ஆசிரியர் குறிப்பு:
வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருப்பூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர். இவருடைய முந்தைய மூன்று நாவல்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. இது நான்காவது நாவல்.
அம்மன் நெசவு படித்து உடன் இதைப் படிக்க நேர்பவர்கள், பெயர் வித்தியாசத்தினால் மட்டுமல்ல, மொழிநடை வித்தியாசத்தினாலும் இரண்டும் வேறுவேறு எழுத்தாளர் எழுதியது என்று உறுதியாக நம்புவார்கள். சமீபகாலமாக ஆன்மீகத்தின் சாயலும் இவர் எழுத்தில் அங்கங்கு கலக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி வீட்டைவிட்டு வெளியேறி ஒவ்வொரு நாளிலும் அவருக்கு காணும் மனிதர்களும், அறிந்து கொள்ளும் விசயங்களுமே திரைக்கதை. இந்த நாவலிலும் வீட்டைவிட்டு வெளியேறும் ஒருவரின் அனுபவங்களே கதை.
ஒரு கணம் என்பதைக் கடக்க சிலநேரம் ஒரு யுகம் ஆகிறது. என்னைப் பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல எடுத்துக் கொள்ளும் ஒரு கணம், பிரியத்துக்குரியவர்கள் கண்முன்னே உயிரைவிடும் ஒரு கணம்,
முதன்முதலாய் பெற்றோர் ஆனதைக் கண்களால் பார்க்கும் அந்த கணம். பொதுவாக எல்லா கணங்களும் கடிகாரமுள் நகர்வது போல் கவனிக்கப்படாமல் நகர்கின்றன. ஆனால் சில கணங்கள் மட்டும் நினைவில் உறைந்து, நிம்மதியைக் கொன்று, அலைக்கழிப்பை ஏற்படுத்துகின்றன.
கதைசொல்லி குற்றஉணர்வில் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். குற்ற உணர்வும், கழிவிரக்கமும் அக்கா தங்கைகள். சகோதரிகள் சிறுவயதில் இருந்து நாம் மறந்துவிட்டோம் என்றிருந்த குற்றங்களை ராகத்துடன் பட்டியல் இடுவார்கள். முழுராத்திரித் தூக்கம் என்பதை மறக்கடித்து கொடுங்கனவில் திடுக்கிட்டு விழிக்க வைப்பார்கள். சிரித்தால், சிரிக்கலாமா நீ என்று கேள்விகேட்பவர்கள் கதறி அழுதாலும் கவனிக்காதது போல் இருப்பார்கள்.
தீர்த்த யாத்திரையில் உடல் நிகழ்காலத்திலும், மனம் கடந்த காலத்திலும் பயணம் செய்கிறது. நினைவுகள் பின்னோக்கி நகர்வது நிம்மதியிழத்தலின் அறிகுறி. சங்கரி, மனோகரி, ஜெயந்தி, அர்ச்சனா என்பது முரளி கடந்து வந்த பெண்கள். பெயர்களில் என்ன இருக்கிறது? ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் காலமெல்லாம் நினைவில் சுமந்து, இறந்தகாலத் தவறுகளை சரிசெய்துவிடத் துடிக்கிறார்கள். எச்சில் தொட்டு சிலேட்டில் அழிக்கும் எழுத்தல்லவே பழையகாலக் குற்றங்கள்.
கோபாலகிருஷ்ணனின் கதை சொல்லல்
புத்தகத்தை முடிக்கும் வரை பிரிய மனமில்லாது செய்கிறது. யோக ஆஞ்சநேயர் பற்றி எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் சங்கரியை, மனோகரியை, அர்ச்சனாவை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. கதைகளில் கூட நமக்கு வேண்டியதை மட்டும் தேடி எடுத்துக்கொள்கிறோம். முரளியிடம் எல்லோரும் கதை சொல்கிறார்கள், காவலாளித் தாத்தா, செல்லத்தின் கணவரின் அண்ணன், பசியும் பெரிய வீடுமாய் கிழவர்கள், டாக்டரின் கணவர்…… முரளிக்கு எல்லா பதில்களும் கிடைத்து விடுகின்றன. ஆனால் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் போது யாரால் நிம்மதியாக இருக்கமுடியும்?
பிரதிக்கு :
தமிழினி 86672 55103
முதல்பதிப்பு ஜனவரி 2021
விலை ரூ 220