ஜும்பாலகிரி இந்தியத் தாய் தந்தையருக்கு லண்டனில் பிறந்து மூன்றுவயதில் இருந்து அமெரிக்காவில் வளர்கின்றவர். நாம் தூரத்து சொந்தம் சொல்லி இவரை இந்தியர் என்ற வட்டத்தில் அடைக்கப் பார்த்தாலும் இவர் தன்னை அமெரிக்கன் என்று சொல்பவர், உணர்பவர். பல முதுகலைப் பட்டங்களும், முனைவர் பட்டமும் பெற்ற
ஜும்பாலகிரி Time போன்ற புகழ்பெற்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். புகழ்பெற்ற புலிட்சர் பரிசை வென்றவர். இவருடைய Namesake தவறவிடக்கூடாத நாவல். இந்த நாவல் 2021 April 27 அன்று வெளியாகியது.
ஜே.ஜே. சிலகுறிப்புகளை ஆரம்பத்தில் இருந்தோ, நடுவிலிருந்தோ, கடைசியில் இருந்தோ படிக்கலாம். அது போலவே இதுவும் Plot driven நாவல் இல்லை. நாற்பத்தாறு அத்தியாயங்கள் இரண்டிலிருந்து ஆறு பக்கங்களுக்குள், பெயரிடப்படாத ஒரு இத்தாலிய நடுத்தரவயதுப் பெண்ணின், ஒருவருட தருணங்கள்.
தனிமையும் எதிலும் பற்றின்மையும் இந்தப்பெண்ணின் பார்வையில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. பிறரால் Moody woman என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் அவள் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. மொத்தநாவலில் கோந்து கையில் ஒட்டி விரல்கள் பிரிக்கமுடியாமல் போகும் ஒரே சமயத்தில் மட்டும் வாய்விட்டு சிரிக்கிறாள்.
அவளுடைய பதினைந்தாவது பிறந்தநாள் பரிசாக, நாடகம் பார்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்த தந்தை திடீரென மரிக்கிறார். தாய்க்கு புத்தகங்கள் இல்லை மனிதர்களுடன் அளவளாவ வேண்டும், தந்தையின் மரணத்தின் பின் இவளுக்குத் தனிமை இப்படிக்கூட வந்திருக்கக்கூடும்.
காதலர்கள் இல்லாமல் இல்லை இவளுக்கு, ஒரே நேரத்தில் பல காதலர்கள். ஆனால் நிரந்தர உறவு எவருடனும் இல்லை. சிலவருடங்கள் நிலைத்த ஒரு உறவு, அவன் ஏமாற்றியதால் முறிந்து விடுகிறது. நம்மைப்போல் Permanently, unhappily married என்பதில் இவளுக்கு நம்பிக்கையில்லை.
தோழியின் கணவன் மேல் ஒரு கவர்ச்சி, தெரபிஸ்டிடம் சொல்லும் பயக்கனவுகள், நீச்சல்குளத்தில் நீந்தினால் உள்ளும்புறமும் சுத்தமாவதாக நம்புவது, சிறுவயதில் இருந்தே விலைகுறைவான பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்டதால் வசதிவந்த பிறகும் அதையே தொடர்வது,
சிறுபெண்ணின் தந்தை சிறுமி சோபாவில் கோடுகிழித்ததைச் சொல்லாமல் மறைத்ததை எண்ணிக் குமுறுவது, காதலன் ஒருவனின் அலைபேசி அழைப்பை நாள் முழுதும் எதிர்பார்த்து, அழைத்தவன் பொய் சொல்லியதும் அவனுடன் டின்னர் செல்ல மறுப்பது என்று எல்லாமே தருணங்கள். தருணங்களின் தொகுப்பே இந்த நாவல். தருணங்களிலிருந்து இந்தப்பெண்ணை முழுவதுமாக அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்த நாவல்.
தனிமையும், பற்றின்மையும் இருந்தாலும் ஒரு Arrogance என்பது இந்தப்பெண்ணிடம் இல்லை. கான்பரன்ஸில் மூன்று நாள் பார்த்த ஒருவரின் இறப்பை நாளிதழில் பார்த்து கலங்குவது, வெளிநாடு போகுமுன் அம்மாவுடனான சந்திப்பு, தோட்டத்தில் தலையில்லாத இறந்த சுண்டெலியைப் பார்த்து பயப்படுவது என்று பல விசயங்கள் அதை நிரூபிக்க.
இந்தப் பெயரிடாப் பெண்ணில் சில சதவீதம் லகிரியே கூட இருக்கக்கூடும். மிகவும் திறமைவாய்ந்த எழுத்தாளர் லகிரி. ஒரு பெண்ணின் அகஉணர்வுகளை, உறவுச்சிக்கல்களை மிக எளிதாக இவரால் எழுத்தில் வடிக்க முடிகிறது. அப்பாநினைவு அடிக்கடி கதையில் வருவது எழுதியதும் கதைசொல்லியும் பெண்கள் என்ற காரணத்தினால் இருக்கலாம்.
பெங்காலிகள், மலையாளிகள் சூழலுக்கேற்ப தங்களைத் தயார் செய்து கொள்வதில் வல்லவர்கள். பெங்காலிகளுக்குப் பிறந்த இவர் தன்னுடைய நாற்பது வயதுக்கு மேல் இத்தாலி கற்றுக்கொள்ள ஆரம்பித்து ரோமுக்கே குடிபெயர்ந்து விட்டார். இத்தாலியில் ஒரு நாவலை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இந்த நாவலையே முதலில் இத்தாலியில் வெளியிட்டுப் பின்னர் ஆங்கிலத்தில் இவரே மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இத்தாலியர்கள் இவரைத் தங்களில் ஒருவராகக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவின் தீவிரவாசகர் யாரைக் கேட்டாலும் அவர் இவரை அமெரிக்கர் என்பார். உலகம் எல்லாம் கொண்டாடும் தகுதிவாய்ந்த எழுத்தாளர் தான் லகிரி.
https://www.amazon.in/dp/B091D4LM56/ref=cm_sw_r_wa_apa_glt_B2WHBDX9TVKWE5QP846B