பெருவில் பிறந்து சிலியில் வளர்ந்தவர்.1981ல் அவருடைய மாமா சிலியின் ஜனாதிபதி Salvador Allendeன் படுகொலைக்குப்பின் அங்கிருந்து தப்பி வெனிசுலா சென்றார்.
அவருடைய தாத்தாவிற்கு எழுதிய கடிதங்களின் தூண்டுதலில் இருந்து இவருடைய முதல் நாவல் The House of Spirits எழுதப்படுகிறது. மாயயதார்த்தத்தை லத்தீன் அமெரிக்காவில் திறம்பட உபயோகித்த வெகுசில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவருடைய எல்லா நூல்களிலுமே இவரது அனுபவங்கள் கலந்திருப்பதால் அவை லத்தீன் அமெரிக்க வாழ்வைப் பிரதிபலிப்பவை. இந்த நூல் இவருடைய நினைவுக்குறிப்பு , மார்ச் 2021ல் வெளியாகியது.

சிறுவயதில் நிர்கதியாக இவருடைய தந்தை (அம்மாவின் கணவன் என்றே இவர் குறிப்பிடுகிறார்) குடும்பத்தை விட்டுவிட்டு சென்றதால் சிலியில் பாட்டி வீட்டுக்கு குடும்பம் பெயர்கிறது. பாட்டியும் இறந்து போக பயங்களால் நிறைந்த குழந்தைமை என்னுடையது என்கிறார். சிறுவயதில் பயங்கள் இல்லாதிருந்தால் என்னுடைய எழுத்தில் இவ்வளவு வீரியம் இருந்திருக்காது என்று சொல்லும் இசபெல், சராசரிக் குடும்பத்தில், மகிழ்வான குழந்தைப்பருவம் கொண்டவர்கள் எப்படி
நன்றாக எழுத முடியும் என்ற ஆச்சரியம் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

இசபெல் சிறுவயதிலேயே தான் பெண்ணியவாதியாக இருந்ததாக நம்புகிறார். அவருடைய அம்மா அன்பும் பாதுகாப்புமான துணை கிடைத்ததும் திருப்தி அடைகிறார். இசபெல், மனைவியையும் நான்கு குழந்தைகளையும் கைவிட்டு அம்மாவை நாடிவந்தவன் ஆணாதிக்கவாதி என்கிறார். இசபெல்லின் பெண்ணியம், ஆணை வெறுப்பதல்ல, எங்கெல்லாம் சமஉரிமை மறுக்கப்படுகிறதோ அதை எதிர்ப்பது, ஒருவேளை ஒரு ஆண் பாதிக்கப்பட்டாலும் அதையும் எதிர்த்துக் குரல் கொடுப்பது இசபெல்லின் பெண்ணியம்.

இசபெல் மூன்றுமுறை மணம் புரிந்தவர். என்றாலும் திடீர் காதல்கள் அவரை விடவில்லை. 1976ல் வெனிசுலாவில் கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு அர்ஜென்டினாலைச் சேர்ந்த இசையமைப்பாளருடன் செல்கிறார். தவறை உணர்ந்து இவர் மீண்டும் குடும்பத்திற்குத் திரும்பினாலும், இவர் குழந்தைகள் இவரை மன்னிக்க பத்து வருடங்கள் ஆகிறது. 1987ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த வழக்கறிஞருடன் சென்றது பின்னர் இரண்டாவது மணமாகிறது. 2016ல் இவரது 74 வது வயதில் ஏற்படும் காதல் மூன்றாவது மணம்.

எழுபதுகளின் பிற்பகுதியிலும், எண்பதுகளிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் உலகெங்கிலிருந்தும் பரவலாக வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் அது அப்போது ஆண் எழுத்தாளர்களால் நிறைந்தது. இசபெல் என்றால் யாரென்றே யாருக்கும் தெரியாத சூழ்நிலையில், பெரும்பாலும் அடுக்களையில் வைத்து இவர் எழுதிய இவருடைய முதல் நாவலின் வெளியீட்டிற்கு இவரது ஏஜன்டால் பிரபல எழுத்தாளர் போல் பார்ஸிலோனாவிற்கு அழைக்கப்பட்டு அறிவுஜீவிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்படுகிறார். புத்தகத்தை வாழ்த்தி எல்லோரும் முதல்முறை மதுக்கோப்பையை உயர்த்துகையில், மின்சாரம் போய் முழுஇருட்டாகிறது. அநேக நாடுகளில் இது அபசகுனம் தான். ஆனால் ஏஜென்ட் கார்மன் உடனடியாகச் சொல்கிறார். “சிலியன் பெண்களின் ஆவிகளும் இந்த நூலை வாழ்த்த வந்திருக்கின்றன என நினைக்கிறேன், சியர்ஸ்”. இந்த நூலின் பெருவெற்றிக்குப்பின் இலக்கிய வாழ்வில் இசபெல்லுக்கு இறங்குமுகமே இல்லை.

