ஜேனட் பிரான்ஸைச் சேர்ந்த எழுத்தாளர். இவருடைய Moonlight in Odessa விருதுகள் பெற்ற நூல். பாரீஸில் இருக்கும் அமெரிக்கன் நூலகத்தில் பணிபுரிந்தவர். வரலாற்றின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பிப்ரவரி 2021ல் வெளியாகியது.
Fahrenheit 451 புத்தகங்களை எரிப்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.
Markus Zusakன் பிரபலமான The Book Thief நாவலிலும் புத்தகங்களை எரிப்பார்கள். மிக சமீபத்தில் கர்நாடகா பெங்களூரில் தமிழ்சங்கத்தின் நூலகத்தின் பல புத்தகங்களை தெருவில் எறிந்து எரித்தார்கள். யாழ்பாண நூலகத்தை சிங்கள பாசிஸ்டுகள் எரித்தது இன்னும் நெஞ்சில் வடுவாக. நாஜிகள் ஜெர்மனியிலும் ஆஸ்திரேலியாவிலும் புத்தகத்தை எரித்தார்கள். பாரீஸூக்குள் ஜெர்மனி ஆக்கிரமிப்பு நடத்தியதும் பாரீஸ் நூலகப் புத்தகங்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த புனைவு இது. புத்தகக் காதலர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
பாரீஸ் நூலகத்தில்,.YMCA, Red cross, Quakers வந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு காயப்பட்ட வீரர்களுக்குப் புத்தகங்கள் கொண்டு போய்க்கொடுக்கும் பணியில் இருக்கிறார்கள். போர்க்காலத்திலும் நூலகம் திறந்திருக்கிறது. முதல் அடியாக யூதர்களை நூலகத்தின் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கட்டளை இடுகிறார்கள் நாஜிக்கள். பாரீஸில் இருக்கும் வெளிநாட்டவர் கைது செய்யப்படுகிறார்கள் அல்லது தப்பித்து அவர்கள் நாட்டுக்குச் செல்கிறார்கள். பாரீஸை சொந்த ஊராகக் கொண்டவர்களே அங்கிங்கிருக்கும் நாஜி செக்போஸ்டுகளில் சோதனை செய்யப்படுகிறார்கள். காரணமேயின்றி கைதுசெய்யப்படுபவர் காணாமல் போகிறார்கள். நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி சொல்வது இந்த சூழலில் வாசிப்பது கடினம். ஆனால் இந்த நாவல் பேரிடர்காலத்தில் நூல்கள் வாசிக்கப்பட்டதையும், அவற்றை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கப்பட்ட சிரமங்களையும் பேசுகிறது.
இந்த நாவல் இரண்டு Timelineகளில் நடக்கிறது. ஒன்று இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பாரீஸில் முப்பதுகளின் இறுதியிலும் நாற்பதுகளின் முதல்பாதியிலும், மற்றொன்று எண்பதுகளில் அமெரிக்காவின் Montanaவில். நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் உண்மை நபர்கள். அதுபோலவே சம்பவங்களும். நன்றாக ஆய்வு செய்து எழுதப்பட்ட Historical Fiction இது. போர்க்காலத்தில் உறவுகளில் நடைபெறும் மோதல்களை அற்புதமாக படம்பிடித்திருக்கிறது இந்த நாவல். இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நாட்டில் பிறந்த கிட்டத்தட்ட ஒரே குணாதிசயம் கொண்ட இருபெண்களின் நட்பையும். இன்னொரு பக்கத்தில் நாளை Concentration campக்கு இழுத்துச் செல்லப்படும் சாத்தியம் இருக்கும் சூழ்நிலையிலும் வாசிக்கிறார்கள், பேராசிரியர் ஒருவர் புதுநாவலை எழுதிமுடிக்கிறார். வாசிப்பிற்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு அதைத் தாண்டிய உலகம் எப்போதும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
https://www.amazon.in/dp/B0825PVRJV/ref=cm_sw_r_wa_apa_glt_PXNVTP5CHBXVEDE0R8S3