புக்கர் இன்டர்னேஷனல் கமிட்டி பேரிடர் காலத்திலும் மார்ச்சில் நீண்ட பட்டியல், ஏப்ரலில் இறுதி பட்டியல் என்ற வழமையான அட்டவணையைத் தவறாது கடைபிடித்து வருகிறது. காமன்வெல்த் நாடுகளில் இருந்து புத்தகங்கள் வரவேண்டும், இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் நீங்கியபிறகு உலகமெங்கிலும் இருந்து இலக்கியப் படைப்புகள் வரத்தொடங்கி, புக்கரின் இரண்டு பரிசுகளுமே உலகமெங்கும் உள்ள வாசகர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கும் விருதாக மதிக்கப்படுகின்றன .புக்கர் இன்டர்னேஷனலைப் பொறுத்தவரை மூலம் எப்போது இருந்தாலும் நடப்பு ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும், Nominationஐப் புக்கர் கமிட்டிக்கு அனுப்பவேண்டும் (கவனிக்கவும், நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் கூட அவர்களது புத்தகத்துக்கான பரிந்துரை மனுவை புக்கர் கமிட்டிக்கு அனுப்பவேண்டும்.) விருது வெல்லும் புத்தகத்திற்கு இந்தியமதிப்பில் ஐம்பத்துமூன்று இலட்சரூபாய் சரிபாதியாக மூல ஆசிரியருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும்.

பதிமூன்று புத்தகங்கள் இந்த வருடத்துக்கான நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. பக்கஅளவில் குறைந்த பட்சமாக அறுபது பக்கங்களும், அதிகபட்சமாக 450 பக்கங்களும். பன்னிரண்டு தேசங்களில் இருந்து பதினோரு மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பதிமூன்று நூல்கள். சிலிக்கும், ஸ்பெயினுக்கும் பொதுமொழி ஸ்பானிஷ், ஸ்பானிஷ் மொழியில் இருந்து இரண்டு புத்தகங்கள். பிரான்ஸ் இந்தப் பட்டியலுக்கு இரண்டு எழுத்தாளர்களைத் தந்திருக்கிறது.

சென்ற வருடத்தைப் போலவே மொத்தஎழுத்தாளர் எண்ணிக்கையில் அதிகம் பெண்கள். பதிமூன்றில் ஏழுபேர். ஏழு மில்லியனுக்கும் குறைவானோர் பேசும் Gikuyu மொழியில் இருந்தும் ஒரு புத்தகம், நான்கு மில்லியனுக்கும் குறைவானோர் பேசும் Georgian மொழியில் ஒரு புத்தகம், ஆறு மில்லியன் பேர் பேசும் Danish மொழியில் இருந்து ஒரு புத்தகம். அரபி மொழியில் இருந்து புக்கர் இன்டர்னேஷனல் தரத்திற்கு புத்தகம் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன.

Brief review of 13 books :

  1. I Live in the Slums by Can Xue:

மிருகங்கள், நிழல் மனிதர்கள், மரங்கள், ஆவிகள், பூதங்கள் தங்களது கோணத்தில் பார்க்கும் விசயங்களை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்தக் கதைகள். சீனாவின் தொன்மத்தை, நிலப்பரப்பை, நவீனவாழ்க்கை முறையை மேற்கத்திய சாயம் கலந்து கொடுத்திருக்கிறார் அநேகமாக எல்லாக் கதைகளிலும் பாண்டஸி வருகிறது. சிலகதைகளில் சர்ரியல் காட்சிகள் வருகின்றன. வீடற்றிருத்தல், நிலையற்ற தன்மை, மற்றும் மனித இருப்புக்கான நிலையான வடிவங்களிலிருந்து விலகநேரிடும் நிலைமை இவற்றை சுற்றியே கதைகள் நகர்கின்றன. முழுக்கவே சீன மண்ணின் கதைகள் இவை என்றாலும் உலகத்தின் எந்த நாட்டவரும் இந்தக்கதைகளுடன் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.