உலகமெங்கும் நூல் விமர்சனங்கள் ஒரு சீரான போக்கைக் கொண்டிருக்கின்றன. இவர் இருபது நூல்கள் எழுதி நாற்பது மொழிகளுக்கு மேல் இவரது நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, உலகமெங்கும் இவரை வாழ்ந்து கொண்டிருப்பவரில் சிறந்த இலக்கியவாதியாக அடையாளம் கண்டுகொண்டபிறகு, இவரது சொந்த நாடான சிலியில் ஒரு எழுத்தாளர், இவரை எழுத்தாளரே இல்லை தட்டச்சாளர் என்றார். சிறந்த இலக்கியவாதிகளை அவர் எழுத்தாளர் இல்லை என்று யார் சொன்னாலும் அவர்கள் முட்டாள்தனத்தை ஊரறியக் காட்டிக் கொள்கிறார்கள்.

இசபெல் நூலின் இரண்டாம் பகுதி முழுக்கவே பெண்ணியத்தை மையப்படுத்திப் பேசுகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் கூட பெண்கள் அடிக்கடி வன்முறைக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தைப் பார்ப்பது பலநாடுகளில் சட்டவிரோதமாக இருப்பினும், பெண்சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகும் காலகட்டத்தில் வளரும் நாடுகளில் அது குறைந்து கொண்டே போகிறது. தாய்மையைக் காரணமாக்கி அவர்களது தனித்திறமைகள் ஒடுக்கப்படுகின்றன.
நமது பார்வையில் இருந்தே பார்க்கலாம், ஒரு ஆணின் கைப்பையில் காண்டமும் இன்னொரு பெண்ணின் கைப்பையில் கருத்தடை மாத்திரைகளும் தற்செயலாக நாம் பார்க்கையில் நமது எதிர்வினைகள் என்னவாக இருக்கும்?

பெண்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு ஆணால் சொல்ல முடியாது. அதற்கு நீங்கள் ஒரு பெண்ணிடம் தான் கேட்கவேண்டும். பெண் என்ன விரும்பக்கூடும்?. பாதுகாப்பு, அமைதியான வாழ்க்கை, பொருளாதார சுதந்திரம், அவர்களுக்கு இணக்கமான வட்டத்தில் இணைந்திருத்தல், அவர்களது உடல் மற்றும் வாழ்க்கையின் மேல் அவர்களது உரிமை, எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக விரும்பப்படுதல். இவை பொதுவானவை. ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவைகள் மாறக்கூடும்.

இசபெல் ஏற்கனவே மூன்று சுயசரிதைக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். இந்த நூல் முழுக்கப் பெண்ணியப்பார்லையில் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அவரது கோணத்தையும் சொல்கின்றது. எண்பது வயதை நெருங்கும் இசபெல்லின் எழுத்தில் நேர்மையும் துணிச்சலும் எப்போதும் கலந்திருக்கும். இவரது மகள் நினைவாக எழுதிய Paula என்ற நூலும் கடைசி நாவலான A Long Petal of the Sea மற்றும் Maya’s Note Book எனக்கு மிகவும் பிடித்தவை. இவரைப் படிக்க விரும்புவர்கள் இவற்றிலிருந்து ஆரம்பிக்கலாம்.

நூல் பெயர் – The Soul of a Woman
ஆசிரியர் பெயர்- இசபெல் அலெண்டே
பதிப்பகம்- புளூம்ஸ்பெரி சர்க்கஸ்
பக்கங்கள்- 192
வகை- ஆங்கில நினைவுக்குறிப்பு
விலை – ரூ. 586
நூல் பெற தொடர்பு- Amazon.in
முதல்பதிப்பு மார்ச் 2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s