ஆசிரியர் குறிப்பு:
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். திருச்சியில் வசிப்பவர். இருபது வருடங்களாக எழுதிவரும் இவரது பல நல்ல கதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
கண்டதை, கேட்டதை சரிநுட்பமாக வாசிக்கத்தரும் முயற்சியே என் கதைகள் என்று இவர் முன்னுரையில் சொல்லி இருக்கிறார். கதைகள் வாழ்க்கையை ஒட்டி நடைபயில்வதும், வாசிப்பவர்கள் அதற்குள் தங்களை அடையாளம் கண்டு கொள்வதும் இப்படித்தான். முழுதும் கற்பனையில் எழுதப்படும் கதைகள் மழையைப் பார்த்து நடுங்கும் வண்ணநரிகள்.
Fantasy என்பது நமக்கு வாய்மொழிக் கதைகள் சொல்வதில் இருந்தே கலந்து வருவது. எழுத்தாளர்கள் எல்லோருமே பரிசோதனை செய்து பார்க்க விரும்புவது. எழுத்தில் புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் முதலிய கதைகளில் இருந்தே பான்டஸி இருக்கிறது. கற்பனை உலகத்தைத் தயார்செய்து அதில் உண்மைவிசயங்களை உலவவிடும் பான்டஸி கதைகள் முழுக்கற்பனையைவிட எனக்குப் பிடித்தவை. கவுரதை கதையும் முதல்வகைபேன்டஸி தான். ஸ்கூலுக்குப் போகனும்னா சாக்லேட் தரணும் என்று குழந்தை பேரம் பேசுவது போல், எல்லை தெய்வமும் பேரம் பேசுவது நன்றாகத் தான் இருக்கிறது.
நாய்சார் கதையில் காதல்மணம் என்று தெரியுமுன்னரே ஒரிரு வரிகளில் மனைவியின் மீதான காதலைத் தெரியப்படுத்துவது, நாய்களின் ஐந்து போஸ்கள் விளக்கம், மனைவிக்கும் நாய்க்குமான மௌனஉரையாடல் எல்லாமே மெயின் கதையில் இருந்து துண்டாகத் தெரியாமல் இருப்பது நல்ல எழுத்தாளருக்கான அடையாளம்.
ஊட்டமில்லாமல் பால்சுரக்காத மார்புகளை உடைய புனிதா, யாரும் சீந்தாத கோயில் லிங்கத்திற்கு பூபோட பணம் தரும் இஸ்லாமியர் இதயத்துல்லா, வீடுவீடாகப் போய் சவரம்
செய்யும் நாராயணன், நாற்பது வருடங்கள் எல்லா முரண்பாடுகளுடனும் துளிக்காதலுடனும் கழிக்கும் இந்திய தாம்பத்யம், ஆத்தா சாகக் காத்திருக்கும் துரைராசு, தம்பி மகளை தன்வீட்டுக்கு கொண்டுவராத ஏக்கத்தில் இருக்கும் அம்மா என்று எல்லோருமே நாம் எங்கோ பார்த்த கதாபாத்திரங்கள்.
மூளைக்கு தொடர்ந்து பரிமாற உடல் என் பங்கு எங்கே என்று கேட்கும் என்றிருப்பார் தி.ஜா. சாப்பிட்டது எல்லாம் கழிவாய் போய்விடுவது போல் மனம் தின்னதைக் கழிக்க வழியில்லை என்கிறார் கிருத்திகா.
Diane Broeckhoven எழுதிய A Day with Mr. Jules கதைக்கருவும் இயற்கை கதைக்கருவும் ஒன்றே. ஒன்று குறுநாவல் மற்றொன்று சிறுகதை. இரண்டையும் எழுதியவர் பெண்கள். இரண்டிலும் கணவர் இறக்க மனைவி பிணத்துடன் தனியாக இருக்க நேரிடுகிறது. ஆனால் கதைசொல்லலில் இரண்டுமே வேறுவேறு நிலங்களின் வாழ்க்கையைக் காட்டுகின்றன. இரண்டுமே நல்ல கதைகள். இந்தக் கதையை பலவருடங்கள் நினைவில் வைத்திருப்பேன்.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு. கதைகள் பக்கஅளவில் பன்னிரண்டு பக்கங்களுக்கும் குறைவானவை. வறுமையில் அல்லது நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள்.
அன்பும் உறவும் கிருத்திகாவின் கதைகளின் அடிப்படை.
கிருத்திகா கதைகளில் சொல்லாமல் சொல்லும் விசயங்கள் மற்றும் உணர்வுகளே இவரது கதைகளை அழகாக்கியிருக்கின்றன. வாசம் கதையில் அம்மா நிர்மலாக்காவிடம் ஏதேனும் சொல்லியிருந்தால் கதையின் அழகு கெட்டிருக்கும். அம்மா மனது என்ன என்பது நிர்மலாக்காவிற்கும் தெரியும். பிரியம் கதையிலும் சொல்லாமல் சொல்லும் விசயங்கள் ஏராளம். கயிற்றில் நடக்கும் கதை. இவர் தவிர்க்க வேண்டியது வாழ்வெனும் பெருந்துயரம் போன்ற புராணக்கதைகளை மீட்டுருவாக்கம் செய்வது. வலுவான காரணமின்றி புராணக்கதைகளில் பார்வைக் கோணத்தை மட்டும் மாற்றுவது தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கிருத்திகா தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார். தொகுப்பாகப் படிப்பது எழுத்தாளரின் ஆளுமையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுவது. இன்னும் அடுத்தடுத்து இவரது தொகுப்புகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. கூர்ந்து விசயங்களைக் கவனித்து, சேமித்து, தேவை வருகையில் கதைகளில் உபயோகிக்கிறார். அநாவசியமான வார்த்தைகள் இல்லாத தெளிவான கதைசொல்லல். எந்த உணர்வையும் பிழியப்பிழிய கதைகளில் தராமல் வாசகருக்கு அந்த உணர்வைக் கடத்தும் வாக்கிய அமைப்புகள் இவரது பலம். இன்னும் அதிகமாக கவனத்தைப் பெறத்தகுதி வாய்ந்த எழுத்தாளர்.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ 140.