ஆசிரியர் குறிப்பு:

மாயவரத்தில் பிறந்தவர். சுங்கத்துறையில் பணிபுரிந்தவர். மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் புதுமைப்பித்தன், சந்தியா பதிப்பகங்களின் உரிமையாளர். இந்த நூல் இவரது மாயவரம் நினைவுகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

மாயவரத்தில் (மயிலாடுதுறை) அவ்வப்போது ஓரிரு நாட்கள் தங்கியதைத் தவிர அந்த ஊரில் சிலமாதங்கள் கூட வசித்ததில்லை. பல வருடங்கள் முன்பு ஒரு ஆடிப்பெருக்குக்கு மாயவரத்தில் தங்கியிருந்ததுண்டு.

மாயவரத்தில் கிடைக்கும் பொருட்களின் விசேஷத்தில் நூல் ஆரம்பிக்கிறது. காளியாகுடி காப்பி, அல்வா. காலை ஐந்து மணிக்கு நெய் பொங்கலும், டிகாக்ஷன் டிகிரி காப்பியும் குடிப்பவர் எப்பேற்பட்ட ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும். அடுத்து பன்னீர் புகையிலையும், பட்டணம் பொடியும். தஞ்சாவூர் ஜில்லாவில் வெற்றிலை போடுபவர்கள் அதிகம். தி.ஜாவின் ஒரு கதையில் மாயவரக்காரன் மாதிரி கவுலி வெற்றிலை போடுபவன் என்று நினைத்தாயா என்ற உரையாடலை இங்கே நினைவுகூறாமல் இருப்பது நல்லது.

அடுத்தது அரசியலில் நேரடியாகவும், கட்அவுட் செய்து கொடுப்பது போல் மறைமுகமாகவும் பங்கெடுத்துக் கொண்ட மாயவரத்துக்காரர்கள். மதபேதம் இல்லாது பழகிய மாயவரத்து மக்கள். பூம்புகார், தில்லையாடி போன்ற மாயவரத்திற்கு அருகே அமைந்த பல இடங்களின் முக்கியத்துவங்கள். சினிமாவில், வியாபாரத்தில், சமூக சேவையில் சாதித்த மாயவரத்துக்காரர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.

இலக்கியத்தில் இரண்டு உச்சங்கள் மாயவரத்தில் நடந்திருக்கின்றன. ஒன்று தமிழின் முதல் நாவல், இரண்டாவது மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. மாயவரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரமே தமிழின் முதல் நாவல். மாயவரத்தில் அதற்கு ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை என்ற இவரது ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வாழ்ந்ததும், அவரிடம் கற்க வந்த அவரது சீடர் தமிழ்தாத்தா உ.வே.சா தங்கிப் படித்ததும்
மாயவரம். விற்பனையில் இன்றும் சாதனை புரியும் கல்கி பிறந்த புத்தமங்கலமும் மாயவரத்தைச் சார்ந்ததே.

நினைவிலிருந்தும், பலரிடம் சேகரம் செய்தும் கொடுத்திருக்கும் ஏராளமான தகவல்கள் இந்த நூலின் பலம். மாயவரத்தின் கலாச்சாரமும் இந்த நூலில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் செய்திகள் படிப்பது போன்ற பாவனையை ஏற்படுத்துவது இந்த நூலின் பலவீனம்.
பின் இணைப்பாக வரும் நான்கு கட்டுரைகளுமே பல முக்கிய தகவல்களைக் கொண்டிருக்கின்றன. அடுத்து மதுரைக்காரர் யாராவது அறுபதாண்டு மதுரை குறித்து எழுதப்போகிறார்களா!

பிரதிக்கு:

சந்தியா பதிப்பகம் 044-24896979
முதல்பதிப்பு 2020
விலை ரூ. 220.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s