மரியானா ஸ்பானிஸ் மொழியில் இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு பயணநூல் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமாகிய இவர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் நாவல் Things We Lost in Fire நல்ல வரவேற்பைப் பெற்று இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. முதலில் ஸ்பானிஸ் மொழியில் எழுதப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. புக்கர் இன்டர்னேஷனல் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற பதிமூன்று நூல்களில் ஒன்று.
முதல் கதை பாட்டியின் சகோதரி கைக்குழந்தையாக இருந்த போது இறந்தவளை வீட்டில் புதைக்கிறார்கள். பலபல வருடங்கள் கழித்து அந்தக்குழந்தை பேத்தியை விட்டு விலக மாட்டேன் என்கிறது. ஸ்டீபன் கிங்கின் IT இதே போன்ற சம்பவம் தான். ஆனால் அவருடைய நாவலில் அது முழுக்கவே Horror. இலக்கியத்தில் அதே சம்பவம் ஒரு பரிதாப உணர்ச்சியையும் இனம்புரியா சோகத்தையும் ஏற்படுத்துகிறது. Inheritance of property என்பது போல் Inheritance of ghost. எலும்புகளைக் கைவிட்டு சென்றால் ஆவி சுற்றிக்கொண்டே இருக்குமா? வீட்டில் சிறுவயதில் இறந்த பெண்களுக்குக் கோடிவைத்து பூஜை செய்வதும், இலையில் கூப்பிடுமுன் வந்து பாயசத்தை மட்டும் சாப்பிட்டுச் சென்ற காகம் தான் என் அப்பா என்ற நம்பிக்கையும் மாயயதார்த்தம் நம்முடன் ஆதியிலிருந்தே இருந்ததன் சான்றுகள்.
மாதாந்திரக்குருதியை காப்பியில் கலந்தால் காதலன் பின்னால் வருவான் எனும் நம்பிக்கை, காதல் பொறாமையில் நாய்களை ஏவி காதலர்களைக் கொல்வது, முதியவரிடம் பறித்து நிறுத்திவைக்கப்பட்ட வண்டி குடியிருப்புப் பகுதியில் நரமாமிசம் சாப்பிடுமளவிற்கு வறுமையை உண்டு பண்ணுவது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று முக்கியமான பெண்கள் அவள் மேல் பில்லிசூனியத்தை ஏவிவிடுவது, நண்பர்களை சந்திக்க வரும் பெண் துயரமான, புதைக்கப்பட்ட கடந்த காலத்தின் உண்மையை எதிர்கொள்வது,
ஆவி துயரிலிருக்கும் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டுவது, மனித இதயம் பாலுணர்வு வெறியை ஏற்றுவது, தொலைந்த குழந்தைகள் காயங்களுடன் மறுநாள் தோன்றினாலும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இல்லை என மறுப்பது என்று இயல்பான வாழ்க்கையை விட்டு விலகிய கதைக்களங்கள்.
அநேகமாக எல்லாக் கதைகளிலுமே மாயயதார்த்தம் வருகிறது. மாய யதார்த்தம் கதைகளில் உண்மைச் சம்பவங்களுடன் கலந்து இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது, வாசிப்பனுபவத்தையும், சொல்லப்படும் விசயத்தின் அழுத்தத்தையும் கூட்டும். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் பொறுத்தவரை மாய யதார்த்தத்தை உண்மைசம்பவங்களை நோக்கி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே உபயோகிக்கிறார்கள். முரகாமியும் அவ்வாறே. மாய யதார்த்தத்தை மட்டும் கவனிப்பவர்களால் வாசிப்பனுபவத்தை முழுமையாகப் பெற முடியாது.
Horror எல்லாக்கதைகளிலும் வருகின்றது என்றாலும், லத்தீன் அமெரிக்க நாட்டுப்புறக்கதைகள், அவர்கள் கலாச்சாரம் கலந்து அந்த Horror தன்மையை Dilute செய்து விடுகிறது. அநேகமான கதைகளில் பெண்கள், பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் அந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும். Isabel Allendeயின் தரத்தைத் தொடும் தகுதிவாய்ந்த எழுத்தாளர் உருவாகி இருக்கிறார்.
https://www.amazon.in/dp/B08PCJK51Z/ref=cm_sw_r_wa_apa_glc_FES7B2Y2H1CGZEE9PXWQ