ஆசிரியர் குறிப்பு:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டைச் சேர்ந்தவர். இதுவரை இவருடைய ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று நாவல்களும், ஐந்து கட்டுரைத் தொகுப்புகளும், நான்கு கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. பல பல்கலைகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இது இவருடைய சமீபத்திய நாவல்.
ஒரு தெரிந்து கொள்ளலுக்காக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் நீண்ட காலம் வசிப்பவர்களிடம் எப்போதாவது அங்கே தனியார் நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாகக் கேள்விப்பட்டதுண்டா என்று கேட்டதற்கு இல்லை என்ற பதில் வந்தது. இந்தியாவில் மட்டும் அது போல நெடுஞ்சாலை, மெட்ரோ என்று பல காரணங்களுக்கு அரசாங்கம் நிலஅபகரிப்பு செய்யும் அதிகாரம் யார் கொடுத்தது? விலையும் அவர்களே நிர்ணயிப்பது! ஒரு சாலை விரிவாக்கத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தலில் நாவல் தொடங்குகிறது.
சின்னக்குடை மூன்று தலைமுறைக் கதையைச் சொல்கிறது. பாட்டனுக்கும், அப்பனுக்கும் கிடைத்த கொஞ்சம் மாளிகை
வாழ்க்கையும் பேரனுக்குக் கிடைக்கவில்லை. இருக்கும் இடமும் பறிபோய், வேலையின்றி, மனைவி, இரண்டு குழந்தைகளோடு இருத்தலியல் பிரச்சனையாகிறது.
அப்பா இடத்திற்கு பட்டா வாங்கவில்லை, ஊருக்குள் இருக்கும் இடத்தைக் கொடுக்கவில்லை என்று தன் தோல்விகளுக்கு பல காரணங்களை உருவாக்கிக் கொள்ளும் இன்பனுக்கு, மெய்மறக்கும் கலவியும் கொடுத்து மெய்ஞானமும் கற்பிக்கிறாள் கனகாங்கி.
உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். உண்மையை அப்படியே சொன்னால் நம்பகத்தன்மை குறைவு என்று புனைவில் கனகாங்கி மூலம் காரணத்தைச் சொல்லி நம்பகத்தன்மையை அதிகரிக்கிறார் அழகியபெரியவன். இசையும், ஆணின் கட்டுடலும் கூட இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். கூழாங்கல் கனவுக்காதலில் சாட்சியாகவும், ஆயுதமாகவும் இருந்து மூன்றாம் தலைமுறையை வந்தடைகிறது. கனகாங்கி அருவியில் அதை எறிகையில், காதலின் சாட்சியம் கலைந்து இருத்தலின் வேட்கை எங்கும் வியாபிக்கிறது. நாளை இருவரும் அவரவர் வேலைக்குப் போக வேண்டியிருக்கும்.
பிரதிக்கு:
நற்றிணைப் பதிப்பகம் 044 4273 2141
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ. 160.