பால்டாக்ஸி அமெரிக்க நாவலாசிரியர். திரைக்கதை ஆசிரியர். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் பல Legal tnrillerகளை எழுதியுள்ளார். பல சேவா நிறுவனங்களில் இவரும் இவரது மனைவியும் தீவிரப் பங்களிப்பு செய்து வருகிறார்கள். இவரை இதுவரை படிக்காதவர்களுக்கு, Absolute Power என்ற அமெரிக்க அதிபர் ஒரு கொலை செய்வதைப் பார்க்கும் சாட்சி பற்றிய நாவலைப் பரிந்துரை செய்வேன்.இது இவருடைய புதிய நாவல் 2021 ஏப்ரல் 15ல் வெளியாகியது.
புக்கர் புத்தகங்கள் அல்லது தொடர்ந்து Classics வாசித்த பிறகு திரில்லர் படிப்பது என்பது வெயில்கால இரவுகளில்
மேல்துணியின்றி கைலி மட்டும் கட்டிக்கொள்ளும் சுதந்திரத்தின் ஆசுவாசத்தைத் தருவது. யோசித்துப் பார்த்தால் இப்படிச்சொல்லியே கிளாசிக்குகளை, சீரியஸ் இலக்கியங்களை விட திரில்லர் நாவல்களே நான் அதிக எண்ணிக்கையில் படித்திருக்கக்கூடும்.
ஆர்ச்சர் இரண்டாம் உலகப்போரில் போரிட்டுப் பின், ஒரு பெண்ணுக்கு உதவப்போய் மூன்று வருடம் சிறைசென்று, நண்பர் ஒருவர் கொடுத்த சிபாரிசுக் கடிதத்துடன் வில்லியிடம் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைதேடி, கலிபோர்னியாவின் அருகிலிருக்கும் பேடவுனுக்கு சென்றதும், வேலையின்றி பணத்துக்குச் சிரமப்பட்ட வில்லிக்கும், வேலைதேடி வந்த ஆர்ச்சருக்கும், மேயர் தேர்தலில் போட்டியிடுபவரிடம் இருந்து வேலை கிடைக்கிறது. ஆனால் அந்த வேலையில் வரிசையாக பிணங்கள் விழுகின்றன. அடுத்தது வில்லியோ இல்லை ஆர்ச்சரோ கூட இருக்கலாம்.
பால்டாக்ஸி மீண்டும் அமெரிக்க கலிபோர்னிய மாநில சட்ட நுணுக்கங்களைப் புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார். அமெரிக்காவில் மாநிலங்களுக்கு மாநிலம் சிவில் சட்டம் மட்டுமல்ல கிரிமினல் சட்டங்களும் மாறுபடும். லாஜிக்குடன் கூடிய விறுவிறுப்பு பால்டாக்ஸியின் பெயர் ஏந்திய புத்தகங்கள். எட்டாவது கதாநாயகனாக ஆர்ச்சரை வைத்து இது இரண்டாவது புத்தகம், Stand alone புத்தகங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் என்னும் போது இருபத்தைந்து வருடங்களில் அதிகமாகவே எழுதியதாகத் தோன்றுகிறது.
எதையுமே மறக்கமுடியாத சாபம் பெற்ற Memory Man போல இவரது ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானவர்கள்.
ஆர்ச்சர் பெண்கள் கோபப்படும் அளவிற்கு அவர்களிடம் நாகரீகமாகவும், ஆண்கள் கோபப்படும் அளவிற்கு அவர்களிடம் அதிகாரம் செலுத்தும் பேச்சைக் கொண்டிருக்கும் கதாபாத்திரம். 1949ல் கதைநடப்பதாக வைத்து பின்னணித்தகவல்களைத் தருவது எளிதான விசயமல்ல. அமெரிக்காவில் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்றாலும் தகவல் பிழை இருந்தால் நாராகக் கிழித்து தொங்கவிட்டு விடுவார்கள்.
https://www.amazon.in/dp/B08MFLMBBQ/ref=cm_sw_r_wa_apa_glt_EDS23WNCTT3SKSK87CRE