அமெரிக்க எழுத்தாளர், செவ்விந்திய தாய்க்கும், அமெரிக்கஜெர்மன் தந்தைக்கும் பிறந்தவர். இதுவரை பதினாறு நாவல்களை, கவிதைத்தொகுப்புகளை, சிறார் நூல்களை எழுதியுள்ளார். இவருடைய சுயசரிதையில் இளம்வயதில் குழந்தை பெற்றுக் கொண்டதைக் குறித்து எழுதியிருக்கிறார்.
அதிக வாசகர்களுக்குத் தெரியாத Louise இவருடைய இந்த நாவல் மூலம் ஒரே நாளில் உலகமெங்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார். 2021க்கான புலிட்சர் விருதை Fiction பிரிவில் இந்த நாவல் வென்றிருக்கிறது.

அமெரிக்காவின் புராதனகுடிகள் பழங்குடிகள். பல்வேறு குழுக்களாய் இயங்கிவந்த பழங்குடிகளின் நாட்டை வந்தேறிகள் கைப்பற்றினர். 1953ல் அமெரிக்க காங்கிரஸ் பழங்குடிகளுக்கு வழங்கிய கடைசி சலுகைகளை விலக்கிக் கொள்வதாக சட்டம் இயற்றியது. அதற்கு எதிராகப் போராடியவர்களில் Louiseன் தாத்தாவும் ஒருவர். அவரது அசாதாரண வாழ்வை, புனைவு கலந்து எழுதப்பட்ட நாவல் இது.

சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. இரண்டு முக்கிய பாத்திரங்களின் கதைகள் ஒரே நேரத்தில் நகர்கின்றன. ஒன்று தாமஸ் (Night Watchman) மற்றொன்று Patrice. இருவருமே வெவ்வேறு வகையில் போராளிகள். Patrice சின்னப்பெண். இவர்கள் கதைகள் நகர்கையில் அமெரிக்காவின் நிறவெறி, சட்டங்கள் வெள்ளையருக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல், (Termination law வில் ஒரு இடத்தில் “Such Indian” என்று வருகிறது. “Such whities people” என்று சொல்வார்களா? புத்தகம் முழுக்க செவ்விந்தியரை இந்தியர் என்றே குறிப்பிடப்படுகிறது) , பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, ஏழ்மையிலும் அவர்களது தீர்க்கமான விட்டுத்தராத கொள்கைகள், வழிவழியாக கைவைத்தியத்தில் இருக்கும் தேர்ச்சி, நகர வாழ்க்கையைப் பார்த்துப் பயப்படுதல் என்று ஏராளமான விசயங்களில் ஐம்பதுகளில் இவர்களது வாழ்க்கை அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

முக்கோணக் காதல்கள் இந்த நாவலில் பலமுறை வருகின்றன. எல்லாவற்றிலும் உச்சமாக இருப்பது, இன்னொருத்திக்குத் துணை அவசியம் தேவைப்படும் என்று மற்றொருத்தி சின்ன வருத்தத்தின் சாயல் கூட இல்லாமல் விட்டுக்கொடுப்பது.

நாவலில் பல இடங்களில் சொல்வது போல் பல ஆவிகள் உயிர்த்தெழுந்து வருகின்றன. ஒரு அத்தியாயத்தைக் குதிரை சொல்கிறது, ஒரு அத்தியாயத்தின் கதையை நாய் சொல்கிறது. எல்லாமே மூலக்கதையை விட்டுக் கொஞ்சமும் நகராமல் அதன் அழுத்தத்தைக் கூட்டுவதாக வருகின்றன. வீட்டை விட்டு நகரத்திற்குப் போய், உயிரோடு இல்லை என்று எல்லோராலும் சொல்லப்படும் பெண், தனது தாய்க்கும், தங்கைக்கும் அவர்களது கனவுகளில் தான் உயிரோடு இருக்கும் செய்தியைத் தெரிவிக்கிறாள்.

தெரிந்தவர்கள் என்று நம்பி காரில் ஏறும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடக்கிறது. இன்னொரு பெண்ணின் கணவன் அவளை விற்றுவிட கப்பலில் இருக்கும் ஏராளமான ஆண்கள், இரவுபகல் வித்தியாசமின்றி அவளிடம் பாலியல் வல்லுறவு கொள்கிறார்கள். பெண்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் சுதாரிப்பின்றி இருந்தால் கடுமையான வாழ்க்கையை நேர்கொள்ள வேண்டியதாகிறது.

தாத்தா எழுதிய கடிதங்கள், பாட்டி, தாயார் மற்றும் பலரது உதவியுடனும், மிகுந்த ஆராய்ச்சியுடனும் இந்த நூலை எழுதியிருக்கிறார். ஏராளமான கதாபாத்திரங்களுடன் நகரும் கதையைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்ல ஆசிரியரது Literary craftsmanship உதவியிருக்கிறது. அமெரிக்கப் பழங்குடியினரின் இடத்திற்குச் சென்று வந்த உணர்வு மேலிடுகிறது. சரித்திரம் குறித்து எழுதுதல், ஆய்வு யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் கடந்தகாலம், நிகழ்காலம் என அதிவிரைவில் கடந்து, பல்வேறு உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தி, மறக்கமுடியாத வாசிப்பனுபவத்தை வழங்கும் நாவலைக் கொடுக்க Louise போல் வெகுசில Masterகளால் மட்டுமே முடியும். Really a deserving novel for Pulitzer. புலிட்சர் பரிசை வெல்லாது இருந்தால்கூட பிரமிப்பை ஏற்படுத்தும் நாவல்.
https://www.amazon.in/dp/B07SKWFVYW/ref=cm_sw_r_wa_apa_glt_CKBRZ0WZNRSSSTEN9JSZ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s