ஆசிரியர் குறிப்பு:
தூத்துக்குடியில் பிறந்தவர். புனைவின் அத்தனை வடிவங்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது சமீபத்தில் வந்த இவரது குறுநாவல்களின் தொகுப்பு.
நந்தவனத்துப் பறவைகள் மற்றும் அட்சரேகை தீர்க்கரேகையில் ஆரம்பித்த பயணம் இவருடையது. இரண்டுமே முதல்பதிப்பு என்னிடம் இருக்கிறது. இவர் எழுத்தில் ஒரு வேகமும் மெல்லிய கிண்டலும் சேர்ந்திருக்கும்.
இரண்டாவது இன்னிங்ஸ் என்பது எல்லோருக்கும் இருந்தே தீரும். புன்முறுவலுடன் கடப்பவர் சிலர். அலைபேசி எண்ணை மாற்றிக் கொண்டு அந்நியர் போல் பேசி மறுபடியும் தொடர்பில்லாது போகிறவர்கள் சிலர். பழைய காதலைப் புதுப்பிக்கும் உத்வேகத்துடன் தடைகள் தாண்டிக் கடந்து சென்று கஷ்டப்படுபவர் சிலர். என்ன விலைக்கு என்ன பொருள் என்பது போல் புதுஉறவுகளுக்கு என்ன விலை கொடுக்கிறோம் என்பதை யோசிக்காதவர்கள். ஆண்கள் பெரும்பாலும் Best of both the worlds வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். பெண்களின் சுதாரிப்பால் குடும்ப அமைப்பு எப்படியோ காப்பாற்றப் படுகிறது. பெண்கள் வலிய வந்து பேசுவதும் பின் விலகிக்கொள்வதும் ஏன் நட.கிறது? அது அவர்களுக்கே தெரியாத விசயம். பறவைப்பாதம் கதை இதைச் சுற்றியே செல்கிறது. கூடவே ஒரு சஸ்பென்ஸும்.
ஆண்களே கதைகளெங்கும் வியாபித்திருக்கிறார்கள். சாமர்த்தியம் இல்லாத ஆண்கள். பழைய காதலி பேசச் சொன்னதில் அலைபாயும் ஆண், ரியல் எஸ்டேட் மாபியாவிடம் வீட்டை இழக்கும் ஆண், மனைவி இறந்ததைக் குடியில் மறக்கும் ஆண், விருப்பமில்லாப் பெண்ணைத் தழுவி அடிவாங்கி அந்தக் காயத்தில் காலம் எல்லாம் திருமணம் செய்யாத ஆண் என்று பிழைக்கத் தெரியாத ஆண்கள். பளிச்சென்று தெரியும் ஒரே பெண் பிருந்தா. பிருந்தா கூட எங்கள் தலைமுறைப் பெண். இப்போது பிருந்தாக்கள் இல்லை. இன்னொன்று சாரதா. அவள் மகள் திருமணத்திற்கு மாதவன் போயிருந்தால் அவள் ஒரு குட்டி பிருந்தாவாகியிருக்கக் கூடும்.
இன்னொன்று, காதலித்த பெண்ணுடன் பலப்பல வருடங்கள் கழித்து ஒரு தொடர்பு அமைதல். இரண்டு கதைகளில் வெவ்வேறு விதத்தில் அது வருகின்றது. இளமை கரைந்து, உடல் கனத்துப் பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையைப் பார்க்கும் காலகட்டத்தில் மனம் மட்டும் சின்னப்பெண்ணாய் குதியாட்டம் போடுவது பலமுறை நடந்திருக்கிறது, நடக்கிறது.
எஸ். சங்கரநாராயணன் அவருக்கேயுரிய தனிப்பாணியில் எத்தனையோ ஆண்டுகளாக எழுதுகிறார். ஒரு புத்தகம் வெளியிட்டவர் மீது விழும் வெளிச்சம் கூட இவர் மீது விழுந்து பார்த்ததாக என் நினைவில் இல்லை. அவரும் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து எழுதுகிறார். காட்சிப்படுத்துதல் இவர் கதைகளின் முக்கியமான அம்சம். நான்கு கதைகளிலுமே ஆஸ்பத்திரி வருகிறது, ஆனால் கதைக்கேற்றாற் போல் ஆஸ்பத்திரியின் காட்சியமைப்பு மாறுகிறது. காசு கரைகிறதே பாட்டி பிழைக்க வேண்டுமே என்ற பதற்றம் ஒரு கதையிலும், எதைத்தேடி இன்னும் உயிர் அலைபாய்கிறது என்பதும் வாசகர்களுக்கு எளிதாகத் தொற்றிக்கொள்ளும். வாசிக்க சுவாரசியமானவை, ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.
பிரதிக்கு:
நிவேதிதா பதிப்பகம் 89393 87276
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.160.