டேவிட் பாரிஸில் பிறந்தவர். மேற்கு ஆப்பிரிக்காவில் வளர்ந்தவர். பிரான்ஸில் ஒரு பல்கலையில் பேராசிரியராக பணிபுரியும் இவர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கியத்தையும், பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் ஐரோப்பாவின் பிரதிநித்துவத்தையும் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறார். அவருடைய இரண்டாவது நாவலான இது புக்கர் நீண்ட பட்டியலின் பதிமூன்று நூல்களில் இதுவும் ஒன்று.
“அம்மா இன்று இறந்தாள்; அல்லது ஒருவேளை நேற்று. எனக்குத் தெரியாது” என்பது காம்யுவின் The Stranger நாவலின் முதல் வரி. இந்த நாவல் ” எனக்குத் தெரிகிறது; எனக்குப் புரிகிறது; நான் அவ்விதம் செய்திருக்கக்கூடாது” என்று தொடங்குகிறது. முதல்வரி மட்டும் Catchy இல்லை, என்ன செய்திருக்கக்கூடாது என்பது அடுத்த பத்தியில் வருகிறது. குடல் மற்றும் உள்ளுறுப்புகள் வெளியே சரிய, கழுத்தை அறுத்துக் கொன்று என்னுடைய வேதனையை நிறுத்திவிடு என்று மூன்றுமுறை கெஞ்சிய சகோதரனை மூன்று முறையும் மறுத்து துடிதுடிக்க நீண்டநேர வேதனையில் சாகும்படி செய்தது தான் அது. ஒரு செயல் அல்லது செயலின்மை எழுப்பும் குற்றஉணர்வே கதை.
இது ஒரு முதலாம்உலகப்போர் நாவல். எங்கோ மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கறுப்பர்கள், பிரான்சுக்கு ஆதரவாக யுத்தம் செய்து மடிகிறார்கள். போர்முனையில் சொந்த படையினரிடமும் கறுப்பர்களுக்கு அநீதி நடக்கிறது. கட்டளைக்கு இணங்கவில்லை என்று கைகள் பின்னால் கட்டப்பட்டு ஜெர்மானிய படைவீரர்களுக்குக் பலி கொடுக்கப்படுகிறார்கள்.
குற்றஉணர்வும், பழிவாங்குதலும் நாவல் முழுதும் ஒன்றாக பிரயாணம் செய்கின்றன. போர் ஒரு மனிதனின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி வெளிக்கொணர்கிறது என்பதை நாவல் எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லாமல் சொல்லிப்போகிறது. நிறவெறி, கறுப்பர்கள் Black magic செய்கிறார்கள் என்று பார்த்து பயப்படச் செய்வதும், அதைச் சொல்லியே அவர்களை கொலைசெய்வதும் பலமுறை நாம் கேள்விப்பட்ட விசயங்களே.
ஒரு கதைசொல்லியின் குரல் மூலம், போரின் கொடுமைகள், நிறவெறி, கறுப்பர்களை அடிமைப்படுத்தல் போன்ற ஏராளமான விசயங்கள் சொல்லப்படுகின்றன. கதைசொல்லியின் குடும்ப வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் அன்றைய வாழ்க்கைமுறை சில பக்கங்களிலேயே சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள் போன்ற பல அப்பாவிகள், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஆணவப் போர்களுக்குத் தங்கள் இரத்தத்தை எதற்காக சிந்துகிறோம் என்ற காரணம் கூடத்தெரியாது சிந்தினார்கள். அவர்களுக்கான குரல் இந்த நாவல் என்றும் சொல்லலாம். மிகச்சிறிய இந்த நாவலைப் படித்துப்பின் அசைபோடும் போதுதான் எத்தனை விசயங்களை இதில் சொல்லியிருக்கிறார் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. நாவலின் கடைசிப் பக்கங்களில் கவிதைவரிகள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. Disturbing yet worthy read.
https://www.amazon.in/dp/B08GFC64D6/ref=cm_sw_r_wa_apa_glc_B14VCY837SMANYMDMZAC