  1. At Night All Blood is Black by David Diop:

இது ஒரு முதலாம்உலகப்போர் நாவல். எங்கோ மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கறுப்பர்கள், பிரான்சுக்கு ஆதரவாக யுத்தம் செய்து மடிகிறார்கள். போர்முனையில் சொந்த படையினரிடமும் கறுப்பர்களுக்கு அநீதி நடக்கிறது. கட்டளைக்கு இணங்கவில்லை என்று கைகள் பின்னால் கட்டப்பட்டு ஜெர்மானிய படைவீரர்களுக்குக் பலி கொடுக்கப்படுகிறார்கள்.குற்றஉணர்வும் பழிவாங்குதலும் நாவல் முழுதும் ஒன்றாக பிரயாணம் செய்கின்றன. போர் ஒரு மனிதனின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி வெளிக்கொணர்கிறது என்பதை நாவல் எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லாமல் சொல்லிப்போகிறது.ஒரு கதைசொல்லியின் குரல் மூலம், போரின் கொடுமைகள், நிறவெறி, கறுப்பர்களை அடிமைப்படுத்தல் போன்ற ஏராளமான விசயங்கள் சொல்லப்படுகின்றன.

  1. The Pear Field by Nana Ekvtimishvili:

பெரியவர்களின் குரூர உலகத்திற்கு எதிராக, ஒருவருக்கு ஒருவர் துணையாகத் தோள்கொடுக்கும் சிறுவர் உலகத்தைப் பற்றிய உணர்ச்சிவசப்படாத சித்தரிப்பு இந்த நாவல். மனவளம் குன்றிய இந்தக் குழந்தைகளின் உலகத்தின் ஒரு சிலமாதங்களில் நடப்பது தான் இந்த நாவல். லேலா என்ற பதினெட்டு வயது சிறுமியின் கோணத்தில் விரியும் கதை. இந்தக் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் உண்மையில் நடந்ததா என்று அவர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. இவர்கள் சொல்வதை யாரும் வெளியில் நம்பப்போவதும் இல்லை. அது தான் இவர்களிடம் எல்லாவித வன்முறைகளில் ஈடுபடுபவருக்கு வசதியாகப் போய்விடுகிறது.

4.The Dangers of Smoking in Bed by Mariana Enríquez:

அநேகமாக எல்லாச் சிறுகதைகளிலுமே மாயயதார்த்தம் வருகிறது. மாய யதார்த்தம் கதைகளில் உண்மைச் சம்பவங்களுடன் கலந்து இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது, வாசிப்பனுபவத்தையும், சொல்லப்படும் விசயத்தின் அழுத்தத்தையும் கூட்டும். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் பொறுத்தவரை மாய யதார்த்தத்தை உண்மைசம்பவங்களை நோக்கி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே உபயோகிக்கிறார்கள். முரகாமியும் அவ்வாறே. மாய யதார்த்தத்தை மட்டும் கவனிப்பவர்களால் வாசிப்பனுபவத்தை முழுமையாகப் பெற முடியாது. அநேகமான கதைகளில் பெண்கள், பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் அந்த சமூகத்தில் நடப்பதன் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும்.

  1. When We Cease to Understand the World by Benjamín Labatut:

நூலின் முதல்பகுதி, அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல், இரண்டாம் உலகப்போர்களில் நடத்திய பேரழிவுகளைச் சொல்லி விரைகிறது. இயற்பியல், கணித சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பகுதி. இயற்பியலில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு பெறாதவர்களால் இந்த நூலை முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது. அறிவியல் குறிப்பாக இயற்பியலின் வரலாறு இந்த நூல். ஒருவகையில் இந்த நூல் Dystopian novel. Schrodinger க்கும் Heisenbergக்கும் அறிவுலகத்தில் யார் பெரியவர் என்னும் போட்டியைச் சுற்றி இந்த நூலின் கணிசமான பக்கங்கள் வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஐரோப்பிய விஞ்ஞானிகள் எல்லோரும் இந்த நாவலில் வருகின்றனர். இந்த நூலை ஏன் அல்புனைவாக எழுதாமல் புனைவாக எழுத வேண்டும்? ஒரு பேட்டியில் இவர் கூறியது போல Facts மனிதர்களின் மூளையில் ஓடும் சிந்தனைகளைப் படம்பிடிப்பதில்லை எனவே அதன் எல்லை குறுகியது. அடுத்தது தகவல்களின் இடைவெளியை நிரப்ப புனைவை விடப்பெரிய துணையில்லை.

