மோகனரங்கன். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கிவருபவர். இதுவரை இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகள் மொழிபெயர்ப்பு, ” குரங்கு வளர்க்கும் பெண்” வாசகர்கள் தவறவிடக்கூடாத நூல். இது இவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பு.
நல்ல கவிதைகள் காட்சிப்படுத்தலுடன் முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லா நல்ல விசயங்களிலுமேயே இன்னும் இன்னும் என்று மனம் தேடும். இந்தக்கவிதையில் கருவறைக்கதவு சாத்தியிருக்கிறது. விளக்கு படி நடுவில் என்றால் கதவு சாத்தியபிறகே அது வைக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணெய் தீர்ந்து விடும் நிலையில் கடைசித்துளியில் எரிகிறது. மூடிய கதவைப் பார்ப்பது அபசகுனம் என்பதால் பெருமூச்சு எழுந்திருக்கலாம். இப்போது உள்ளேயும் வெளியேயும் இருள். நினைவழிந்து தனியே நிற்பது ஆணா இல்லை பெண்ணா! எனக்கென்னவோ ரவிக்கையை வைத்து விழியோர நீரைத்துடைக்கும் பெண்ணின் ரூபம் தெரிகிறது.
” கதவடைத்திருந்த
கருவறையின் முன்
கற்படியின் நடுவே யாரோ
ஏற்றிவைத்துப் போயிருக்க
எஞ்சியிருக்கும்
கடைசிச்சொட்டு எண்ணெய்யில்
காற்றிலாடிக்கொண்டிருந்தது
அச்சுடர்.
எனதொரு பெருமூச்சு
போதுமாகயிருந்திருக்கும்
ஊதியணைக்க
உய்த்துணரவோ
உள்ளத்து இருள் முழுவதையும்
உரித்துக் காட்டியபடி
நினைவழிந்து நிற்கிறேன்”
சொற்களுக்கு கட்புலனாகச் சிறகுகள் உண்டு என்ற கவிதையைக் கடந்து வந்தால் இந்தக்கவிதை. பிரம்மாண்டத்தைக் கண்டு அடிமனதில் பயம் யானைக்காக மட்டுமில்லையே. அந்தக் கடைசி இரவில் அலங்காரத்தம்மாள் கூட பிரம்மாண்டமாகத்தான் இருப்பாள்.
“அங்குசத்தை
அழுந்தப்பற்றும்
கையின் நடுக்கத்தை
அரைக்கண்ணால் பார்த்தபடியே
கால்மாற்றி நிற்கிறது
காலம்”
ஆணோ இல்லை பெண்ணோ, இப்போது இரண்டாவது பார்வை பார்க்காது கடக்கும் எதிர்பாலினத்தைக் கடந்திருந்தால் இவ்வரிகளின் முழுவீச்சை உணர்ந்து கொள்வீர்கள், நீரீன் தடம் ஓடிய நீருக்கடியில்.
“இன்றும் நிற்க
நிழல் ஏதுமில்லா
நெடுவழியில்
உடலோடு ஒடுங்கி
உயிரும் தகிக்கையில்
நெகிழ்ந்து
நீரென நினைவை
பருகத்தருவதுமந்தப்
பழைய குப்பிதான்”
எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. எத்தனைமுறைப் படித்திருப்பேன் என்ற கணக்கேயில்லை. சீரிழந்த ஈற்றடி.
“மனமுடைந்து
நீர்தளும்பும் கண்களோடு
நீ திரும்பிப் போகையில்
வழிமறித்து தடுத்திருக்கலாம்
தேறுதல் வார்த்தைகள் சொல்லவும்
கூடத் தோன்றாது
திகைத்து நின்றுவிட்டேன்
மரம் போல்ஆயிற்று வெகுகாலம்
இப்போது
இலைகள் உதிர்ந்து
கிளைகள் முறிந்து
பட்டைகள் தளர்ந்துவிட்டன
அடியோடு சரிகிற காலமும் விரைவில் வரும்
அப்போது
சவகாசமாக வந்து சேரும்
குழிதோண்டுபவர்கள்
காண்பார்கள்
உன் திசை நோக்கி
ஒடி ஓய்ந்திருக்கும் வேர்களை
அவற்றில் ஒட்டியிருக்கும் மண்துகள்களில்
இன்னமும் எஞ்சியிருக்கும் ஈரத்தை
அறுத்து அடுக்கியபிறகு
அடித் துண்டில்
வரிவரியாய் சுழித்துக்கிடக்கும்
வட்டங்களை வருடிப்பார்த்து ஒருவன் சொல்லக்கூடும்
வைரம் பாய்ந்திருக்கிறது
நெஞ்சு வேகும் மட்டும்
நின்று நிதானமாக எரியும்.”
Frog Prince என நினைத்து முத்தமிட்டால் ராட்சசன் வருவது, மூன்றுமுறைத் தற்கொலை முயற்சிக்குப்பின் தவறான துணையைத் தேர்ந்தெடுப்பவள், கதவின் சிறிய இடைவெளி மூடுவதற்கு முன்பா இல்லை திறப்பதற்கு முன்பா என்ற தவிப்பில் ஒருவன், கதையைத் தானே எழுதிக்கொள்ளும் கதைமாந்தர், ஊர்குளத்தில் விஷம் கலந்தவனின் கண்கள், வினோத நூலகம் என்று பரந்த தலைப்புகளில் பழந்தமிழ் சொற்களில் கவிதைகள். கவிதைகளின் தலைப்பு பெரும்பான்மை சங்கப்பாடல் வரிகள்.
Stockholm syndrome பற்றியும் ஒரு கவிதை இருக்கிறது. ராவணன் ஐஸ்வர்யாராயின் கண்ணில் தெரியும் அந்த வாத்ஸல்யம்.
மோகனரங்கனின் கவிதைகள் முழுசரணாகதி அடைந்த போதிலும், பெண்கள் பிரதிபலனாகச் செய்வது விலகிப்போவது, கசந்து போவது, புறங்காட்டுவது, அக்கரையில் நிற்பது என்று அல்லாதன அனைத்தும் செய்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி உடன் இருக்கும் இரண்டு பெண்கள் சாளரம் வழி வெட்டவெளியையோ அல்லது இருளையோ வெறிக்கிறார்கள்.
குறைவாகவே எழுதினாலும் நிறைவாக எழுதுபவர் மோகனரங்கன். உணர்வுகளைப் பிழிந்து எழுதும் கவிதைகளில் கொஞ்சம் கவனக்குறைவானாலும் நாடகத்தன்மை மிஞ்சிவிடும். ஆனால் இதில் ஒரு கவிதையில் கூட அப்படித் தோன்றுவதில்லை. என்வரையில் ஒருநாளில் படித்து முடிக்க முடியாத தொகுப்பு நல்ல கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்பும் அதில் அடக்கம்.
பிரதிக்கு :
தமிழினி 86672 55103
முதல்பதிப்பு ஜனவரி 2021
விலை ரூ 90.