ஆசிரியர் குறிப்பு:
மருத்துவர் அருணா ராஜ் பல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு முடித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராக பணிபுரிந்து வருகிறார். இதுவரை ‘கருப்பி’ என்ற சிறுகதை தொகுப்பும் ‘இரண்டாவது புத்தகம்’ என்ற அனுபவக் கட்டுரைத் தொகுப்புமாக, இரு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அருணா ‘இன்’ வியன்னா’ இவரது மூன்றாவது படைப்பு.
இந்தப் புத்தகத்தில் மிகவும் கவர்ந்த விசயம், நான்கு (உண்மையில் மூன்று) வெவ்வேறு இடத்தில் இருக்கும் பெண்களின் ஐரோப்பா பயணம். இவர்கள் கல்லூரிப் பெண்களோ, மணமாகாது Adventure தேடும் பெண்களோ இல்லை. கல்லூரி செல்லும் வயதில் இருந்து பத்துவயதை ஒட்டிய பிள்ளைகள் இருக்கும் பெண்கள். இது வயதான மனைவியுடன் போக சோம்பேறித்தனப்பட்டு பெண்கள் குரூப்பாகப் பார்த்து காசிக்கு அனுப்பும் பயணமும் இல்லை. பெண்கள் வீட்டைச் சுமந்து கொண்டே இருக்காமல், பள்ளித்தோழிகள் உடன் தொடர்பு வைத்துக்கொண்டு ( மணமானால் கணவரின் நண்பர் வீட்டுப்பெண்கள் அல்லது அலுவலக, பக்கத்து வீட்டுப் பெண்களே தோழிகள் இல்லையா!)ஒரு வெளிநாட்டுப் பயணம் சாத்தியமாகி இருக்கிறது.
சமகால அரசியல் நகைச்சுவை இயல்பாக வருகிறது இவருக்கு;
“எனக்கு அளிக்கப்பட்டிருந்த சாப்பாட்டின் பெயர் hindu meal. பெயரைப் படித்தவுடன் கோமியம் தருவாங்க போல என்று நினைத்திருந்தேன்.”
“முதல் நாளும் கடைசி நாளும் 20-25 கிலோ லக்கேஜ்களை சுமந்து கொண்டு அறுபது படிகள் ஏறி இறங்குவதற்குள் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி தேர்தல் முடிவு போல் ஆகிவிட்டது.”
இது Travelogue இலக்கணத்தில் வரும் நூல் இல்லை. பயணத்தை ஒரு அனுபவமாகப் பகிர்ந்து கொள்ளும் நூல். அவருடைய பார்வை எதுவோ அதையே சொல்லி இருப்பது இந்த நூலுக்கு சுவாரசியத்தைக் கூட்டுகிறது. உதாரணத்திற்கு Budapestஐப் பற்றி சொல்கையில் சொல்கிறார். ” இங்கே ஜனத்தொகையும் குறைவு, Fertility centresம் குறைவு. அதே போல் தனித்தமிழில் எழுத வேண்டும் என்று முனையவில்லை, அதனால் அப்புறம் என்னாச்சு தெரியுமா என்று முன்னால் நின்று சொல்லும் Flow வந்துவிடுகிறது.
இன்னொரு விசயம் இதைத்தான் சொல்லவேண்டும் என்ற hypocrisy வரையறைகளை வைத்துக்கொள்ளாத எழுத்து.
one sittingல் படிக்கக்கூடிய அளவு சிறிய புத்தகம். சுற்றிய இடங்கள் குறித்து சொல்லாமல் இல்லை, ஆனால் முன்னர் சொல்லியது போல் அனுபவப்பதிவாகவே நூல் எழுதப்பட்டு இருக்கிறது. பெண்கள் பயணம் செல்ல முற்பட வேண்டும். அவர்களது Comfort zoneஐ விட்டு வெளிவருகையில் தான் அவர்களின் சுயம் அவர்களுக்கே தெரியும். இதைப் படிக்கும் வெகு சிலருக்கேனும் இந்த நூல் அவர்கள் இதயத்தின் ஓரத்தில் இருந்து கொண்டு, தேவைப்படும் சமயத்தில் ஒரு உந்துதலைத் தரக்கூடும்.
https://www.amazon.in/dp/B07ZZXJFFJ/ref=cm_sw_r_wa_apa_glt_CKYGQB437FXW0PCXZW46