நிலை நிறுத்தல்- கி.ராஜநாராயணன்:
கி.ராவின் மற்றொரு டிரேட்மார்க் கதை. எத்தனை தகவல்கள் இந்தக்கதையில்!
சித்திரையிலிருந்து சித்திரை என்று சொல்வது திருப்பூரில் இன்றும் மில்களில் நடைமுறையில் இருக்கிறது.
திருமாங்கல்யத்திட்டத்தில் இத்தனை ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும், நடுவில் போனால் பணம் கிடையாது.
இரண்டாவது ஊரே போற்றினாலும் பெண்டாட்டியிடம் மரியாதையைப் பெறமுடியாது. மூன்றாவது கணவன் மனைவி இருவருக்கும் ஒரே பெயர் இருந்தால் கைராசி என்ற நம்பிக்கை. அதன்படியே மாசாணத்திற்கு எல்லாமே கைகூடிவருவது. நான்காவது அகௌரவமான வேலையை விட்டு தன் முயற்சியால் மரியாதையைத் தேடிக் கொள்ளும் ஒருவனின் கதை. நம்மை வாழவிடாதவர் வந்து நம்வாசலில் வணங்கிடவைத்து விடும். ஐந்தாவது வானம் பார்த்த பூமியில் மக்களது வாழ்க்கையும், அன்பும். கடைசியாக மாசாணத்தியைப் பற்றி முதலாளியம்மா சொல்லும் ஒரு சிறுகுறிப்பு. கி.ராவின் எழுத்து ஓடும் வேகத்தில் நிறையப்பேர் கவனிக்கத் தவறுவது. மாசாணத்தியைத் தன்னிடமே நிரந்தரமாக வைத்துக்கொள்ள மாசாணம் செய்யும் கடைசி முயற்சியா மழை வர வைப்பது!
(இணையத்தில் இந்தக்கதை கிடைக்கும், படித்துப் பாருங்கள்)
ஒன்றெனக் கலத்தல் – கமலதேவி:
தங்களுடைய தோல்விகளுக்கும் போதாமைகளுக்கும் பெற்றோரைக் குறைசொல்லும் வழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அது நகரமானாலும் சரி, கிராமமானாலும் சரி.
விவசாயிகளுக்கு விளைநிலம் உயிரை விடப்பெரியது என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. ஆனால் சாதாரண கதை இது. ஒருவேளை நாம் தான் கமலதேவியிடம் அதிகம் எதிர்பார்க்கிறோமா?