ஆசிரியர் குறிப்பு:
பெரிதும் கவனம் பெற்ற “சினிமா எனும் பூதம்” நூலாசிரியர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் படித்தவர். கலைத்துறையில் சினிமா, கூத்துப்பட்டறை போன்ற தளங்களில் பணியாற்றியுள்ளார். நடிப்பு பயிற்சியாளராகவும், எழுத்தாளராகவும் திகழும் இவர் பரந்த வாசிப்பும், இலக்கியம், சங்கீதம், சினிமா மட்டுமன்றி பல Topicகளில் சரளமாகப்பேசும் , எழுதும் திறமையும் வாய்ந்தவர். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பது சிலம்பின் காலம். இப்போது அப்படி நிகழ்வதில்லை என்பதற்கு நாமே மௌனசாட்சிகள். விறுவிறுப்பான அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
நம்நாட்டில் மட்டுமல்ல, உலகப்புத்தகக் குழுக்களில் சேருமுன் தவறாதிருக்கும் ஒரு நிபந்தனை அரசியல் கருத்துகளை பதிவிடக்கூடாது. அரசியல் கருத்துகள் சச்சரவை ஏற்படுத்துபவை. தொடர் விவாதங்களுக்குக் கொடுக்கும் விலை நட்பாக இருக்கும். அவரவர் அரசியல் அவரவர்க்கு. இந்த சூழலில் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் அரசியலைக் கூ.ர்ந்து கவனித்தவரும், எந்த கட்சியையோ, அமைப்பையோ சாராதவரும் ஆகிய இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள், அரசியலை Capsule வடிவில் கொடுப்பது மட்டுமில்லாமல், வாசிக்க மிகவும் சுவாரசியமானவை.
கண்ணதாசன் அரசியல் வாழ்வு, அவரது திரைப்பாடல்கள் சிலவற்றின் பின்னணியைச் சொல்வதுடன், கவிஞர்-கலைஞர் இடையேயான Love and hate relarionshipஐ கவிதைபோல் சொல்கிறது.
மு.க. அழகிரி பற்றிய கட்டுரை புன்னகையை வரவழைப்பது. புதுப்பெண்டாட்டியுடன் போகையில் யாரேனும் ஏதாவது சொன்னால் காதில் வாங்காதது போல் போவது புத்திசாலித்தனம். மதுரையில் தனியாகப் போனாலும் கவனிக்காதது போல் போவது நம் மரியாதைக்கு நல்லது.
தி.மு.க மன்றங்களில் சம்பத், மதியழகன், நெடுஞ்செழியன், அன்பழகன் படங்கள் அணிவகுத்ததைப் பார்த்தவர்கள், கருணாநிதி சட்டென்று தலைமை ஏற்றது அதிர்ச்சி அளித்திருக்கும். எந்த அளவு உண்மையோ தெரியாது, அண்ணா இறந்த வீட்டில் ” எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைச்சுட்டுப் போயிட்டீங்களே அண்ணா” என்று கதறி அழுதாராம் கருணாநிதி.
எம்.ஜி.ஆர் பேச்சு பற்றிய கட்டுரையில் ஒரு உளவியல் இருக்கிறது. எதை திரும்பத் திரும்ப சொல்கிறோமோ அதை ஒரு காலத்தில் நாமே உண்மையென்று தீர்க்கமாக நம்பத்தொடங்கி விடுகிறோம். தாய்மார்கள் மேல் பெரும்மதிப்பு இருப்பதாக அடிக்கடிச் சொன்னவர் எம்ஜி.ஆர்
மு.க.முத்து பற்றிய கட்டுரை அரசியல் கட்டுரையல்ல. இந்தக் கட்டுரையை இவரால் மட்டுமே எழுதமுடியும். தகவல் மேல் தகவல் போல் செல்லும் கட்டுரையில் எத்தனை உணர்வுகள்!
“மு.க.முத்துவுக்கு அண்ணா மீது ரொம்பப்
பிரியம். அதனால் வேலைக்காரி மீதும்”. என்ற வரிகளில் இருக்கும் Subtle humour!
மிகச் சிறிய நூல் இது. திராவிடர் கழகங்களின் முக்கிய மனிதர்களைப் பற்றிய சிலவரிகளில் அவர்கள் ஆளுமை குறித்த புரிதலை ஏற்படுத்தும் கட்டுரைகள். அரசியலில் தன்னை முன் நிறுத்துபவர்களே முன்னுக்கு வரமுடியும். ஒரு கட்டுரையில் N.C. வசந்தகோகிலம் அற்பாயுளில் இறக்காமல் இருந்திருந்தால் M.Sன் இடம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். எம்.எஸ்க்கு ஒரு சதாசிவம் கிடைத்தார். இசையுலகில் என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம் ஆனால் அரசியலில் வெளிச்சம் யார் மேல் அதிகம் விழுகிறதோ அவர்களே வெற்றியாளராக முடியும்.
தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரணியில் இருப்பவருடன் அரசியல் செய்யும் நிலைக்கு வெட்கப்படும் நிலையில் தான் இருந்திருக்கிறது. எதிரணி ஆட்சிக்கு வந்தால் அவர்களது எதிரணியின் தரம் அதற்கும் கீழ் என்று அறுபது ஆண்டுகளில் அரசியல் தரம் இறங்குமுகமாகவே இருக்கிறது.
அரசியல் கட்டுரை மட்டுமல்ல, மற்ற பிரபலங்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளுக்கும் இவருக்கு வந்த எதிர்ப்புகளை அறிவேன். புத்தகக்கூட்டம் ஒன்றுக்கு போகாதீர்கள், அவர்கள் உங்கள் மேல் கோபமாக இருக்கிறார்கள் என்று சொன்னால் ஆவலுடன் தவறாது அந்தக் கூட்டத்திற்கு செல்பவர் இவர். ஆவலும் தேடலும் கூட ஒருவகையில் போர்க்குணம் தான். இவர் எழுதியதில் ஐந்து சதவீதம் கூட புத்தகங்களாக வந்திருக்காது என்று நினைக்கிறேன். எழுதியவற்றை விட இவர் எழுதாமல் இருப்பது அதிகம். மதுரை வீதிகளில் இவருடன் நடந்து கொண்டே, எதிர்காலக்கவலைகள் ஏதுமன்றி, இலக்கியம் பேசிச்சென்ற நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் ஒருபோதும் கிட்டாது என்று தெரிந்திருந்தால் அவற்றை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருப்பேனோ என்னவோ!
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம்
Zero Degree Publishing 98400 65000
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை : 100 ரூபாய்