்சகானம் நம் ஊர் தெருக்கூத்து போல. அதைப் பார்த்ததுண்டு, ஆனால் அதில் இத்தனை உட்பிரிவுகள் இருப்பதை இந்த புத்தகத்தில் இருந்தே தெரிந்து கொண்டேன். கர்நாடகாவில் வயது வித்தியாசமின்றி யட்சகானத்தை ரசிக்கும் கூட்டம் இன்னும் அதை ஜீவனுடன் வைத்திருக்கிறது.
Premier Book Shop, Select Book shop குறித்து கூறியிருக்கிறார். Select Book Shop விரிவடைந்து விட்டது. Premier Book Shop நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. எத்தனையோ புத்தககாதலர்களின் நண்பரான பிரீமியர் புக் ஷாப் உரிமையாளர் ஷான்பாக் இந்த May 2021ல் மறைந்து விட்டார். ஆதர்ஸா தியேட்டர் கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. காட்சிகள் மாறும் நாடகம் போலவே காலமும் மாறுகின்றது.
இவருடைய இந்த நூலில் கவனித்தது, உதாரணமாக ஷேஷாத்திரிபுரம் என்றால் அது ஏன் அந்தப்பெயர்? சுபேதார் சத்திரம் என்றால் அந்தச் சத்திரம் எங்கே என்று பலரையும் விசயம் தெரியும் வரை விசாரிக்கிறார். அது போல அறிமுகமில்லாதவரிடம் கூடப்பேச்சுக் கொடுத்து நிறைய விசயங்கள் தெரிந்து கொள்கிறார். எழுத்தாளருக்கு வேண்டிய முக்கியமான குணாதிசயங்கள் இவை.
கண்ணீரால் காத்த பயிர் அத்தியாயத்தில் நடப்பது எல்லா இடங்களிலும் நடப்பது. காந்தி வந்து குருகுலத்தில் ஒரு நாள் தங்கியிருக்கிறார், தீண்டாமை கூடாது என எல்லோரும் கிணற்றில் நீர் அருந்தி இருக்கிறார்கள். காந்தி கிணறு என்று கல்வெட்டு வைத்திருக்கிறார்கள். இவர் பார்க்கையில் புதரும் பாழ்கிணறுமாக இருந்திருக்கிறது. அரசியல் என்று சொல்ல முடியாது, சுதந்திரத்திலிருந்து 1982 வரை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி.
ஜெர்மனியில் இருந்து மிஷினரிகளுடன் வந்த ஒருவர் கர்நாடகா வந்து 1894ல் உருவாக்கிய கன்னடம்-ஆங்கிலம் அகராதியே சிறந்த ஒன்று. 70,000 வார்த்தைகள் அடங்கியது. கன்னடப் பாடல்கள், கன்னட இலக்கண நூல் முதலியவற்றையும் எழுதியிருக்கிறார். இயேசு காவியம் ஒன்றும் கன்னடத்தில்.
கர்நாடகக் கலாச்சாரக் கூறுகள், பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள், ஆங்கிலம் மற்றும் கன்னடப்புத்தகங்கள் முதலியவற்றை அவருக்கு அறிமுகமான நண்பர்கள் வழியாகச் சொல்லியிருக்கிறார். பெங்களூர் கடந்த இருபது வருடங்களில் நிறையவே மாறி விட்டது. கன்னடத்தை விட ஹிந்தி இப்போது அதிகமாகப் புழங்குகிறது. தமிழ் ஜனத்தொகை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. மும்பைக் கலாச்சாரம் பெங்களூரில் வந்து பல வருடங்கள் ஆகி விட்டன. மாண்டியாவில் இருப்பவர்கள் பெங்களூர் தங்கள் மாநிலத்தில் ஒரு பகுதி இல்லாதது போல் பேசுகிறார்கள். இத்தனையும் தாண்டி யட்சகானம், கர்நாடக இசை, நாடகம், நாட்டுப்புறக் கதைகளை அப்படியே பாதுகாக்கிறார்கள். மொழியால் காவிரியால் எல்லோரும் எப்போதும் பேதங்களை மறைந்து ஒன்றிணைந்திருக்கிறார்கள். எட்டு முறை கர்நாடகா ஞானபீடப்பரிசு வாங்கியிருக்கிறது. இப்போதைய இலக்கியச்சூழலைப் பார்க்கையில் இந்த எண்ணிக்கை விரைவில் ஏறும். பெங்களூரில் முப்பது வருடங்கள் வாழ்ந்த கடனைத் தீர்த்திருக்கிறார் பாவண்ணன் இந்த நூல் மூலம்.
பிரதிக்கு:
சந்தியா பதிப்பகம் 044-24896979
முதல்பதிப்பு 2021
விலை ரூ.300.