தஞ்சாவூர் மாவட்டம் சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். மூளை தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர். இவரது முதல் நாவல் பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.
சாந்தாரம் சிறுகதையில் தஞ்சை கோயிலின் பிரமாண்டம் மயிலன் ஜி சின்னப்பனின் கதையிலும் பரவுகிறது. Failed marriageஐ கழிவிரக்கமாகக் காட்டாமல் ஓரிரு வரிகளில் எளிதாகச் சொல்லிக் கடக்கிறார். யோசித்துப் பார்த்தால் புறபிரமாண்டங்களை வைத்து நம்மை மற்றவர் எடைபோடுவதற்கும் உண்மையான நமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சேட்டு முதல் பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும் முழுக்க மாறுவது போல் நம் எதிர்பார்ப்புகள் மாறுகையில் மனிதர்கள் மாறிப் போகிறார்கள். சாரையும் சிறுமியையும் Impress செய்ய முயற்சிகள், பிரமாண்டம் எங்கிருந்தாலும் அதைச்சுற்றிய கட்டுக்கதைகள், அசல் வரலாறு என பல விசயங்களுடன் Troubled marriage lifeம் சேர்ந்து அழகாக Sync ஆகிறது. சிறுகதை வடிவத்தில் பெரியசித்திரம்.
பாசாங்கு மயிலன் கதாபாத்திரங்கள் இடையே அடிக்கடி வருகிறது. கோபியிடம் சாமிக்கண்ணுக்கு எதுவும் பிரச்சனையேயில்லை, கடைசியில் ஏன் பொய் சொல்ல வேண்டும்? பெரியவர் அபார்ட்மெண்ட்வாசிகளைக் குடும்பமாகக் கருதுகையில் டாக்டர் உள்ளிட்ட எல்லோரது கரிசனமும் பாசாங்கு. பருவம் அடையுமுன்பே எவாவின் பாசாங்கு.
கதையில் உரையாடல்கள் ஒரு பலம் மயிலனுக்கு. சங்கல்பம் போல வெகுசில கதைகளே முழுவதும் காட்சி விவரணையில் நகர்கின்றன. அதிலும் கூட பெரியப்பாவின் கடைசி உரையாடல் முதுகுத்தண்டில் சில்லிட வைக்கிறது. சங்கல்பம், மகுடி, தலைகள் துளி அமானுஷ்யம் கலந்த வித்தியாசமான கதைகள். ஜோக்கர் சிறுகதைக்கும் தமிழ்நதியின் மாயக்குதிரை சிறுகதைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது ஆனால் இரண்டும் முற்றிலும் வேறு கதைகள்.
ஊழ்த்துணை, ஏதேன் காட்டின் துர்க்கந்தம் இரண்டும் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள். ஒருவகையில் இரண்டும் வெவ்வேறு திசையில் பயணிக்கின்ற கதைகள். இன்னொரு வகையில் சந்தர்ப்பத்தை சாதகமாக்க நினைத்து ஏமாறுதல் (வெவ்வேறு நோக்கமிருப்பினும்) இரண்டு கதைகளையும் இணைக்கும் மையப்புள்ளி.
புத்துயிர்ப்பு Inspiration என்ற போதிலும் நூறுரூபிள்களில் என்னால் ஒன்ற முடியவில்லை. நியமம் போன்ற நல்ல சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெறவில்லை, அடுத்து வரலாம். நூறு ரூபிள்கள் தொகுப்பு மயிலனுக்கு மிகச்சிறந்த அறிமுகத்தைத் தந்திருக்கிறது. தொகுப்பை அசோகமித்ரனுக்கும், ஆதவனுக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்கள் போலவே அலட்டிக்கொள்ளாது நல்ல கதைகளை வழங்கும் எழுத்து மயிலனுடையது.
பிரதிக்கு:
உயிர்மை பதிப்பகம் 044-48586727
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ160.