மிச்சக் கதைகள் – கி.ராஜநாராயணன்:

பல தமிழ் நவீன இலக்கிய ஆளுமைகளை எனக்கு அறிமுகம் செய்த R.P. ராஜநாயஹம் முதலில் இவருடைய கோபல்ல கிராமம் நாவலைக் கொடுத்தார். அதன் பிறகு கன்னிமை, வேட்டி, கதவு ……. என்று தேடித்தேடி இவருடைய எல்லா நூல்களையும் படித்தோம். வாழ்வியல் அனுபவங்கள் பெருஞ்சுமையாய் நம்மை அழுத்தாத வயதில் கோபல்ல கிராமம் போன்ற நூலைப் படிப்பவர்கள் பாக்கியவான்கள்.

தகவல்கள், தகவல்கள் கி.ராவின் கதைகளில் விரவிக்கிடக்கும். தாய்ப்பாலில் இரண்டு நெல்மணி போட்டு வைத்தால் பால் கெடாது, சுண்ணாம்பு தருவதில் செய்தி பரிமாற்றம் என்பது போல் எத்தனையோ நூறு தகவல்கள். வர்ணம் கதை பாரதியார் கருப்பா சிவப்பா என்று ஆரம்பித்து, சிட்டி கருப்பாக இருந்ததால் பிராமணர் பிரிவில் இருந்து ஹோட்டலில் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதில் போய், இந்து நேசன் கதையைத் தொட்டு எதிர்பாராத இடத்தில் முடிகிறது. ஒன்றைச் சொல்லும் போது மற்றொன்று அதன் மேல் வந்து அமரும் Scattered thoughts இவருடைய எழுத்துக்களின் பெரிய பலம்.

கணவதி அம்மாளின் நினைவுக்கு எழுதிய தேங்காய் தண்ணி எப்படி ஒரு நெருக்கமான உணர்வை வார்த்தையில் வடிக்கிறது! கடைசிவரியை இப்படி முடிக்கிறார் “எல்லாம் போன மூலை தெரியவில்லை”. ஆமாம். நானும் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

பாலியலை விரசமில்லாமல் குறும்பு தொனிக்க இவர் படைப்புகள் பலவற்றில் கொண்டு வந்திருப்பார். சேகரம் செய்த நாட்டுப்புறக் கதைகள் தொகுதிகளும் வந்திருக்கின்றன. விட்டுப்போன முத்தம்….. கதையில் போகிற போக்கில் சொல்வது போல் சொல்கிறார்:
” வெத்திலை அர்ச்சுனனுக்காக கொண்டு வரப்பட்டது. தேவலோகத்திலிருந்து அது மறைத்து வைக்கப்பட்ட இடம் இன்னும் மணக்கிறது அப்படி”.

ஆதவன் சொல்லி சிறார் நூல் ஒன்றை இவர் பாணியில் NBTக்கு மொழிபெயர்த்தது இந்த நூலில் இருந்து அறிந்து கொண்ட புதிய தகவல். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதை இடையில் கிண்டல் செய்கிறார்.

தி.ஜாவின் நூற்றாண்டு பற்றிய பதிவு பலர் கும்பகோணத்தில் யமுனாவைத் தேடியதைக் கூறுகிறது.

மிச்சக்கதைகள் கதை கிருஷ்ணனின் மாடுகள் மேய்ந்தது போல எங்கெங்கோ சென்று ஒரு அழுத்தத்தைக் கொடுத்து முடிகிறது. அக்மார்க் கி.ரா கதை. Classic.

வயது ஒரு எண் என்பது வாய் வார்த்தைக்குச் சொல்வது. முதுமை எப்போதும் மையிருள் போன்றது. கண்ணுக்குத் தெரியாத பயங்களை மனதுக்கு மட்டும் தெரிய வைப்பது. அந்த வயதில் புதுமாப்பிள்ளை மனைவியை சரிக்கட்டிய கதையும், ஊர்வசி வெற்றிலைக் கதையும் எழுத முடிந்தால் உண்மையில் குதூகலமான மனம் இருந்தால் மட்டுமே முடியும்.

ஏராளமான புகைப்படங்கள், வழுவழுப்பான பக்கங்கள், சற்றே பெரிய அளவில் புத்தகம், Crisp ஆன பதிவுகள், வாழ்வியல் அனுபவத்தில் சேகரித்த கூகுளில் தேட முடியாத தகவல்கள் என்று Coffee Table புத்தக இலக்கணத்தோடு வந்திருக்கும் நூல். இருசி (பருவமடையாத பெண்).பற்றி நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டு போகையில் அவர்கள் மீது இரக்கப்பட வைக்கவும் கூடும் எழுத்து. பஞ்சத்தையும், பாலியலையும், வயோதிகத்தையும் ஒரே தராசில் வைத்தது போல ஒரு எழுத்து. மற்றவர்கள் கதையின் நடுவில், வாசகர் அபிப்ராயத்தைக் கேட்கும் பொழுது வருகின்ற எரிச்சல் இவரிடம் வந்ததேயில்லை.

” பாதைவழியாப் போன பொதரு வண்ணார், ஏதொண்ணுக்கும் எட்டிப் பார்த்துருவோம்ன்னு போனா….. பொம்ளேதாம். கிணத்துக்குள்ளே சாஞ்சி படந்த மஞ்சணத்தி மரக்கிளையின் விளாறுகளெப் பிடிச்சிக்கிட்டு அவயம் போட்டுக்கிட்டு இருக்கா ஒரு குமருவயசிலெ”.

இந்த மொழியையும், இந்த வகைக் கதைகளையும் இனி ஒருமுறை புதிதாய் படிக்கப்போவதில்லை என்ற உண்மை உறுத்தியதும் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டேன்.

பிரதிக்கு;

அன்னம் வெளியீடு 99430 59371
முதல்பதிப்பு ஜனவரி 2021
விலை ரூ.300.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s