6.The Perfect Nine: The Epic Gikuyu and Mumbi by Ngũgĩ wa Thiong’o:

கென்யாவின் வாய்மொழிக்கதை இது. பைபிளில், இஸ்லாமில் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்படுகிறாள். ஆனால் இந்தப் புராணக்கதையில் கடவுள் ஆண் பெண் இருவரையும் ஒன்றாகப் படைத்துப் பனிபடர்ந்த மலையில் நின்று கீழ்நிலங்களைப் பார்வையிட வைக்கிறார். இயற்கையின் பல சீற்றங்களில் இருந்து இருவரும் தப்பித்துப் பெண் ஒன்பது மகள்களைப் பெற்றெடுக்கிறாள். உண்மையில் பத்து மகள்கள். கடைசிப்பெண்ணுக்கு கால் ஊனம் என்பதால் கச்சிதமான ஒன்பது பெண்கள். அவர்கள் அழகு மனிதர்களை மட்டுமன்றி, பறவை, மிருகங்களையும் ஸ்தம்பிக்க வைக்கிறது. அவர்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ள தொன்னூற்று ஒன்பது மாவீரர்கள் வருகிறார்கள். இருப்பது ஒன்பது. எளிய வழி, யுத்தம் செய்து மிஞ்சும் ஒன்பது பேர் இவர்களை மணந்து கொள்வது. ஆனால் தகப்பனும் தாயும் மகள்களுமே ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை. பின் என்ன தான் செய்தார்கள்?

  1. The Employees by Olga Ravn:

ஓல்காவின் புதிய futuristic நாவல் இது.,
ஒருவகையில் எச்சரிக்கையுமாகும்.
ஓல்கா தொடர்ந்து அறிவியல் புனைவில் பரிசோதனைகள் செய்து வருபவர். வேலையால், செயல்திறனால் வரையறுக்கப்பட்ட வாழ்க்கையை பணியாளர்கள் கூட்டாக எதிர்க்கிறார்கள்.
ஓல்காவின் இந்த நாவல் கருத்துரு இலக்கியத்தின் (Concept Litetature) மாதிரியை பரிட்சார்த்தம் செய்துள்ளது.
வேறு வேறு குரல்களில் வாக்குமூலங்களின் மூலம் சொல்லும் கதையே இந்த நாவல். வாசிப்புக்கு எளிதான நாவலல்ல இது. அதிக கவனத்தையும் அதிகமான நினவாற்றலையும் கோரும் நாவல் இது. இந்தப் பிரச்சினையில் மனிதத்துவம் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே நாவல் முடிகிறது.

  1. Summer Brother by Jaap Robben:

இந்த நாவல் சகோதரபாசம் தான் கதைக்கரு என சொல்ல முடியாமல் பல்லடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ப்ரையனுக்கும் அவனது அப்பாவிற்கும் இருக்கும் உறவு, ப்ரையனின் Infatuatiom, ,ஹென்றி சகோதரர்களுடன் ஒரு Love and hate relationship, எமைலுடன் ஒரு நெருக்கம், அம்மா தன்னை எல்லோரும் நல்லவள் என்று சொல்ல மெனக்கெடுவது, எமைலின் Failed marriage என்று கொஞ்சம் கொஞ்சமாக நகரும் கதை முடிவில் எதிர்பாராத திருப்பத்தில் விரைகிறது. ராபென் வெவ்வேறு உறவுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்கள், மோதல்களை snapshots போல தொடர்ந்து எடுத்துக்கொண்டே போகிறார்.

  1. An Inventory of Losses by Judith Schalansky:

நூலின் தலைப்பு சொல்வது போல காலச்சுழலில் மூழ்கித் தொலைந்த பன்னிரண்டு விசயங்களைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
கொம்புக்குதிரை, பதினேழாம் நூற்றாண்டின் கட்டிடக்கலைக்கு சான்றாக இருந்த வில்லா, Boy in Blueவின் முதல் பிலிம்ரோல், கிரிஸ் நாட்டின் மிகச்சிறந்த பெண்கவிஞர் கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகள் முன் எழுதிய கவிதைகள், பதினான்காம் நூற்றாண்டின் Von Behr Palace, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரானிய மதத்தலைவரின் ஏழு புத்தகங்கள், ஜெர்மனியின் துறைமுகத்தில் இருந்த Oil Paintings, வாழ்நாள் சேமிப்பான புத்தகங்கள், ஜெர்மனியின் People Palace, Lunar Geography பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முதலியவை காலவெள்ளத்தில் அல்லது அதன் மதிப்பு தெரியாது அழிக்கப்பட்டவை.

