ஆசிரியர் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் வெம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அடிப்படையில் கவிஞர். இதற்குமுன் ஆறுகவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் குறிப்பிடத்தக்க மரக்கறி, அன்னா ஸ்விர், குளோரியா ஃப்யூடர்ஸ் கவிதைகள் போன்ற நாவல், கவிதைகள் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு.

முன்னுரையில் இவர் ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியிருக்கிறார். ஆண்டாள் மேல் மையல் கொண்டால் அவர் சமகாலத்தவரா? நாட்டியப் பேரொளி பத்மினி அன்னை வயதானவராயிற்றே! ஆக சமகாலம் என்பது மனதுக்கு ஒன்று ஸ்தூல உலகில் மற்றொன்று.

O. Henry இன் கதைகள் முடிவில் ஸ்தம்பிக்க வைக்கின்றன. திரில்லர் நாவல்கள் ஒருவிதமாய் Classics மற்றொரு விதமாய் ஸ்தம்பிக்க வைக்கின்றன. அருவிகளின் சிறுநகரில் சாளரக்காட்சிகளை கடக்கும் கவிதை கடைசியில் ஸ்தம்பிக்க வைக்கிறது.

” அருவிகளின் சிறுநகரில்
பொது விடுமுறை
பொது விடுதலை
எல்லோரும் அழகாகிறார்கள்
எல்லோரும்அண்ணாந்து பார்க்கிறார்கள்
எல்லோரும் உச்சி குளிர்கிறார்கள்
மனநலக் காப்பகத்திலிருந்து
ஒரு சிறியகூட்டமும்
மனநோய் தேசத்திலிருந்து
ஒரு பெரிய கூட்டமும்
பேரருவியை நெருங்குகின்றன”

மனநிலை தான் எல்லாவற்றிற்கும். கவலையில் நாம் இருக்கையில் காணும் எல்லோரும் சிரிப்பது போல் தோன்றும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிப்படுகின்றன என்ற தீராநம்பிக்கையில் ஆயுளைக் கழிப்போமாக!

” தொலைவில் ஒலிக்கும்
அதிகாலை நாதஸ்வரமேளம்
திடீரென ஒரு புளிப்புக்காற்றைக்
கொண்டு வருகிறது
எவ்வளவு காலப்புளிப்பு”

சின்னச்சின்ன விசயங்கள் தான் வாழ்வை சுவாரசியமாகவும், அழகுள்ளதாகவும் ஆக்குகின்றன. பெரிய விசயங்கள் பேரலை, காலை இழுக்கையில் உயிர்பயம் தவிர வேறொன்றும் இல்லாது செய்வதுபோல் செய்து விடுகின்றன. கடித்த எறும்பைக் கசக்காது ஊதி விரட்டுகையில் நீங்கள் தேவன்.

” ஓடை மணலில்
தோண்டிய குழியில்
கொஞ்சம் நீர்பரப்பி
அதில் பிடித்த மீன்களை
நீந்த விட்டிருக்கிறோம்
அந்தச்சிறு பள்ளத்தில்
சிறுபொழுதேனும் நீந்தக்கிடைத்த
சிறிய புன்னகை
எங்களுக்கும் கிடைக்கும் தானே?”

பசித்தவன் பார்க்கும் பழங்கணக்கிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது. பாரிமகளிர் கூட அன்றிருந்த எதுவும் இன்றில்லை என்று தானே புலம்பினர்.

” இரவின் பிசுக்கள் போக்கி
அதிகாலைகளில் மஞ்சள் உரசிக்குளித்து
கூந்தலை முடிச்சிட்டதெல்லாம்
பழங்கதை
பின்புறத்தை ஆரத்தழுவி பின்கழுத்தின்
பிடரிமுடிகளின்
வாசனை நுகரும் பூனைத் தருணங்கள்
வருவதே இல்லை
ஒவ்வொரு வாசனையும்
காற்றின் காலத்தில்
எங்கோ எப்போதோ
தொலைந்து போனது
போகட்டும்.
இப்போது ஜன்னலருகில்
மைனாக்களின் கெச்சாளம்”.

இவரது முந்தைய தொகுப்புகள் போலவே அங்கங்கே சில கவிதைகளில் வெம்பூரைத் தூக்கிச்சுமக்கிறார். மூதூரின் அளிச்சேற்றில் மீன்கள் மிதக்கின்றன. சாணம் மெழுகிய சின்னத்திண்ணையில் தாத்தா மாடுகளோடு தூங்குகிறார். வேப்ப மரத்தின் பின்னால் ஒளிந்த சிறுபெண் இத்தனை காலத்திற்குப்பிறகு திடிரென எட்டிப்பார்க்கிறாள். அதிகாலை இருள் பிரியுமுன் கிராமத்துத் தேவதைகள் நடமாடும் சுள்ளாக்கரை. உள்ளங்கையில் பருப்புக்கடைந்து, குழம்புவைத்து விரல்நுனிகளில் கூட்டுப்பொறியல் செய்து பரிமாறிய நினைவுகள் இன்னும் கரைந்து போகவில்லை.

அப்பா அம்மா அநேக கவிதைகளில் வருகிறார்கள். அப்பாவின் அறை கவிதை அதிரவைக்கிறது. பறக்கும் மின்மினியைப் பிடிக்க கைகள்வீசி மூடித்திறந்த கையில் ஒன்றுமில்லாததைக் கண்ட ஞானம் போல் வாழ்க்கையைப் பார்க்கும் கவிதைகள் இருக்கின்றன. மரணத்தைக் குசலம் விசாரிக்கும் கவிதைகளும் அங்கங்கே. வாழ்க்கையின் அற்புதத் தருணங்களைப் படம்பிடிக்கும் அல்லது சாதாரண தருணங்களைத் தன் பார்வையால் அற்புதமாக்கும் கவிதைகள் நிறைந்த தொகுப்பு.

காமம் பல கவிதைகளில் சவ்வூடு பரவல் நடத்தியிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்ததை விட எப்போதும் மீதியாய் நிறைய இருக்கும், கண்முன் சர்ப்பமாய் நெளியும் காமம். உயிர்சுவையை அறியத்துடிக்கும் துடிப்பு. எண்பத்து ஏழில் இவரது முதல் தொகுப்பு
இது ஏழாவது எனும் போது சராசரியாக ஐந்து வருடங்களுக்கு ஒரு தொகுப்பு என்பது குறைவாக எழுதுவதே. தமிழ் சங்கப்பாடல்களையும், ஆங்கிலத்தின் இன்றைய கவிதைகளையும் ஆழமாகப் படித்துப்பின் கவிதை எழுதுபவர்களுக்கு மொழியின் பலமும், வீச்சும் தானாக அமைந்து விடுகின்றன. அப்படி எழுதும் வெகுசிலரில் இவரும் ஒருவர்.

பிரதிக்கு:
தமிழ்வெளி 90940 05600
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ 100/-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s