உயிரளபெடை – எஸ்.சங்கரநாராயணன்:
உயிரளபெடை கதை இரண்டு வெவ்வேறு உலகங்களில் பயணம் செய்கிறது. அம்மா ஒரு உலகம். அப்பா ஒரு உலகம். அம்மா சீப்பின் முடியை கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் நடுவில் செருகுவதில் இருந்து அவள் குறித்த தெளிவான சித்திரம். அதே போல் கதைசொல்லியின் எப்போதும் சார்ந்திருக்கும் மனநிலை. முதலில் அம்மா பின்னர் ருக்மணி. அந்த சார்ந்திருக்கும் மனநிலை தான் அவன் அப்பாவைத் தேடிப் போவதும் பின்னர் நடப்பதும். ஆண்கள் முடிவு எடுக்கத் தெரியாத வீடுகளில் எல்லாம் ருக்மணியின் சாமர்த்தியத்தில் குடும்பச் சக்கரம் சுழல்கிறது. நடந்தது சரியா இல்லையா என்பதைத் தாண்டி கதைசொல்லியின் பார்வையிலேயே கதை நகர்கிறது. எனவே அதற்குள் நாம் போக வேண்டியதேயில்லை. இவரது கதைகளின் வேகம் இன்னும் கொஞ்சம் கூடக் குறையவேயில்லை.
சருகின் ஓசை – குர்ரத்துலைன் ஹைதர்- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
இந்தக்கதையில் சொல்வது போல இஸ்லாமியர் பாகிஸ்தானில் இருப்பதே பாதுகாப்பு என்ற மனநிலை அப்போது இருந்தது. இவர், இஸ்மத் சுக்தாய் போன்ற பலரும் பாகிஸ்தானில் இருக்க முடியாது இந்தியா திரும்பியவர்கள் தான். மத அடையாளங்களைக் கடந்து ஒரு பெண் தன்னை எப்போதும் ஒழுக்கம் கெட்டவள் என்று ஒப்புக்கொள்வதில்லை என்பதை வைத்து எழுதப்பட்ட கதை. அவளும் காற்றடித்த பக்கம் எல்லாம் பறக்கும் சருகு போல் வாழ்ந்து விட்டாள். அவள் பார்வையில் மற்றவர்கள் கெட்டவர்கள். அனுராதா கிருஷ்ணசாமியிடம் இருந்து மீண்டும் நல்லதொரு மொழிபெயர்ப்பு.
தாயக்கட்டைகள் – ஐ.கிருத்திகா:
நடமாட முடியாத முதியவள், அவளுக்குத் துணையாக ஒரு முதிர்கன்னி. இருபத்தெட்டு வயதில் தூள்பஜ்ஜி சாப்பிட்டு ஆனந்தப்படும் பெண். இவர்கள் நட்பு இரண்டு வீடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியே தீரும். குடும்பஉறவுகளில் சிக்கல்கள் கணவன் மனைவி பிள்ளைகள் தவிர வேறுயார் உடன் இருந்தாலும் வந்துவிடுகின்றது. மீண்டும் நல்லதொரு மொழிநடை.
ஆரியசங்கரன் – நாஞ்சில்நாடன்:
மீண்டும் கும்பமுனி மற்றும் தவசிப்பிள்ளையின் ஆர்ப்பாட்டங்கள். ஒரு Templateஐ வைத்துக் கொண்டு நாஞ்சில்நாடன் ஊரை எல்லாம் கேலி செய்கிறார். கொரானா லேசாகத் தொட்டுவிட்டுப் போய்விடுகிறது, மீதி எல்லாமே அரசியல், சமூக நையாண்டிதான். Unstoppable.
யுவன் சந்திரசேகரின் குறுஙகதைத் தொடர்:
கதை 6, வாயைக் கட்டுப்படுத்த முடியாது குடும்பத்தை இழந்தவன் கதை. அந்த மூக்கை உறிஞ்சுதல் தான் கதையில் ஒரு முரண்நகை.
கதை 7 வாசக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திசைதிரும்பும் கதை.
கதை 8- எல்லாக் கோழைகளும் மனதிற்குள் எடுக்கும் நிறைவேற்றமுடியாத சபதம் தான் கதை.
கதை 9- அத்தை கேட்கும் கேள்வி எனக்கும் ஆச்சரியம் தான். அது ஏன் இப்படி இருக்கிறார்கள்?
கதை 10- இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஊர் எது மதுரையா?
களப்பலி – ப.தனஞ்செயன்:
வர்க்கபேதத்தைப் பற்றி சொல்ல விரும்பி எழுதிய கதை. மொழிநடையிலும், வடிவத்திலும் சிறுகதையாகாமல் போய்விட்டது.