10.Minor Detail by Adania Shibli:

இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜெருசலேம் இவற்றின் வரலாறு தெரியாது இந்த நாவலை முழுமையாகப் புரிந்து கொள்வது கடினம். அரசியலை நேரடியாகப் பேசாது, சம்பவங்களின் மூலம் அரசியலைப் புரிந்து கொள்ள வைக்கும் Political Novel இது. நூறுபக்கத்திற்கும் குறைவான இந்த நாவலை எழுத இவருக்கு பன்னிரண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. நாம் வருடம் பன்னிரண்டு எழுதுவதால் தான் புக்கர் இன்டர்னேஷனல் போன்ற விசயங்களை விரும்புவதில்லை. இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நாவல், ஒரு போர்வீரனின் விட்டேத்தியான பார்வையில் படர்க்கையில் சொல்லப்படும் நாவல், எதற்கும் பயந்துநடுங்கும் ஒரு இளம்பெண்ணின் கோணத்தில் தன்மையில் சொல்லப்படுகையில் மொழிநடை மட்டுமன்றி சொல்லப்படும் வார்த்தைகளும் மாற்றம் கொள்கின்றன. யாரும் எதிர்பார்க்காத முடிவு. ஒரு திரில்லர் நாவலின் சுவாரசியத்துடன் கதையை நகர்த்தி தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கிறார்.

  1. In Memory of Memory by Maria Stepanova:

நாவலின் ஆரம்பத்தில் அப்பாவின் சகோதரி (அத்தை) எண்பது வயதுக்கு மேல் இறந்து போகிறார். எல்லாவற்றிலும் Perfection, beauty எதிர்பார்க்கும் அன்றைய நிகழ்வுகளை டயரியில் பதிவுசெய்யும் பெண்மணி. அவர் வீட்டில் இருந்த ஏராளமான புகைப்படங்கள், டயரிகள், கடிதங்கள்,பிறபொருட்கள் சொல்லும் செய்திகள் இந்த நாவலில். முன்னோர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், சரித்திரத்தில் இடம்பெறாதவர்கள் என்று ஆரம்பத்திலேயே சொல்கிறார். ஒரு குடும்ப வரலாற்றின் மூலம் ஒரு தேசத்தின் வரலாறும் உடன் நகர்கிறது. சாதாரண மனிதர்கள் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் பார்வையாளராய் இருந்திருக்கிறார்கள். நான்கு தலைமுறைக்கதையை எழுதுவது என்பது புனைவில் மட்டுமே எளிது. பலர் இவர் பிறக்கும் முன்னரே இறந்து விட்டனர். ரஷ்யாவின் Iron Curtain காலத்தில் இருந்து 1991ல் Soviet Regime உடைந்த பின்னும் நாவல் தொடர்கிறது.

  1. Wretchedness by Andrzej Tichý:

இசைக்கலைஞர் ஒருவர் இன்னொரு இசைக்கலைஞருக்காகக் காத்திருக்கையில், வீடற்ற, முதல்நாள் இரவு தாக்கப்பட்ட இளைஞன் ஒருவனிடம் பேச்சுக்கொடுக்கையில் இவருக்குப் பழைய நினைவுகள் தொடர்ந்து கதைகளாய் வருகிறது. (இவனிடத்தில் நானிருந்திருக்க வாய்ப்பு பலமாக இருந்திருக்கிறது) Prague நகரமும், புறநகரங்களும் கதைக்களன்கள். துர்க்கனவின் நினைவு மீதங்களில் இருந்து முளைப்பவை இந்தக்கதைகள். சச்சரவு மற்றும்
குழப்பத்தில் மூழ்கிய நகர வீதிகளின் வலை அமைப்பை நினைவூட்டும் ஒரு படத்தொகுப்பே இந்த நாவல்.டிச்சியின் மொழிநடை விரைவானது, தன்னிச்சையாய் நகர்வது, ஒழுங்கில்லாதது, கொச்சை வார்த்தைகள் கலந்தது, ஆதியும் அந்தமும் இல்லாமல் கதைசொல்லியின் நினைவில் தோன்றும் விதத்தில் சொல்லப்படுவது. வரிகளும் அங்கங்கே தொடர்வரியாக சில இடங்களில் சின்ன வரியாக ஒரு ஒழுங்கின்மையை ஒழுங்காகக் கடைபிடித்தது போல்.
இந்த நாவல் வாசிக்க எளிதானதல்ல, இந்த நாவல் பொறுமையையும், இவரது பரிட்சார்த்த முயற்சிகளுக்கு தன்னை ஒப்புவிக்கும் வாசகமனத்தையும், கதைசொல்லியின் நிலையில் நம்மைவைத்துப்பார்க்கும் Empathyஐயும் கோருவது. அதற்குப் பரிசாக Peague நகர வீதிகளில் ஒரு இருண்ட வாழ்க்கையில் பங்கேற்றுக்கொண்டு திரும்பலாம்.

