நுழைவாயில் – கணேஷ் வெங்கட்ராமன்:
சீக்கியரின் புனிதநூலைத் தழுவி எழுதப்பட்ட கதை என்று குறிப்பு சொல்கிறது. கெட்டவர்கள் திருந்துகிறார்கள். வர்க்கபேதம் பார்க்காத முதல் குருத்வாரா தொடங்குகிறது. என் பெயர் நானக் என்று சொல்லும் அதிர்வுக்காக எழுதப்பட்ட கதையா இது!
விமானதளத்தை விற்ற சிறுவன் – டெம்சுலா ஆவ்- ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எம்.ஏ.சுசிலா:
இரண்டாம் உலகப்போருக்குப் பின் அஸ்ஸாம்-பர்மா எல்லையில் அமெரிக்கர்கள் கூடாரத்தைக் காலி செய்கையில் நடக்கும் கதை. 90களில் எல்லா வங்கி பயிற்சிவகுப்புகளிலும் சொல்லப்பட்ட உண்மைக்கதை இவருக்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம். இல்லாத ஏர்போர்ட்டை 242 மில்லியன் டாலருக்கு விற்ற நைஜீரியன் கதை. இந்தக்கதையில் பெரிதும் கவர்ந்தது எம்.ஏ.சுசிலாவின் மொழிபெயர்ப்பு. எனக்குப் பிடித்த Wuthering Heights, Jane Eyre, Little Women முதலிய நூல்களை இவரது மொழிபெயர்ப்பில் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நண்பன்- மலேசியா ஸ்ரீகாந்தன்;
இவர் எழுதி நான் படித்த கதைகளிலேயே சிறந்த கதை இது தான். மலேசிய எஸ்டேட் வாழ்க்கை சிறுகதையில் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் தேய்ந்து மலாய் வளர்கிறது. பல மலேசியக் கதைகளில் வரும் திருவிழாவும் தீமிதியும் வருகிறது. இருபது வருட நினைவுகள், ஊர் வம்புகள் என்று விரையும் கதை ஒரு பிராயசித்தத்தில் முடிகிறது. பாராட்டுகள் ஸ்ரீகாந்தன்.