கேப்ரியல்லா கியூபா-மெக்ஸிகோ தம்பதியருக்குப் பிறந்தவர். மியாமியில் பிறந்து வளர்ந்து தற்போது Bay areaவில் வசிப்பவர். இவரது கதைகளும், கவிதைகளும் அமெரிக்காவின் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இது இவரது முதல் நாவல். 2021 மார்ச்சில் வெளியாகியது.
அமெரிக்க-ஸ்பெயின் போருக்கு முன் ஸ்பெயினின் ஒரு காலனி கியூபா. வறுமையும், சாவும் சூழ்ந்த கியூபா.
மரியா இஸபெல் அனாதைப்பெண். புகையிலை சுருட்டும் வேலைக்கு நடுவில் இலக்கியம், உரிமைக்குக் குரல் கொடுக்கும் அறிக்கைகள் படிக்கும் அன்டோனியாவை மணந்து கொள்கிறாள். எழுதப்படிக்கத் தெரியாத அவள், எழுத்துக்களிலிருந்து வார்த்தைகள், வார்த்தைகளிலிருந்து வரிகள் எனப் படிக்க ஆரம்பிக்கையில் குழந்தை பிறக்கிறது. அதே நேரத்தில் புரட்சியாளன் என்று அன்டோனியா சுட்டுக்கொல்லப்படுகிறான். இந்தக்கதை
மரியா இஸபெல்லுடன் முடியப் போவதில்லை. அவள் வழிவந்த ஐந்து தலைமுறைப்பெண்களின் கதைகளும்கூட.
அமெரிக்கக்கனவு உலகின் எல்லா நாட்டினருக்கும் இருப்பதே. அமெரிக்கா பொன் விளையும் பூமி. சொந்தநாட்டின் துயரங்களில் இருந்து தப்பித்துக் கொண்டு வசதிவாய்ந்த வாழ்க்கை வாழ அமெரிக்க வாழ்வைத்தேடிப் பயணம். இடப்பெயர்வு செய்யும் பறவைகள் அல்ல மனிதர்கள். முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்போருக்கு தினம் நரகம். அமெரிக்கர்கள் அடுத்த நாட்டுக்காரர்களிடம் பொதுவாகக் கருணையே காட்டாதவர்கள். ஒவ்வொரு புலம்பெயர்ந்த பெற்றோரின் குழந்தைகளும் எழுத்தாளராக ஆகும் போது அமெரிக்க Immigratuon கொடுமைகளை ஏதோ ஒரிடத்தில் பதிவுசெய்கிறார்கள்.
1800களின் கியூபாவில் இருந்து அடுத்த அத்தியாயம் 2014 மியாமிக்குள் விருட்டென்று நுழையும் பொழுது காலம் சற்றே ஸ்தம்பித்துப் பின் சுதாரித்துக்கொள்கிறது. முதல் தலைமுறைப்பெண்ணிடம் இருந்து ஆறாம் தலைமுறைப்பெண்ணுக்கு விரையும் நாவல், கியூபா, மியாமி, ப்ளோரிடா, மெக்ஸிகோ என்று பயணம் செய்து ஆறு தலைமுறைப் பெண்களின் கதையைச்சொல்கிறது.
மதுரை எண்பதுகளில் போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்கும் நகராக இருந்தது. ஒரு ரூபாயிலிருந்து நானூறு ரூபாய் வரை காசுக்கேற்ற பணியாரம் போல் போதைப் பொருட்கள். இன்றைய அமெரிக்கா போதைப்பொருட்களின் பல்லங்காடி. பள்ளிவயதுக் குழந்தைகள் பெரும்பாலும் அதற்கு பலியாடுகள். அமெரிக்காவில் வாழும் பெற்றோர் எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களது பெருத்தபயம் போதைப் பொருட்கள். இந்தத் தகவல் தரும் கனத்தில் கார்மன் அவளது மகளை நினைத்துக் கவலைப்படுவது நன்றாக விளங்கும்.
கடைசிப் பெண்ணைத் தவிர மீதி எல்லோருமே தங்கள் மகள்களுக்காக சகல சிரமங்களுக்கு நடுவே வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். Family treeல் ஆறு தலைமுறைகளில் ஆண்வாரிசு இல்லை. இதில் வரும் ஆண்களில் பலரும் பெண்ணிடம் வன்முறையில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். கார்மன் தாய் பற்றிய ரகசியத்தை மகளிடம் சொல்ல மறுக்கிறாள். மகள் தந்தை இறக்கும் வரை ஒரு ரகசியத்தைத் தாயிடம் சொல்வதில்லை. முன்னும் பின்னுமாய் நகரும் கதையில் வேறுவேறு கதைசொல்லிகள். முதல் நாவல் என்ற எந்த வித தடயமும் இந்த நாவலில் இல்லாது ஆற்றொழுக்கான நடை, நல்ல யுத்தியில் சொல்லப்படும் கதை. கியூபாவின் நூற்றாண்டு அரசியலும் கதையுடன் இழைந்தோடுகிறது. இன்னும் நூறுபக்கங்களாவது கூட்டியிருக்கலாம் இந்த நாவலுக்கு என்ற எண்ணம் அநேகமாக எல்லா வாசகருக்கும் வரும்.
Sometimes you wish the current read should never end.
https://www.amazon.in/dp/B08LDM86Y9/ref=cm_sw_r_wa_apa_glt_WN04B00XSW39Q3BYH390