அந்த ஒரு வரம் – ஐஷ்வர்யன்:
பரந்த வாசிப்பு இல்லாமல் எழுதவரக்கூடாது என்று சொல்லிச் சொல்லி இப்போதெல்லாம் இனிப்பை வாயில் போட்டாலும் புளிக்கிறது. ஆடுஜீவிதம் நாவலின் சுருக்கம் தான் இந்த சிறப்புச் சிறுகதை. இல்லை முன்னர் எப்போதோ படித்தது நினைவில் இருந்து நாம் கதை எழுதும் போது நம் சிந்தனையில் இருந்து உதித்த கதை என்று பலமாக நம்பி விடுவோமோ!
மோஹநிழல் – ஹரிணி:
நல்லவன் வாழ்வான் என்பதைச் சொல்லும் கதை. அதை மட்டும் சொல்லி நம்மை விட்டிருந்தால் நாமும் நல்ல தத்துவம் தானே எதற்கு வம்பு என்று போயிருப்போம். கூடவே முப்பத்தெட்டு வயதில் ஆணுக்குக் குழந்தை பிறக்குமா?.அப்பன் பௌருஷமாக இருந்தால் பிள்ளையும் அப்படியே இருப்பான்
போன்ற அரிய தகவல்களை எல்லாம் சொல்கிறார். தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமாவது செக்ஸ் கல்வியை தன்னார்வ நிறுவனங்கள் நடத்தக்கூடாதா!
அவ்வை – தென்றல் சிவக்குமார் :
பிரியங்களை குழைத்தெடுத்து கதைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தென்றல். வண்ணதாசன் எழுத்தில் ஆண் சாயல், தென்றல் எழுத்தில் முழுக்கவே பெண்சாயல், அது தான் வித்தியாசம். தாத்தாவிற்கு அழகு காட்டும் ஆயா, விரல்களைக் குவித்து வளையலுக்கும் வலிக்காமல் மாட்டிவிடும் மாமி, பாட்டியை பாப்பா என்றழைக்கும் பாப்பா அப்புறம் அந்த முல்லைப்பூ கதைசொல்லி என்று அன்பில் மலர்ந்த வீடு. ஓ அதனால் தான் கண்ணதாசன் முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே பாடல் எழுதினாரா! தொடர்ந்து எழுதுங்கள் தென்றல்.
அபிராமியின் கடைக்கண்கள் – எஸ். சங்கரநாராயணன்:
நானும் பள்ளியில் நன்றாக, படுவேகமாக கணக்குப் போடுவேன். தடிமாடுகள் போல் ஆண்பிள்ளைகள் சொல்லிக் கொடுக்கச் சொல்லி வருவார்கள். ஹூம்ம். முதலாளி தொழிலாளி வர்க்கபேதம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப் பார்ப்பதைப் பற்றிய கதை இது. கடையிவ் என்றில்லை வங்கியில், அரசு அலுவலகத்தில் பெரிய பதவியில் இருப்பவர் தனக்குக்கீழ் வேலைபார்ப்பவரின் குழந்தைகளும் அதே மரியாதை தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அவர்கள் மனைவியர் அந்தப் பதவியின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வேலைவாங்குதலும் நிதர்சனம்.
“பாவாடை சட்டையில் அந்த இரவிலும் பளிச்சென்று இருந்தாள். வீட்டுக்குள்ளே ஒரு ஒளி வந்தாற் போலிருந்தது. “தலைப்பில் கூட மெல்லிய கிண்டல் இருக்கிறது.
வஞ்சனை செய்வாரடி – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:
மனைவியை அடிப்பவர்கள் தனிவகை. பெரும்பான்மையினரால் அதை செய்ய முடியாது. Wife beater என்பது வெளிநாடுகளில் கேவலமாக உபயோகிக்கும் சொல். இங்கே அது ஆண்மையின் அறிகுறியாக ஆனந்தம் கொள்கிறார்கள். அடித்தவன் அதன்பின் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டாலும் திரும்பவும் அடிப்பான் என்று பெண்களுக்குப் புரியாதவரை எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. பொருளாதார சுதந்திரமின்மையும் பொறுத்துப்போக மற்றுமொரு காரணம்.
பேசும் சக்தியில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் தவிர நூல் மதிப்புரைகள் ஏராளமாக இருக்கின்றன. குறைந்த பக்கங்கள் கொண்ட பத்தீரிகையில் இத்தனை மதிப்புரைகள் வருவது சிறப்பு.
பிரதிக்கு:
பேசும் புதியசக்தி 94897 73671
விலை ரூ 40.