  1. The War of the Poor by Éric Vuillard:

கிருத்துவ இலக்கியம் என்பது மேலை இலக்கியத்தின் ஒரு பகுதி. முழுக்க Biblical reference கொண்ட மற்றுமொரு நாவல் இது. வரலாற்றில் வேறு இடங்களில் வேறு காலங்களில் நடந்தவற்றை சுருக்கி மொத்தமாக நம் காட்சிக்கு வைக்கிறார் எரிக். வரலாற்றில் சற்றே புனைவு கலந்து இன்றைக்கும் பொருத்திப் பார்க்கும் நூல் இது. கிருத்துவமதம் வளர்ந்ததன் காரணம் Adaptability மற்றும் நூற்றாண்டுகளாக சலிக்காத பிரச்சாரம். ஜெர்மனியில் லத்தீன் மொழியிலிருந்து ஜெர்மனிக்கு மாஸ் மாறியதும் ஜனங்கள் சாரிசாரியாக வருகிறார்கள். விவசாயிகளின் போரைப் பற்றிய நாவல் இது. அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததும், தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்ததும் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்படுகிறார்கள். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கால யந்திரத்தில் ஏறி இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் ஏதோ ஒரு தேசத்தில் நீங்கள் இறங்கினாலும் இதே காட்சிகளை நீங்கள் காணப்போவது மனிதவரலாற்றில் ஆறாத சோகம்.

கதைக்கருக்கள், இயற்பியல் சமன்பாடுகள், பணியாளர்களின் மனநிலை மாறுதல்கள் முதலிய Pure technical subjectsகளில் இருந்து வாய்மொழிக்கதைகள் போன்ற எளிதான கதைக்கருக்கள் வரை கலந்து இருக்கின்றன. மாயயதார்த்தம், சர்ரியல், பான்டஸி, நனவோடை போன்ற யுத்திகளிலிருந்து நான்லைனியர் வரை யுத்திகள் மாறுகின்றன. Nostalgia என்பது அநேக கதைகளில் வரும் அம்சமாக இருந்திருக்கிறது.எல்லா நூல்களிலுமே கதைசொல்லலும், மொழிநடையும் அற்புதமாக அமைந்திருப்பதற்கான பாதிப்பாராட்டு மொழிபெயர்ப்பாளர்களைச் சேர வேண்டும். திரில்லர் நாவலுக்குண்டான விறுவிறுப்பு நடையிலிருந்து இறுக்கமும் சிக்கலும் நிறைந்த மொழிநடைகளும் இந்த பதிமூன்று நாவல்களில் கலந்திருக்கின்றன. சில நாவல்கள், புனைவு என்று சொல்வதைவிட அல்புனைவின் கூறுகளையே அதிகம் கொண்டிருக்கின்றன, குறிப்பாக When We Cease To Understand The World மற்றும் An Inventory of Losses.

என்னுடைய பார்வையில் புக்கர் இன்டர்னேஷனல் ShortList கீழ்வருபவை. இலக்கியநுட்பம் மட்டுமே கணக்கில் கொண்டு செய்யப்பட்ட தேர்வு. நாளை, வெளிவரும் Booker Shortlistல் இருந்து இவை எவ்வளவு வேறுபடுகின்றன என்பதை அறிய ஆவல்.

  1. I Live in the Slums by Can Xue
  2. The Pear Field by Nana Ekvtimishvili:
  3. The Dangers of Smoking in Bed by Mariana Enríquez.
  4. The Perfect Nine: The Epic Gikuyu and Mumbi by Ngũgĩ wa Thiong’o:
  5. Summer Brother by Jaap Robben
  6. Minor Detail by Adania Shibli
  7. In Memory of Memory by Maria Stepanova

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s